நூல்: நாகராஜாகோவில்
ஆசியர்: சிவ. விவேகானந்தன்
நாகவழிபாடு
புராணங்களிலும் இதிகாசங்களிலும் மதங்களிலும் பாம்புகளை இணைத்துக் கூறும் பழக்கம் உலகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. பெரும்பாலான பாம்புக் கதைகள் யாவும் ஆசிய நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து சென்றவையாகும். கோயில்களிலுள்ள சிற்பங்கள் மூலம் திராவிடர்களும் ஆரியர்களும் பல தலைகளைக் கொண்ட நாகத்தை வணங்குகிறார்கள் என்பதை நாம் படமெடுத்து நிற்கும் நாகம் | தெரிந்து கொள்கிறோம். விஷத் தினால் எதிரிகளைக் கொல்லுவதான தனி சக்தியைப் பாம்புகள் கொண்டிருப்பதால் அவற்றுக்கும் கடவுள் கொள்கைக்கும் தொடர்பு இருப்பதாகப் பழங்கால மக்கள் எண்ணினார்கள். எனவே பாம்புகளைத் தெய்வமாக வணங்கினார்கள்.
நாகவழிபாட்டின் தொடக்கம்
வெள்ளப் பெருக்கின் போது பொந்துகளிலிருந்து வெளிவரும் பாம்புகள் தவறுதலாக வீடுகளிலும் தோட்டங்களிலும் தஞ்ச மடைகின்றன. அதனால் அவை மனிதர்களைத் துன்புறுத்தக் கூடும் என்ற எண்ணத்தில் பாம்புகளை மக்கள் வணங்குகின்றனர். மனித சமுதாயம் ஓரளவு நாகரிகம் அடையத் தொடங்கிய காலத்திலிருந்தே சூரியனும் பாம்புகளும் பல நாடுகளில் பலவித சடங்குகளால் வழிபடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வேத காலத்திற்கு முன்பாகவே பாம்பு வழிபாடு இருந்தது. பழங்கால இந்தியாவில் வளர்ச்சியடைந்த நாகரிகம் கொண்ட நாகர்கள் என்ற இனம் வாழ்ந்து வந்தது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இந்தியாவில் விரிந்து பரவியிருந்த நாகரிகத்துக்குரிய நாகர்கள் மத்தியில் பாம்பு வழிபாடு சிறந்து விளங்கியது என்பதற்குச் சிந்துவெளி நாகரிகம் சிறந்த சான்று தருகிறது. நாகர்களின் நாகரிகம் இந்து மதத்திற்குள் இணைந்த பின் இந்தோ-ஆரியர்கள் பல பாம்புத் தெய்வங்களைத் தங்கள் கடவுள்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
முடிவற்றத் தன்மையைக் குறிக்கும் ஆயிரம்தலை கொண்ட சேஷநாகம் (ஆதிசேஷன்) விஷ்ணுவின் படுக்கையாகும். ஓர் அண்டத்தின் அழிவுக்கும் மற்றொன்றின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் விஷ்ணு இந்தப் படுக்கையில்தான் சாய்ந்து படுத்திருக்கிறார். பாம்புகள் தோலை உரிக்கும் வழக்கம் உடையதால் பாம்புகள் அமரத் தன்மை உடையன என இந்துக்கள் நம்புகின்றனர். பாம்பும் மனிதனும் எதிர்க் கெதிராய் தோன்றிய காலம் தொட்டு பயமுறுத்துகின்ற அமரத்துவம் வாய்ந்ததான நாகப்பாம்பு தனக்கே உரிய சிறப்பான கவர்ச்சியுடன் விளங்கி வருகின்றது. நாகப்பாம்பின் குணநலன்களை வெளிப்படுத்த அதைச் சுற்றி பல கதைகள் புனையப்பட்டு தெய்வத் தன்மையுடன் கற்பிக்கப் பட்டன. பெரும்பாலான கதைகள் சிவன், விஷ்ணு, சுப்பிரமணியன் முதலிய கடவுளர்களோடு தொடர்புடையன. பெரும்பாலான கதைகள் இளம் வயது கிருஷ்ணனைப் பற்றியனவாகும். இடையர்குலத் தோழர்களோடு பந்து விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது பந்து யமுனை நதியில் எவ்வாறு விழுந்தது? எவ்வாறு
கிருஷ்ணர் காளிங்கன் என்னும் பாம்பை வென்றார். காளிங்கனை வெளியேறச் செய்து எவ்வாறு விஷ நீரை அருந்துவதிலிருந்து மக்களைப் பதுகாத்தார்? என்பதை இக்கதைகள் கூறிச் செல்கின்றன. பாம்புகள் சிவனால் நேசிக்கப்பட்டன; ஆசிர்வதிக்கப்பட்டன என்பது பழைய மத நம்பிக்கையாகும். எனவேதான் சிவன் பாம்பைக் கழுத்தணியாக அணிந்துள்ளார் என நம்பப் படுகிறது. சிவன் அருளை விரும்பும் பக்தர்களால் சிவன் வழிபடப்படும் போது பாம்பும் வழிபடப்படுகின்றது.
நாகவழிபாடு சூரிய வழிபாடு போலவே உலகம் முழுமையும் பரவியிருந்தது. இவ்வழிபாட்டின் தொடக்க காலம் குறித்து கூறுவதற்கு இயலவில்லை. உலகின் பல பாகங்களில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள் விலங்கு பறவை முதலியவற்றின் ஏதோ ஒன்றைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். மயூரர், நாகர், லம்புக்கர்ணர் (லம்பு என்பது ஆடு), கருடர் முதலிய பெயர்கள் இதற்குச் சான்றாகும். இக் குலங்களுக்குரிய விலங்குகளும் பறவைகளும் அந்தந்த மக்கள் கூட்டத்தினரால் புனிதமுடையனவாகக் கருதப்பட்டன. ஆகவே ஒவ்வொரு கூட்டத்தினரும் ஒவ்வொரு கொடியை உடையவர்களாய் இருந்தனர். ஆதி மக்கள் மொழியை ஓவியமாக வரைந்தனர். கண்ணுக்குத் தெரியும் பருப்பொருளை விளக்க அவ்வப் பொருள்களின் வடிவங்கள் வரையப் பட்டன. கண்ணுக்குப் புலப்படாத வீரம், கோபம், தந்திரம், அறிவு முதலிய மனதில் தோன்றும் பொருள்களை விளக்க அந்தந்தக் குணங்கள் அமைந்த உயிர்களின் வடிவங்கள் வரையப்பட்டன. விவேக மின்மைக்கு ஈ யின் உருவமும் விடாமுயற்சிக்குத் தேனீயின் உருவமும் வெற்றிக்குக் கருடனும் மற்றும் பிற குணங்களுக்குப் பிற உயிர்களின் உருவங்களும் அறிகுறிகளாக விளங்கின. அக்காலத்தவர் குணநலன்களை உணர்த்தும் இரண்டு அல்லது பலவற்றின் உறுப்புகளை ஒன்றாகக் கலந்து ஓர் உருவம் அமைத்து அதை ஒரு பொருளுக்கு அறிகுறியாக வழங்கிவந்தார்கள். இத்தகைய கருத்தமைப்பு ஓவியங்களிலிருந்தே, பண்டைக் காலத்து மக்களின் பழைய தெய்வங்களும் முனிவர்களும் விலங்குகள், பாம்புகள் முதலியவற்றின் உறுப்புகளை உடையவர்களாகச் சித்திரிக்கப் படுகின்றனர் எனலாம். பண்டைக்கால மக்கள் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் தம்முள் கா காணப்பட்ட முக்கிய தன்மை ஒன்றை விளக்க ஒவ்வோர் அடையாளமாகிய ஓவியத்தை வழங்கியிருக்கலாம். அவை பிற்காலத்தில் அம்மக்களால் வழிபாட்டுக்குரியனவாக ஆகியிருக்கலாம். நாக வழிபாட்டின் தொடக்கமும் இப்படியே இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
இந்தியாவில் நாகவழிபாடு
இந்தியாவில் படமெடுத்து நிற்கும் நாகம் சூரிய வணக்கத்தோடு தொடர்பு பெற்று வருகின்றது. அது சூரியவம்சத்திலிருந்து தோன்றியவர்கள் எனக் கூறிக் கொள்ளும் மக்கள் கூட்டத்தின் குலச் சின்னமாகும். நாக குலத்தலைவர் மரணத்திற்குப் பின் சூரிய கடவுளாகவோ பிற தெய்வங்களாகவோ வணங்கப் படுகின்றனர். அவர்களின் உருவச் சிலைகளைப் பாம்புகளின் விரிந்த படங்கள் கவிந்து நிற்கின்றன.
சூரியகுல மன்னர்கள் சூரியக் கடவுளாகவே வாழ்க்கைக் காலத்தில் மக்களால் வழிபடப் பட்டனர். எங்கெங்குச் சூரிய வணக்கம் காணப்பட்டதோ அங்கெல்லாம் படமுடைய பாம்பு புனிதமுடையதாகக் கருதப்பட்டது. இந்தியாவைப் போலவே சூரியனை வழிபடும் நாடுகளில் எல்லாம் நாகம் வழிபடப்பட்டது. சூரிய குலத்தவர்களிடமிருந்தே இவ்வழிபாடுகள் பரந்து நாலா திசைகளுக்கும் சென்றிருத்தல் வேண்டும். உலகம் முழுவதிலும் நாகம் புனிதமுடையதாகக் கொள்ளப்பட்டது. ஆமையும் இவ்வாறே புனிதமாகக் கருதப்பட்டது.
ஒரிசாவில் சில மன்னர்களின் முத்திரைகளில் இராஜ முத்திரையின் நடுவில் படமெடுத்த நாகத்தையும் அதன் கீழே மனித முகத்தையும் காணலாம். சின்னநாகபுரி மன்னர்கள் தாங்கள் புண்டரீகா என்ற நாக மன்னர்களின் பரம்பரையில் தோன்றியவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். வங்காளத்தில் உள்ள காயஸ்தா இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருசில வகுப்பார் தாங்கள் பாம்பரசர் வகுப்பினர் என்றும்; வாசுகியிலிருந்து தோன்றியவர்கள் என்றும் கருதுகின்றனர்.
சாம்பா, காங்ரா முதலிய காஷ்மீரப் பள்ளத்தாக்குகளிலுள்ள கோவில்களில் சேஷநாகம், பசக் நாகம், டாகட் நாகம், பிரிதம் நாகம், சாபிர் நாகம், கார்க்கோடக நாகம், கார்ஷ் நாகம், இந்துரு நாகம், சாந்தன் நாகம், முதலிய நாகங்கள் மனித உருவில் வணங்கப்படுகின்றன. மனித உரு ஒவ்வொன்றின்மேலும் முத்தலை நாகம் அமர்ந்துள்ளது. காஷ்மீரின் லலிதாதித்திய மன்னர் கார்க்கோட நாக வம்சத்தின் வழி வந்தவர்கள் என்று கருதுகின்றனர். சில இமயமலை மொழிகளில் காணப்படும் கிரா அல்லது கிரி என்ற சொல்லுக்குப் பாம்பு என்பது பொருள். இப்பெயர் இராஜ தரங்கிணியிலும் காணப்படுகிறது.
சௌராஷ்டிரா மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பாம்புக் கோயில்கள் உள்ளன. அதனைச் செர்மாலியா என்பர். தமிழகத்தில் நாகப்பாம்பைத் தெய்வமாக வணங்குகின்றனர். மைசூரிலும் நாகப் பாம்பைத் தெய்வமாக எண்ணி வணங்குகின்றனர்.
பெங்களூரில் ஒவ்வொரு தோப்பிலும் நாகப் பாம்பின் உருவத்தைக் கொண்ட கற்சிலைகளை வரிசையாக வைத்துள்ளனர். குழந்தை இல்லாதவர்கள் மூன்று கற்சிலைகளை வீட்டில் வழக்கமாகப் படைத்து வைத்திருப்பார்கள். தங்களுக்குக் குழந்தை பிறந்த பின் அம்மூன்று சிலைகளையும் அரசமரத்தின் அடியில் வைத்துப் பூசை செய்வார்கள். அதனோடு ஒரு வேப்ப மரத்தையும் வளர்ப்பதுண்டு. இவ்விரு மரங்களுக்கும் திருக்கல்யாணம் செய்வது கூட உண்டு மூன்று சிலைகளில் நடுப்பகுதியில் உள்ள சிலையில் சில உருவங்கள் பொறிக்கப் பட்டிருக்கும். அதில் மீனாட்சி உருவமும் உடலின் கீழ்ப் பகுதியில் செதில்களும் வாலும் காணப்படும். அவை பாம்பு அல்லது மீனின் உருவம் ஆகும். இதைப் பார்வதியின் அவதாரம் என்பர். இச் சிலையின் ஒரு புறம் விஷ்ணு பகவான் அதாவது அனந்த சேஷன் ஐந்து தலை நாகத்தின் மீது படுத்திருப்பது போன்றும் மற்றொரு புறம் இருபாம்புகள் பிணைந்திருப்பது போன்றும் அமைந்திருக்கும். இது சூரியனின் அடையாளம் என்பர். மேலும் லிங்க யோனியும் காணப்படும். இரு பால்களின் இன உறுப்புகள் உயிர் உண்டாக்கு தலைக் குறித்து இணைந்தது போல அமைக்கப் பட்டிருக்கும்.
இந்துமதக் கோட்பாட்டின் படி மும்மூர்த்திகளின் உருவத்திலும் பாம்பு அடையாளத்தைக் காணலாம். படைத்தல், காத்தல், ஒடுக்கல், என்பவற்றைத் தொழிலாகக் கொண்ட இறைவர்களிடம் பாம்பு காணப்படுவதால் மக்கள் பாம்பை வணங்குகிறார்கள் என்று கூறலாம். இவ்வாறே இந்தியாவின் பழமையான மதங்களான சமணத்திலும் பௌத்தத்திலும் பாம்பு நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன. புத்தர் தவமிருக்கும் போது பெரும் நாகங்களே அவரைக் காத்தன. சமணத் தீர்த்தங்கரரில் இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவ நாதருடன் பாம்பு தொடர்பு படுத்தப்படுகிறது. இந்து மதத்தின் படி நாகர் இனத்தைப் பாம்பிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்துக் கூறுவதுண்டு. அவர்களுக்குப் பாம்பு உருவில் அனந்தன் அல்லது வாசுகி என்ற நாகேந்திரன் மன்னனாக இருந்தான் என்று கூறுவார்கள். இவர்கள் வாழ்ந்த உலகத்திற்குப் போகவதி என்பது தலைநகரமாக இருந்தது என்றும் கூறுவதுண்டு. எனவே அவர்கள் நாகப் பாம்பை வணங்குகின்றார்கள் என்பது புலனாகிறகிறது.
பாரதத்தில் சொல்லப்படும் கந்துருவின் புதல்வர்களாகிய நாகர் மலையாளக் கரையில் சென்று குடியேறினர். இங்கு இலவணன் என்னும் நாகன் ஆட்சி புரிந்தான். சேரர் நாடு நாகர்நாடு எனப்பட்டது. சாரை என்பதே சேர என வந்தது என்பர். சேரநாட்டில் ஒவ்வொரு நாயர் இல்லங்களின் பின்புறமுள்ள சர்ப்பக் காவுகளில் நாகதெய்வங்கள் வழிபடப் படுகின்றன.
சிவன் பாம்பைக் கழுத்தில் அணிந்துகொண்டு கோபத்துடன் நடனமாடி உலகை அழிக்கும் காட்சியாக இருக்கும் நிலை இருப்பதால், அப்பாம்பையே இறப்பிற்கு உருவமாகக் கூறுவதுண்டு.
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
Reviews
There are no reviews yet.