Description
சென்னை நகரத்தைப் பற்றிப் பலவிதமான பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. வரலாறு, சமூகம், உள்கட்டமைப்பு, பண்பாடு எனப் பல்வேறு கோணங்களில் பலரும் சென்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் தனித்து நிற்பது அசோகமித்திரனின் பதிவு. தமிழ் எழுத்தாளர்களில் நகர்ப்புற எழுத்தாளர்கள் என்னும் அரிய வகையைச் சேர்ந்த அசோகமித்திரன் அரை நூற்றாண்டுக் காலமாகச் சென்னை நகருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அசோகமித்திரனின் நுட்பமான பார்வையில் சென்னை நகரின் புறம் மட்டுமன்றி அகமும் துலங்குகிறது. சென்னை நகரின் இடங்களையும் அங்கு நிலவும் வாழ்வையும் புழங்கும் மனிதர்களையும் தனக்கே உரிய முறையில் அசோகமித்திரன் அறிமுகப்படுத்துகிறார். தீர்மானங்களையோ தீர்ப்புகளையோ முன்வைக்காத அசோகமித்திரனின் எழுத்து சென்னை நகரம் பற்றிய பல புதிய தரிசனங்களைக் கொண்டிருக்கிறது. சென்னையின் இயல்பையும் அதன் மாற்றங்களையும் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் துணைபுரியும்.