கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மா.பரமசிவன் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர். 2011 முதல் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், பழந்தமிழ் இலக்கியம், மரபிலக்கணம், பதிப்பு, உரை, தொல்லியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். அகநானூற்று
உரைவேறுபாட்டுக் களஞ்சியம் இவர்தம் உழைப்பிற்குச் சான்று பகர்வதாகும். 2009 முதல் ஆய்வுப் பங்களிப்புச் செய்துவரும் இவர் தற்போது வரை 10 ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்;
4 நூல்களைப் பதிப்பித்து உள்ளார்; 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். சமூக வரலாற்றுப் பின்புலத்தில் ஆய்வு செய்யும் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளர்களுள் இவரும் ஒருவர்.
தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை தொல்லியல் ஆய்வுகளுக்குச் சங்க இலக்கியங்கள் மிக முக்கியமான இட்டு நிரப்பும் தரவுகளைக் கொண்டு உள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை… உரையாசிரியர்கள் வரை இந்தப் போக்கைக் காணலாம். ஆய்வறிஞர்கள் ர.பூங்குன்றன், கா.ராஜன் உள்ளிட்டோர் சங்க இலக்கியச் சான்றுகளை எடுத்தாண்டு தொல்லியல் ஆய்வுகளின் புரிதலை வளப்படுத்தி இருக்கிறார்கள். இந்நூலின் ஆசிரியர்கள் முனைவர் பரமசிவனும், முனைவர் கோவிந்தராஜும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மிக நேர்த்தியாக நெசவு செய்திருக்கின்றனர்.
பேரா. பக்தவத்சல பாரதி
ஊர்ப் பெயராய்வு, சமூகவியல் ஆய்வு, பண்பாட்டு மானிடவியல் ஆய்வு, தமிழ்ச் செவ்வியல் ஆய்வு, தொல் எழுத்தியல் ஆய்வு, தொல் பொருள் ஆய்வு எனப் பல்துறைப்பட்ட ஆய்வுகளில் இத்தரவுகளை ஒப்புமைப்படுத்தி ஆய்வு செய்துள்ளனர். இந்திய வரலாற்றெழுதுதலில் தொல்லியல் துறை அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தும் என்பதில் எவ்வித ஐயமும் இதுபோன்ற நூல்கள் அதற்குப் பெருந்துணை புரியும்.