தமிழ்நாட்டில் செங்கம், தருமபுரி, தேன்கனிக் கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்துதான் பல நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குக் கிடைத்துள்ள பெருமளவு நடுகற்கள் இந்தப் பகுதிகளில் ஆட்சிபுரிந்த அதியமான் உள்ளிட்ட அரசர்கள் காலத்திற்கு உரியனவாக” அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. நடுகற்கள் குறித்த சிந்தனை, பண்டைய தமிழர்களிடம் மேலோங்கி இருந்துள்ள சான்றுகளைச் செவ்வியல் இலக்கியப் பதிவுகள் புலப்படுத்துகின்றன.
இறந்தவர்களின் நினைவாக நடப்படும் நடுகல்லை ‘வீரக்கல்’ என்றும் அழைத்துள்ளனர். நடுகற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், பண்பாடு, தேசம் சார்ந்தவர்களுக்கு மட்டும் உரிய வழக்கமாக இருந்திருக்கவில்லை; உலகம் தழுவிய நிலையில் இவ்வழக்கம் இருந்துவந்துள்ளது. இறந்தவர் அனைவருக்கும் நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இருந்தாலும், வீர மரணம் அடைந்தவர்களின் நடுகற்களுக்கு மட்டுமே பெருமதிப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படியான நடுகற்களையே மக்கள் வணங்கி வழிபட்டு வந்துள்ளனர்.
இந்த வரலாற்றுப் பின்புலங்களையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ‘பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும்’ என்ற இந்த ஆய்வு நூல் அமையப்பெற்றுள்ளது. நடுகல் கல்வெட்டுகளைப் பண்டைய தமிழ் இலக்கிய மரபுடன் ஒப்பாய்வு செய்வது, நடுகல் கல்வெட்டு மொழி பற்றி ஆய்வு செய்வது, பண்டைய நடுகற்களைப் பிற்கால நடுகற்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வது முதலான ஆய்வு நோக்கங்களைக் கொண்டு இந்நூலின் பொருண்மை அமையப்பெற்றுள்ளமை சிறப்புக்குரியதாகும்.