பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் – நா. பார்த்தசாரதி

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் ஓரிடத்தே தங்கி வாழப் பழகிப் பயிர்த் தொழில் செய்யத் தொடங்கிய மனிதன் வீடுகள் கட்டினான். பல வீடுகள் கட்டப்பட்ட போது, ஒரு வீட்டுக்கும் மற்ற வீடுகளுக்கும் இடையே தகராறுகள் எழாமல், போக வரப் பொதுவான வீதி தேவைப்பட்டது. நடுவே சாவடி,அம்பலம்,கோயில் போன்ற பொது இடங்களுக்கு நிலம் ஒதுக்கினார்கள்.

வீடுகளின் வரிசைக்கு நடுவே ஆறு போல் கிடைத்த அகன்ற நெடிய இடம் தெரு ஆயிற்று. இவ்வாறு பலப்பல தெருக்கள் ஊரில் உண்டாயின. ஊர்கள் ஏற்பட, ஏற்பட முந்திய ஊரிலே நேர்ந்த பொது வசதிக் குறைகள் அடுத்த ஊரிலே நேராமல், வீடுகளும், வீதிகளும், பொது இடங்களும் பொருத்தமாகக் கட்டப்பட்டன. ஊரின் பொது வசதிகள் கவனிக்கப்பட்டன. கட்டப்பட்ட முறையும், திட்டமும் (Planning) நாளுக்கு நாள் மெருகேறின. இந்த மெருகும், அநுபவமும் நகரங்களை அமைப்புதற்குப் பெரிதும் பயன் பட்டன. நகரங்களை விட அதிகமான அக்கறை பின்பு, கோநகரங்களின் (இராசதானி) அமைப்பில் செலுத்தப்பட்டது.

இவ்வாறு நகரமைப்பு (Town Planning or urban Planning) என்பது ஒரு கலையாகவே உருவாயிற்று. பழந் தமிழர்களைப் பொறுத்தவரை கட்டடக் கலையைப் போலவே இக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

புகழ் பெற்ற பூம்புகார், மதுரை, காஞ்சி போன்ற கோநகரங்களே இதற்குச் சான்றாகும். நகரமைப்புக் கண்ணோட்டத்திலும், பண்பாட்டுக் கண்ணோட்டத்திலும்; பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் இந்நகரங்கள் குறைவற அமைந்திருந்தன. நகரமைப்பு, ஊரமைப்புக் கலைகளில் பழந்தமிழர் சிறந்திருந்தனர் என்பதைப் பற்றிப் பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளவை ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன.

தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்ற உண்மையை உலகினர் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். “சீனம், மிசிரம், யவனம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசிக் கலை ஞானம் படைத் தொழில் வாணிகமும் மிக நன்று வளர்ந்த தமிழ்நாடு”. கட்டிடக் கலை, இயந்திரக் கலை, நீர்ப்பாசனக் கலை, நகரமைப்புக் கலை, துறைமுக வளர்ச்சி, கப்பல் கட்டும் கலை, சிற்ப வேலைப்பாடுகள் முதலிய பல வகையான பொறியியல் கலைகளின் சிறப்புகளைப் பழந்தமிழ் மக்கள் பெற்றிருந்தனர்1 என்று. பொறியியல் வல்லுநரான அறிஞர் டி. முத்தையன் கூறுகிறார்.

“முதல் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க யாத்திரிகர்கள் இருவருள் ஒருவரான தாலமி காவிரிப்பூம்பட்டின நகரமைப்பின் சிறப்பைப் பாராட்டிக் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்”.