வரலாறு என்பது ஏதோ பாடப் புத்தகங்களில் படித்து விட்டு மறந்து போகிற விஷயம் இல்லை. நம் மூதாதையர்களின் அனுபவ அறிவை எண்ணி வியக்கவும், அவர்கள் படைத்த சாதனைகளை அறிந்து பெருமிதம் கொள்ளவும், அவர்கள் சந்தித்த துயரங்களை நினைத்து வேதனை கொள்ளவும் நாம் வரலாறு பயில வேண்டும். அப்போதுதான் அவர்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கும் அறிவுப் பொக்கிஷங்களை அனுபவிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவோம். வரலாறு என்பது தனியான ஒரு பாடம் அல்ல. அது நம் வாழ்வின் அங்கம். எல்லா விஷயங்களுக்கும், எல்லா பிரதேசங்களுக்கும், எல்லா மனிதர்களுக்கும் பிரத்யேக வரலாறு உண்டு. ஆனால் பதிவு செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் குறைவு. இந்த விஷயத்தில்தான் ஐரோப்பியர்களிடமிருந்து நாம் வித்தியாசப்படுகிறோம்.
கி.மு காலத்திய ரோம், கிரேக்க வரலாறுகள் உலகத்துக்கே தெரியும். அப்போதே நம் மண்ணில் சாம்ராஜ்ஜியங்கள் இருந்தன. ஆனால் அவற்றின் வரலாற்றை நாம் இலக்கியங்களில்தான் தேட வேண்டியிருக்கிறது. அதனால் நம் விழுமிய பாரம்பரியம் உலகுக்குத் தெரியாமல் போனது. மிகச் சிறிய தொட்டிக்குள்ளேயே வேர் பரப்பி மரத்துக்கு உண்டான அம்சங்களுடன் வளர்ந்து நிற்பவை போன்சாய் மரங்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மல்லிகைப் பூவின் நறுமணத்துக்கு தனி இடம் உண்டு. அதுபோல, வங்கக் கடலோரத்தில் உருவத்தை சுருக்கிக் கொண்டு அமைந்திருந்தாலும் புதுச்சேரிக்கென தனிச் சிறப்பும் வரலாறும் உண்டு. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் புதுவை கடந்து வந்த பாதை நெடுகிலும் போர்கள், உடன்படிக்கைகள், ஆக்கிரமிப்புகள், விடுதலைப் போராட்டங்கள் என இந்த சிறிய பிரதேசத்துக்கும் பெரிய சரித்திரம் உண்டு. அந்த சரித்திரத்தின் பக்கங்களை அரிதான புகைப்படங்களோடு தருகிறது இந்த நூல்