பிரசங்கங்களை மொழிபெயர்க்கிறபோது துஸிடிடீஸின் கருத்தையே முக்கியமாகத் தழுவிக்கொண்டு போயிருக்கிறேன். பெலொப்போலேசிய யுத்தத்தின் காரணங்கள் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன. விரிவாக அறிந்துகொள்ள விழைவோர், ’கிரீஸ் வாழ்ந்த வரலாறு’ என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன். கிரீஸின் அரசியல் போக்கு, எண்ணப்போக்கு முதலியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமானால், பிளேட்டோவின் ’அரசியல்’, ’கிரீஸ் வாழ்ந்த வரலாறு’, ’ராஜதந்திர-யுத்தகனப் பிரசங்கங்கள்’ என்ற இந்த நூல், அரிடாட்டல் எழுதிய, ’அரச நீதி’ ஆகிய நான்கு நூல்களையும், ’சமுதாயச் சிற்பிகள்’ என்ற நூலின் முதல் மூன்று அத்தியாயங்களையும் தொடர்ந்தாற்போல் படித்தல் நல்லது. கிரேக்க நாட்டு வரலாற்றைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் தமிழன்பர்களிடையே அதிகரித்திருக்கிறது. பேச்சுக்கலையில் தேர்ச்சி பெற விழைவோர் அனைவரும் இந்த நூலைப் பன்முறை படித்தல் அவசியம்.
வெ.சாமிநாத சர்மா