பல இதழ்களில் வெவ்வேறு கால இடைவெளியில் வெளியான 30 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தீண்டாமை, கொத்தடிமை, கலப்பு மணம் உள்ளிட்ட பிரச்னைகளையும், தீர்வுகளையும் அளித்துள்ளார் நூலாசிரியர்.
அகநானூற்றில் சடங்குகள், நம்பிக்கைகள், பழந்தமிழ் பாவை வழிபாடு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக் கூடாது என உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருந்தும், தொடர்வதை வேதனையுடன் பதிவு செய்கிறது ‘தீண்டா மலம்-தீண்டத்தகாத மனிதன்’ என்ற கட்டுரை. ஜாதி, இன பேதமற்ற சமத்துவ சமுதாயம் என்றுதான் அமையுமோ எனக் கேள்வி எழுப்புகிறது ‘கலப்பு மணம்’ என்ற தலைப்பிலான கட்டுரை.
மன்னர் கால சிறப்புகளையே அறியப்பட்ட நிலையில், அடிமை முறையும் இருந்ததை ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது ‘பறை அடிமை’ எனும் கட்டுரை.
எல்லா மதமுமே தன் போதனைகளில் அன்பையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தினாலும், அது தனது கருத்தியலுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களை ஒடுக்கும் அமைப்பாகவே செயல்படுகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது ‘நமக்கு மதம் பிடித்திருக்கிறதா?’ என்ற கட்டுரை.
‘நாய் தேவனாயிற்று’ கட்டுரை சுவாரசியமான தகவல்களைக் கொண்டுள்ளது. ஞாயில் என்பது மதில் அரண் காத்தல் என்ற சொல்லுடன் தொடர்புடையது. அந்த ஞாயில் என்ற சொல்லில் இருந்தே நாய் என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்கிற தகவல் புதியது. சிறு தெய்வமான சுடலைமாடசாமி பற்றிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள கணியான் ஆட்டம், வில்லுப்பாட்டு குறித்த விளக்கங்கள் அருமை.