முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது. தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்களில் 81 இடங்களில் விருந்து என்ற சொல் வருகிறது. உலகளாவிய ‘உணவு விலக்கு’ தமிழர்களிடமும் உண்டு; சைவ/அசைவ உணவு வகைகளைச் சமைக்க தனித் தனிச் சட்டிகளைப் பயன்படுத்தினர். இப்படியாகப் பல விஷயங்களைக் கவனப்படுத்துகிறார் பக்தவத்சல பாரதி. சங்கப் பண்பாட்டின் வரலாற்றை அறிவதில் இந்நூலின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
மலை சார்ந்த உணவாதாரம்
திணை
மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சி இயற்கைக்கும் பண்பாட்டுக்கும் பொதுவானது; இரண்டுக்கும் பாலம் அமைக்கிறது. இந்தப் பாலத்தின் ஊடாகத் தாவரங்கள். விலங்குகள், மனிதர்கள் யாவும் ஜீவனம் செய்கின்றன. இந்த ஜீவனத்தில் முதற்பொருள், கருப்பொருள்,உரிப்பொருள் ஆகியவை ஒன்றை யொன்று சார்ந்து தொழிற்படுகின்றன. பண்பாட்டின் ஒரு பகுதியாகிய உணவும் இவை சார்ந்தே அர்த்தப்படுகின்றது.
குறிஞ்சி என்பது பொதுப்பெயர். பண்டைய தமிழ்க் கவிதைகளைத் ‘திணைக் கவிதை’களாக வரையறுத்தபோது அன்றைய தொகுப்பாளர்கள் நிர்ணயித்த சொல்லாட்சி இது. இந்தக் குறிஞ்சி என்பது பல்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்பட்டது. அவற்றில் ‘வன்புலம்’, ‘புன்புலம்’ இரண்டும் பெரு வழக்காக இருந்தன.