வள்ளுவர் சொல்லும் ஆமைகள் எனச் சொல்கின்றனரே; சில வற்றை: அவை ஆமைகளா?
கள்ளாமை, கொல்லாமை, நிலையாமை முதலியவற்றில் ‘ஆமை’ என வருவது கொண்டு சுவையாகச் சொல்வதாகத் தாம் கருதிக் கொண்டு சொல்கின்றனர். அவை, ஆமைகள் அல்ல.
‘ஆ’ எதிர்மறை அல்லது மறுப்பது.
‘மை’ சொல்ஈறு அல்லது சொல்லிறுதி
இவ்விரண்டும் சேரும்போது ஆமை என ஒலிக்கிறதே அன்றி ஆமைகள் அல்ல.களவு செய்யாமை, கொலை செய்யாமை, நிலையில்லாமை என்பன போலப் பொருள் தருவனவாம். அடக்கமுடைமை அதிகாரத்தில் ஆமை என்னும் உயிரி பற்றிக் கூறியுள்ளார். அது.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்பது.
மேலே உள்ள ஓர் ஓட்டுள் நான்கு கால்களையும் தலையை யும் இழுத்துக் கொள்ளும் ஆமைபோல் ஐந்து பொறிகளையும் அடக்க வேண்டிய பொழுதில் அடக்கிக் கொள்ள வேண்டும் என்று உயர்ந்த உவமையாக ஆமையை எடுத்தாள்கிறார் வள்ளுவர்.
அப்படி இளமையிலேயே காத்தால் வரும் நாளெல்லாம். அக்காவல் மேலும் மேலும் சிறந்தோங்கும். அடக்கம், அழியா நிலையாம் அமர நிலையையும் தரும் என்கிறார்.அவற்றை ஆமை என்பது அறியாமைப் பாற்பட்டதாம்.