வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் திரிபு மொழியான பிராகிருத மொழி பற்றியும் அதன் இலக்கியங்கள் பற்றியும் தெளிவாகக் கூறும் முதல் தமிழ் நூலான தமிழும் பிராகிருதமும், இந்திய மொழிகளில் உள்ள பேரிலக்கியங்களுக்கு இடையிலான ஒப்பீடுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம், வடமொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் தோன்றிய இலக்கியம், தத்துவம், கலை சார்ந்த பல நூல்களை இயற்றியவர்கள் தமிழர்களே என்பதை எடுத்துக்காட்டும் விதமாக எழுதப்பட்ட வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிலை ஆய்வாளராக செயல்பட்ட காலத்தில் அன்றைய துணை வேந்தர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் அனுமதித்தபடி ஆந்திராவில் கள ஆய்வு மேற்கொண்டும் பல்வேறு தெலுங்கு இலக்கியங்களை ஆராய்ந்தும் எழுதப்பட்ட தமிழக-ஆந்திர வைணவ தொடர்புகள் ஆகிய அவரின் ஆய்வு நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்,
தமிழக மொழியியல் ஆளுமைகள் வரிசையில் தெ.பொ.மீ., வையாபுரிப்புள்ளை, அகத்தியலிங்கம், பேரா.இராம.சுந்தரம், செ.வை.சண்முகம் போன்றவர்களின் பட்டியலில் ஜகந்நாத ராஜாவும் இடம்பெறத்தக்கவர். ஆனால் அப்பட்டியலில் உள்ள மற்றவர்கள் தமிழகத்தின் புகழ்பூத்த கல்வி நிலையங்களின் ஆய்வுச் சூழலில் செயல்பட்டவர்கள். இவரோ ராஜபாளையம் என்ற சிறு நகரத்தில் பிறந்து ஆரம்பக் கல்வியோடு தன் முறைசார் கல்வியை நிறுத்திக் கொண்டு தன் சுய விருப்பத்தின் காரணமாகவும் தேடலின் விளைவாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்மொழிகளையும் சம்ஸ்க்ருதம், பாலி, பிராகிருதம், இந்தி போன்ற வடமொழிகளோடு ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தவர். கற்றுத் தேர்தல் என்பது வெறும் பாராட்டு மொழியல்ல. ஏறத்தாழ இம்மொழிகள் அனைத்தையும் பேச எழுத மட்டுமல்லாமல் அதன் இலக்கணங்களையும் அறிந்து செய்யுளியற்றும் அளவு அம்மொழிகளில் புலமை பெற்றிருந்த தன்மையைக் குறிக்கும். குறிப்பாக பாலி, – பிராகிருதம் ஆகிய மொழிகளை அறிந்த கடைசித் தமிழராக அவர் பார்க்கப்படுகிறார்