கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ – கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் சங்க காலம்தொட்டே மதங்கள் இருந்துவருகின்றன என்பதைச் சொல்கின்றன.
தமிழகத்தின் மூவேந்தர்களும் பல்லவ மன்னர்களும், வைணவத்தில் இருந்து சைவ மதத்துக்கும் சைவ மதத்தில் இருந்து சமண மதத்துக்கும் மாறியது பற்றிய சான்றுகளெல்லாம் வரலாற்றில் பதிந்து கிடக்கின்றன. இந்த நூல் சங்க காலம் முதல் சாம்ராஜ்ஜிய காலம் வரையிலான மதங்களின் தோற்றம், வளர்ச்சி, மன்னர்களும் மக்களும் மதங்கள் மாறியது பற்றிக் கூறுகிறது. சைவ, வைணவ, சமண மதங்களின் வளர்ச்சி பற்றியும் தற்போது வழக்கில் இல்லாத ஆசீவகம் மதம் பற்றியும் மற்றும் புத்த மதத்தால் தமிழகத்தில் ஏன் வளர முடியவில்லை என்பது பற்றியும் தர்க்க ரீதியிலான கருத்துகளை எடுத்துச் சொல்கிறார் நூலாசிரியர் அருணன்.
மதங்கள் பற்றி சரியான கருத்துகளை முன்வைக்கும் இந்த நூல், கட்டாயம் படிக்க வேண்டிய நூல்களின் வரிசையில் இடம்பெறும் என்பது நிச்சயம்.