சமயத்தைப் பற்றிய போராட்டம் சமயத்தின் பழமையைப் போற்று பவர்களுக்கும் சமயத்திலே புதுமை வேண்டுபவர்களுக்கு மிடையிலே நடைபெற இடமளிக்கக் கூடாது.
போராட்டத்திலே எவர் வெற்றி பெறுவார்கள் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்திலே, புதுமை வெற்றிபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் பலவாக இருக்கும். அதனாலே சமயத்திலே, சமயத்தின் எதிர்காலத்திலே உண்மையான ஈடுபாடு உடையோர் புதுமையின் சிலகூறுகளை ஏற்று அமைதி காண்பதே முறையானது.
புதுமையை அவர்கள் விரும்பாவிடினும் புதுமையை விரோதிப்பதனால் சமயத்துக்கு நன்மைவிளையாது என்பதை உணரவேண்டும். சமயத்தின் பழமை என்று கூறும்போது சமயத்தின் பழமைமுழுவதும் ஒரே காலத்தில் வெளிப்பட்டு இக்காலம் வரை முன்னோராலே கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது என்ற பிழையான எண்ணம் பலருக்கு இருந்து வருகிறது. தனியொருவர் காட்டிய வழியில் இயங்கும் பௌத்தம், கிறித்தவம், இஸ்லாம் முதலிய சமயங்களிலே காலத்துக் கேற்ற மாறுதல்களையும் எடுத்துக் கொள்வதிலே வில்லங்கங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு இந்து சமய வரலாற்றை நோக் கினால் இந்து சமயத்தின் வெவ்வேறு அம்சங்கள் வெவ்வேறு
காலங்களிலே போற்றப்பட்டு வந்தமையைக் காணலாம்.