நீங்கள் மோவானா படம் பார்த்திருப்பீர்கள் அதில் வரும் காட்சியில் மோவானாவின் முன்னோர்கள் பாலினேசிய தீவில் இருந்து பல தீவுகளுக்கு பாய்மரக் கப்பல்கள் மூலம் இடம் பெயர்ந்து தென்னை மரத்தை விவசாயம் செய்யும் மக்களாகக் காட்டுவர். தென் தமிழக அறிஞர் ஆ. மனுவேல் அவர்கள் எழுதிய “கோட்டாறின் கதை வர்த்தகமும் நகரிய வளர்ச்சியும்” என்ற நூலில், தமிழகம், இலங்கையில் வாழும் சாணார் மக்களின் முன்னோர்களும் இவ்வாறு பாலினேசிய தீவில் இருந்து பாய் மரக் கப்பல்களில் வந்த மக்கள் என ஆய்வாளர்கள் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களே இலங்கையிலும் இந்தியாவிலும் தென்னங்காயை அறிமுகம் செய்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் மடகாஸ்கர் வரை இடம் பெயர்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கோட்டாறின் கதை வர்த்தகமும் நகரிய வளர்ச்சியும் – ஆ. மனுவேல்
நூல்: https://www.heritager.in/product/kotraatrin-kathai-varthagamum-nagariya-valarchiyum/
தென்னையும் பனையும் தென் திருவிதாங்கூரின் பாரம்பரியச் சொத்துகள் அன்றாடம் இங்கு வாழும் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த இவ்வியற்கைச் சொத்துகள் மக்களின் வாழ்வாதாரமாக மாறிவிட்டதில் ஆச்சரியமில்லை. இவற்றிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அக்காலந்தொட்டுக் கோட்டாறு வணிக மையத்தை ஆக்கிரமித்து வந்துள்ளன. உள்நாட்டு வியாபாரத்தை மட்டுமல்லாமல் அந்நியச் செலாவணியையும் பெருக்கித் தந்துள்ளது இவற்றின் தனிச்சிறப்பு.
திருவிதாங்கூருக்கு இயற்கை அழகையும் செல்வத்தையும் கொடுப்பது தென்னை மரமாகும். அங்கிங்கெனாதபடி திருவிதாங்கூரெங்கிலும் தென்னை மரத்தைப் பார்க்கமுடியும். தெற்கிலிருந்து வந்த ‘காய்’ என்பதால் ‘தேங்காய்’ எனக்கூறுவர். இலங்கையில் யாழ்ப்பாணம் இதன் பிறப்பிடமாகும். செல்வத்தை அள்ளித்தரும் இதன் கொப்பராவிலிருந்து எண்ணெயும் தேங்காயிலிருந்து கயிறும் திரிக்கப்படுகின்றன. அக்காலந்தொட்டே இவற்றுக்கு வெளிநாடுகளில் நல்ல தேவை இருந்துவருகிறது.
அடுத்ததாகப் பனைமரம் முக்கியத்துவம் பெறுகிறது. தென் திருவிதாங்கூரில் நெருக்கமாகவும் வடக்கில் பரவலாகவும் காணப்படும் இம்மரத்தின் சாறிலிருந்து கருப்புக்கட்டி தயாரிக்கப் படுகிறது. இம்மரத்தை அதன் பயன்பாடு கருதி ‘கற்பக விருட்சம்’ என்பர். உலகெங்கிலும் இது பயன்படுத்தப்படுகிறது. கருப்புக்கட்டிக்கும் பனங்கற்கண்டிற்கும் உள்ளூரிலேயே தேவை அதிகமாக இருப்பதால் அவை குடிசைத் தொழிலாகவே நடைபெற்று வருகின்றன.
தென் திருவிதாங்கூரில் பனை வெல்லம், கருப்புக்கட்டி தயாரிப்பதில் மக்கள் தேர்ச்சி அடைந்தவர்களாகக் காணப்படு கிறார்கள். குழந்தைகள் இவற்றை விரும்பி உண்பர். ஆயுர்வேத, சித்த மருந்து வகைகளில் இவை சேர்க்கப்படுகின்றன. தென் திருவிதாங்கூரில், குறிப்பாக அகஸ்தீஸ்வரம் ராஜாக்கமங்கலம் பகுதிகளில் பனங்கற்கண்டு தயாரிப்பு அமோகமாக இருந்து வந்துள்ளது. கோட்டாறு வணிக மையத்தில் விற்கப்பட்டு வந்துள்ள பனைப் பொருட்களுக்குத் தனித்தரம் இருந்துவந்துள்ளது. ஆனால், தற்காலத்தில் அதன் உற்பத்தி நின்றுபோயுள்ளது. ஆனால், அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் குடிசைத் தொழிலாகத் தயாரிக்கப்படுகிறது. குறைந்த தேவை, விலைவாசி உயர்வு, சம்பள உயர்வு, பனங்கற்கண்டு உற்பத்தி செய்வதற்கான கூடுதல் கால அளவு (சுமார் 5 மாத காலம்) போன்ற காரணங்களால் தொழிலாளர்கள் தாமரைக்குளம் போன்ற இடங்களிலுள்ள உப்பளங்களில் வேலைசெய்வதை லாபகரமாகக் கருதுகிறார்கள். எனவே, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த குடிசைத் தொழில் நசிந்துபோனது”.
Migration அல்லது இடப்பெயர்ச்சி என்ப தற்குக் கூட்டமாக மனிதர்கள் அல்லது பறவைகள் அல்லது காட்டு மிருகங்கள் பல காரணங்களால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லுதல் எனப் பொருள்.
மனிதர்களின் இடப்பெயர்ச்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் மக்கள்தொகை சம்பந்தப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் ‘இடப் பெயர்ச்சி’ என்ற காரணி அடிப்படையில் பதில்கூற முடியும். இந்தியாவில் பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியே மக்களின் இடப்பெயர்ச்சி இருந்துவந்துள்ளதாகச் சான்றுகள் உள்ளன.மேலும் நாடோடித் தன்மை (NOMADISM) என்பது தென் இந்தியாவில் பரவலாகக் காணப்பட்டுள்ளது. உள்நாடு நோக்கிய இடப்பெயர்ச்சி சம்பந்தமாக ஏராளமான பாரம்பரிய காரணிகள் உள்ளன. உதாரணமாக வடக்கு கனரா நாட்டிலிருந்து நாயர் சமுதாயத்தினர் இடம்பெயர்ந்து தென்இந்தியா வின் மேற்குக் கடற்கரையில் குடியேறினார்கள். திருநெல்வேலி சாணார்கள் அல்லது நாடார்கள், இலங்கையிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் ஆவர். அதைப்போன்று திருநெல்வேலி வெள்ளாளர் கள் வடக்கு கர்நாடகத்திலிருந்து வந்து குடியேறி யுள்ளார்கள்.
அமைத்திருந்தனர். கி.பி. 1200க்குப் பிறகு பாண்டிய மன்னர்கள் தங்கள் ராணுவ நிலைகளை வலுப்படுத்திக்கொண்டார்கள். பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து விஜயநகர மன்னர்களின் எழுச்சி தென் திருவிதாங்கூர் வர்த்தக வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மேற்குறிப்பிட்டுள்ள மன்னர்களின் ராணுவ நிலைகள் இடம்பெயரும்போது அவர்கள் தனியாக இடம்பெயருவதில்லை. அவர்களுடன் இடம்பெயர்ந்தவர்கள் பகுதி சார்ந்த இடங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தனர். வர்த்தகப் போட்டியின் மூலம் புது உத்திகளையும் நுட்பங்களையும் புகுத்தினர். இதன்மூலம் வியாபார மையங்கள் போட்டி மையங்களாக மாறின.
பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்கு முன்பே தென் திருவிதாங்கூர் பகுதியின் மேற்குப் பகுதியிலிருந்து பிராமணர்கள் தெற்கில் குடியேறத் தொடங்கிவிட்டனர். இடைக்காலத்தில் சோழமண்டலத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் திருநெல்வேலி யிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் மலையாள மொழியை நன்கு பேசக் கற்றுக்கொண்டார்கள்.
கி.பி. 1700 – 1800 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் வடக்குப் பகுதியிலிருந்து தென்பகுதிக்கு முஸ்லிம்கள் இடம்பெயரத் தொடங்கினர்.இவர்கள் வர்த்தகர்களாகவும், நெசவுத் தொழி லாளர்களாகவும் காணப்பட்டனர்’.
ஆனால், கி.பி. 1300 1600 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட அனைத்துச் சான்றுகளையும் ஆராய்ந்தால் சாணார்கள், மறவர்கள், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வடுகர்கள் (வடக்கே உள்ளவர்கள்) ஆகிய மூன்று இனத்தவர்கள் மட்டுமே தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையாகக் காணப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hornell என்ற அறிஞர் திருநெல்வேலி மாவட்டத்தின் பரவர்கள், சாணார்கள், பறையர்கள் ஆகியோரின் இடப் பெயர்ச்சிப் பண்புகள் குறித்து ஆய்வுசெய்துள்ளார். இவர்கள் அனைவரும் பாலினேசியாவிலிருந்து (Polynesia) தென்னிந்தியா விற்கு வந்து குடியேறியவர்களாவர். இவர்கள் தங்களுடன் பாய்மரக் கப்பலையும் தேங்காய்களையும் கொண்டுவந்தனர். திராவிடர்களின் வருகைக்கு முன்போ பின்போ இவர்கள் வந்திருக்க வேண்டும் என்பது Hornell-ன் கருத்தாகும். இவர்கள் பாலினேசியாவில் பழக்கத்திலிருந்த பாய்மரக் கப்பலைத் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
கேரளாவைப் பொறுத்தவரைக்கும் இடப்பெயர்ச்சி என்பது பெருமாள் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது எனலாம். இவர்கள் திருவஞ்சிக் குளத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். 64 கிராமங்களைச் சார்ந்த நம்பூதிரிப் பிராமணர்கள் இவரைத் தேர்வுசெய்துள்ளனர். இந்த 64 கிராமங் களைச் சார்ந்த பிராமணர்கள் தென் திருவிதாங்கூரிலிருந்து திருவஞ்சிக் குளத்திற்குச் சென்று குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது”.
பொதுவாக இடப்பெயர்ச்சி என்பது இரண்டு வகைப்படும். வாழும் கட்டாயம் ஏற்படும்போது இயல்பாகவே குடிமக்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்குக் குடும்பமாக இடம்பெயருவது முதல்வகை. அரசாங்கமே முன்வந்து தொழில் நிமித்தமாகக் குடியமர்த்துவது இரண்டாம் வகை.
உதாரணமாக சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூரிலுள்ள உப்பளங்களில் வேலைசெய்வதற்கென அரசாங்கமே முன்வந்து, பாண்டி நாட்டிலிருந்து ஏழு குடும்பங் களை அழைத்துவந்து குடியமர்த்தியது. இவர்கள் தென் திருவிதாங்கூரிலுள்ள தாமரைக்குளம், புத்தளம், இதர அளங் களில் பணிசெய்ய அமர்த்தப்பட்டனர். இவர்கள் இடம் பெயர்ந்து வந்த விவரம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது’.
இவ்வாறான இடப்பெயர்ச்சிக்குக் காரணங்கள் என்ன, எனப் பார்க்கும்போது பல உண்மைகள் நமக்குத் தெரிய வருகின்றன. அதற்கான காரணங்கள் பல இருப்பினும், அதற்கான சான்றாதாரங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் சில குறிப்பிட்ட இடங்களில் நிகழ்ந்த காலநிலை மாறுபாடுகள், புதிய குடியேற்றங்கள் காரணமாகப் புலம்பெயர்ந்த நாடோடிக் கூட்டங்கள், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்பட்ட தாக்கம், அரசியல் நிலவரங்கள் ஆகியவை சில அடிப்படைக் காரணிகளாகும். இவை புலப்பெயர்ச்சிக்கு ஏதுவாகத் தங்கள் தங்கள் பங்கை ஆற்றியுள்ளன. சமீப காலத்தில் பஞ்சம், மதரீதியிலான இம்சைகள், புதிய குடியேற்றங்கள் ஆகியவை புலப்பெயர்ச்சியை வேகப்படுத்தியுள்ளது எனலாம். ஆனால், பொதுவாக, அடிப்படையில் உணவு தேடுதல் என்பது புலப் பெயர்ச்சிக்கான அடிப்படைக்காரணியாக அமைந்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள காரணிகளில் ஒன்றிலிருந்து ஒன்றை வேறு படுத்திப் பார்ப்பது என்பது சற்றுச் சிரமமான காரியமாகும். இருப்பினும் அவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முன்பு இயல்பான கேள்விக்கான பதிலை நம்முள் உருவாக்கிக்கொள்வது அவசியமாகிறது. ஆரம்ப காலங்களில் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளிலுள்ள மலைகளிலும் காடுகளிலும் மலைநாட்டு மக்கள் சென்று ஏன் வசிக்கத் தொடங்கினார்கள் என்பதே அக்கேள்வி”.
தென் பகுதியிலிருந்து புலப்பெயர்ச்சி மூலம் உடன் கொண்டு வரப்பட்ட தேங்காய் குறித்து கீழ்க்கண்ட குறிப்பு நமக்கு சில தகவல்களைத் தருகிறது. பர்மாவும் தூரக்கிழக்கு நாடுகளும் இந்தியாவுடனான வர்த்தகப் பாதையின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இவ்வர்த்தகப் பாதையிலுள்ள தீவுகள் குறித்துப் பழங்கால வரலாற்றில் பல குறிப்புகள் காணப்படுகின்றன. புத்த பிட்சு ஒருவர் நிக்கோபர் தீவுக் கூட்டங்களை Nalo-Kio-Chon அதாவது Coconut Islands எனக் குறிப்பிட்டுள்ளார்”.
இத்தீவுக் கூட்டங்களில் வாழ்ந்த மக்கள் தேங்காய்களைக் கொடுத்து இரும்பைப் பண்டமாற்று அடிப்படையில் பெற்றுக் கொண்டார்கள். வர்த்தகத்திற்கான போக்குவரத்து மார்க்கங்களும், மக்களின் இடப்பெயர்ச்சி மார்க்கங்களும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிவு. ஏனெனில், இம்மார்க்கங்களில் பொதுமக்கள் மிக எளிதாகச் சென்றுவர முடிந்தது. குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகப் பழங்குடி மக்கள் தங்களுக்கான உணவு வகைகளை எளிதாகப் பரிமாறிக்கொள்ள முடிந்தது. அபூர்வமான பொருட்கள்மீது வளமான வர்த்தகம் நடைபெற்றது. அணிந்திருப்பவர்களுக்குப் பெருமையும், அழகும் தரும் அபூர்வமான பொருட்கள் மீது வளமான வணிகம் நடைபெற மேற்கண்ட மார்க்கங்கள் ஊக்கமளித்தன. எதிரிகளைத் தாக்கிஅழிக்க உதவும் ஆயுதங்களையும் இதர கருவிகளையும் கூராக்க உதவும் விலையுயர்ந்த கருவிகளுக்கு உயர்ந்த விலை யளிக்கப்பட்டது போன்று இவ்வணிகப் பொருட்களுக்கும் அளிக்கப்பட்டன.
பழங்கற்காலத்தில், கடற்சங்குகளைக் கோவையாகக் கோத்துக் கழுத்தில் மாலையாக அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அக்கால எலும்புக் கூடுகளில் துளையிடப்பட்ட சங்குமாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதே அதற்குச் சான்று. மேலும் அவர்கள் ஏற்கெனவே பழகிப்போன பாதை வழியாக இடம் பெயர்ந்துள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. புதிய கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த ஒவ்வொரு காலகட்டமும் சற்று வித்தியாசமான வரலாற்றைத் தழுவியிருந்தது. புதிய கற்காலத்தில் மனிதர்கள் பயணப்பட்ட வழிகள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அவர்கள் பயணப்பட்டிருந்த வழிகள் குறித்துத் தெளிவாக விளக்குவதாக நமக்குப் புலப்படுகிறது. கோதுமை, பார்லி, புல்லரிசி, சணல்,பன்றி,குதிரை, கன்றுகாலிகளின் பயன்பாடுகளைத் தெரிந்து அவற்றை வீட்டுடமைகளாக ஆக்கிக் கொள்வதற்கு முன்னால், அவற்றை இறக்குமதி செய்துள்ளனர். பின்பு அவற்றை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் வளர்க்கவும் பழகிக்கொண்டனர். அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் கூடைகள், பாய்கள், நெசவுத் தொழில் பழக்கத்திற்கு வருவதற்கு முன்பே தங்களுக்கான ஆடைகளை உருவாக்கவும் தெரிந்துகொண்டனர். ஆனால், இவ்வாறு உருவாக்கிய பொருட்கள் யாவுமே தொல்லியல்ரீதியாக அடையாளமின்றி அழிந்துபோயின. எனவேதான் வரலாற்றுக் கால அல்லது வரலாற்றுக்கு முந்தைய கால வர்த்தக வரலாறு, உலோகக் காலம், விலை மதிப்பற்ற கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடங்குகிறது எனலாம்.
புதிய கற்காலத்தின் அரிய கண்டுபிடிப்புகள் பொருளாதாரக் கட்டமைப்புகள் அடங்கிய போக்குவரத்து மார்க்கங்களை நிலைகுலையச் செய்தன. மேலும், இதன் காரணமாகப் பெரும்பான்மையான அளவிற்குப் பண்டமாற்று, வர்த்தகம் நடைபெற வழி வகுத்தது. இறுதியில் பெரும் செல்வம் சேர்ந்ததால் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் பெரும் செல்வந்தர்களாக மாறினர். மனிதன் உண்ணும் உணவுப் பொருளாக இருந்தாலும் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தும் சோளியாக இருந்தாலும் மதிப்புமிக்க செல்வமாகக் கருதப்பட்டது. இம்மாதிரியான சிக்கலான பொருளாதார வழிமுறையில் தனித் தேர்ச்சியும் காலம் காலமாக அத்தேர்ச்சிக்கான நுட்பங்களையும் ரகசியங்களையும் கவனமாகப் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் அந்நுட்பங்கள் பழங்கால சில குறிப்பிட்ட தொழில்நுட்பக் குழுக்களின் சர்வாதீனமாக மாறத் தொடங்கின. ஆரம்ப காலங்களில், சிறிய தோணிகளில் அங்குமிங்கும் அலைந்து திரிந்த மனிதன் எப்போதாவது சக்கரங்கள் பொருத்திய வாகனங்களில் ஓட்டு மொத்தமாக இடம்பெயர்ந்து செல்லும்போது பழங்கால பண்டமாற்று முறையைப் பின்பற்றத் தொடங்கினான். சாதாரண பிரயாணி சென்றுவந்த சாலை மார்க்கத்தில் இடப்பெயர்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றுவந்தது. அவ்வாறு சென்று வந்தவர்கள் பண்டமாற்று அடிப்படையில் விலையுயர்ந்த புதிய பொருட்கள், விலை மதிப்பற்ற அன்பளிப்புகளை அந்நிய நாட்டிலிருந்து பெற்று வந்தனர். பழங்காலங்களில் பழக்கத்திலிருந்த மெதுவான போக்குவரத்து போன்று வர்த்தகமும் மெதுவாகவே நடைபெற்று வந்தது”.
கோட்டாறின் கதை வர்த்தகமும் நகரிய வளர்ச்சியும் – ஆ. மனுவேல்
நூல்: https://www.heritager.in/product/kotraatrin-kathai-varthagamum-nagariya-valarchiyum/