திருக்குளச் செந்நூல் – முனைவர் இராசு. பவுன்துரை

150

இந்த நூலில் பண்டைத் தமிழரின் திருக்குளங்கள் எவ்வாறு பேசப்பட்டுள்ளன என்பதைப் பதிவு செய்யும் முயற்சியும் குளக் கட்டுமானத் தொழில்நுட்ப மரபில் முகிழ்ந்த கட்டடக்கலை வளர்ச்சி, மாற்றங்கள் போன்றவை பேசப்பட்டுள்ளன. கோயில் அமைப்பு நெறிமுறையில் பேசப்படும் ‘தீர்த்தம்’ குறித்தக் கட்டடக்கலை வரலாற்றைத் தனித்துக் காணும் அடிப்படை அறிவியல் தேடலாகவே இந்நூல் அமைகின்றது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தீர்த்தன் உரை…

மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாய்க் கூறுவது பண்டையத் தமிழரின் சமய மரபு இந்தியப் பண்பாட்டில் ‘தீர்த்தம்’ என்னும் ‘நீர்’ குளம், கிணறு, நதிசார்ந்த சடங்கு. வழிபாடு முறையுடன் இணைந்து பேசப்படுகின்றது. தமிழகப் பண்பாட்டில் கோயில் என்றால் சைவர்கள் சிதம்பரத்தையும், வைணவர்கள் திருவரங்கத்தையும் குறிப்பிடும் மரபுண்டு. அதுபோல் தீர்த்தம் என்றால் அது ‘மகாமகத் தீர்த்தம்’ என்றே கருதுவர் மகாமகக் குளத்தில் நீராடினால் இந்தியாவிலுள்ள அனைத்துப் புண்ணியத் தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தியாவிலுள்ள நதிகளை புனித நீராகக் கருதி அந்நதிகளுக்குப் பெண் தெய்வங்களின் பெயரிட்டழைத்த மரபு ஏற்பட்டது. இந்தியச் சமய மரபில் கங்கை புனித நதியாகப் பார்க்கப்படுகின்றது. கங்கை நதிக்கு ஒத்தப் புனித நதியாக காவேரி யின் நீர்த்தடம் அமையும் திருவையாறு கருதப்படுகின்றது.

சங்க காலப் புலவர் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ் செழியனைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுப் பாடலில்,

“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதநீறே உணவின் பிண்டம் உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே”

எனப் புகழ்ந்துரைக்கும் கருத்துரையுண்டு. நீரின் தேவை அதனைப் பெற வழி செய்தோர் பெறும் பெருமை, புகழ் எத்தகையது என்பதை இப்பாடல் புலப்படுத்துகின்றது. உணவு கொடுத்தவர்கள் உயிரையே அளித்தவராவர். நிலமும் நீரும் சேர்வதால் உணவு கிடைக்க வழி பிறக்கின்றது. இத்தகு நிலத்தொடு நீர் சென்றடையும் பணியைச் செய்தவர்கள் உடம்பையும் உயிரையும் காப்பவர்கள் ஆகின்றனர். இவ்வரிய பணியை மேற்கொண்டடோர் புகழ் நிலைத்து நிற்கும் என மண், நீர் ஆகியவற்றின் சிறப்பைக் கூறுவர்.

தண்ணீரைப் பழிக்காதே என்பது தமிழகத்தின் பெரும் பண்பாகவே இருக்கின்றது. நீர் நிறைந்த தடாகங்களை நாம் புனிதமாகவும் நதிகளைத் தெய்வமாகவும் கருதும் மரபு மிகவும் பழமையானது. கோயிலுக்கு அருகே குளம் வெட்டுவதும் குளங்களுக்கு அருகே கோயில் கட்டுவதும் நதிக் கரையோரங்களில் கோயிலும் படித்துறைகளை அமைத்ததும் நமது முன்னோர் வகுத்த நீர் சார்ந்த பண்பாடாக அமைகின்றது.

நீர் சார்ந்த சிந்தனைகளும் நீர் நிலைகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்கக் காரணங்களாகவும் அமைந்தன. குடிநீர், வேளாண்மைத் தொழில்நுட்பம் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்திய பண்டையத் தமிழ்ச் சமூகம். நீர் நிலைகளை இனங்காண்பதும் அகழ்ந்து நீர், கிணறு, கிடங்கு, அகழி, குளம், கூவம் ஆகியவற்றை கட்டுவதும் புதிய நீர் அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்த்தது. இந்த அறிவியல் தொழிநுட்பத்தை “கூவசாத்திரம் ” எனப் பெயரிட்டு அழைத்தனர்.

பூமியின் கீழாக ஓடிக் கொண்டிருக்கும் நீர் ஊற்றுக்களைக் கண்டுபிடிப்பதற்குரிய உத்திகளை இயற்கையின் சுற்றுச் சூழல் இயல்புகளோடு இணைத்துக் கண்டறிந்துள்ளனர். பூமியின் கீழாக உள்ள மண், மணல், கல், நீர், சுவை, நிறம் எனப் பன்முகப் பார்க்குரிய தகவல்களை அனுபவத்தால் கிடைத்த புரிதலை வகைப்படுத்திப் பாடலாகவும் பின்னர் பதிவு செய்துள்ளனர் என்பதை பழமையான ஏடுகள் உணர்த்துகின்றன. எனவே இன்று நாம் காணும் திருக்கோயில்களின் திருக்குளங்களும் திருக்கேணிகளும் பழமையான பண்பாட்டின் வழியாகப் பெற்றக் கட்டுமான மரபுகளாகும்.

கி.மு. 2500-ஆம் ஆண்டு முதல் குளக் கட்டுமானக் கலையின் வரலாற்றை அறிய முடிகின்றது. குளங்களையும், கிணறுகளையும் செங்கல், கல், சுடுமண் பொருட்களைக் கொண்டுகட்டிய தொன்மை மரபினை தொல்வியல் சுண்டு படிப்புகள் வெளிப்படுத்துகின்றன. வாழ்வாதாரமாகவும் இறைவழிபாட்டின் சங்கு நிகழ்வுகளுக்காகவும் திருக்குளங்கள் ஊர்கள்தோறும் அமைக்கப்பட்டன. இயற்கையான குளங்களும் செயற்கையான குளங்களும் தமிழரின் நீர் மேலாண்மை நுட்பத்தை உணர்த்துகின்றன.

இந்த நூலில் பண்டைத் தமிழரின் திருக்குளங்கள் எவ்வாறு பேசப்பட்டுள்ளன என்பதைப் பதிவு செய்யும் முயற்சியும் குளக் கட்டுமானத் தொழில்நுட்ப மரபில் முகிழ்ந்த கட்டடக்கலை வளர்ச்சி, மாற்றங்கள் போன்றவை பேசப்பட்டுள்ளன. கோயில் அமைப்பு நெறிமுறையில் பேசப்படும் ‘தீர்த்தம்’ குறித்தக் கட்டடக்கலை வரலாற்றைத் தனித்துக் காணும் அடிப்படை அறிவியல் தேடலாகவே இந்நூல் அமைகின்றது.

இந்நூலாக்கத்தின் தேவை குறித்தும் உரிய தகவல்களை எடுத்துச் சொல்லியும் என்னை எழுதச் செய்த எங்கள் பேராசிரியர் மதிப்பிற்குரிய முனைவர் ச.வே. சுப்பிரமணியன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றி. இந்நூலை அழகாகச் செய்து வெளியிட்டுள்ள மெய்யப்பன் பதிப்பகத்தாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. என்னை எழுதத் தூண்டும் அன்பு சகோதரர் திருவாளர் மெய். மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கும், மேலாளர் திரு. இராம குருமூர்த்தி அவர்களுக்கும், கணினியில் இந்நூலாக்கத்தை செய்த நண்பர் திரு. சி. முத்தையா அவர்களுக்கும் என்னுடைய உள்ளம் நிறைந்த நன்றி.

எனது நூலாக்கத்தை எப்போதும் உடனிருந்து ஆர்வத்தோ ஆதரவு கொடுத்து வரும் என்னுடைய துணைவியார் திருமதி அழகம்மாள் அவர்களுக்கு நன்றிகூறுவது மிகப் பெருட கடமையாகும்.

Weight.5 kg