Description
சிந்துவெளி நாகரிகம் குறித்து, அதன் திராவிடத் தன்மை குறித்து, சிந்துவெளி மக்களின் இடப்பெயர்வு, தமிழ் இடப்பெயர்களின் பரவலாக்கம் போன்ற அடிப்படைகளில் ஆராய்ந்துள்ள ஆர்.பாலகிருஷ்ணனின் ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் கங்கை வரை (2023) ஆய்வு அடிப்படையிலும் நாம் புதிய சிந்தனைகளுக்குத் தொல்காப்பியத்தையும் சங்கஇலக்கியத்தையும் உட்படுத்தி இவற்றுக்கான புதிய காலவரையறைகளை வரையறுக்கவேண்டிய சூழல்,
அவற்றின் பாடுபொருள்களின் தனித்தன்மைகளை நிறுவவேண்டிய சூழல் பண்டைத் தமிழ்ச் சமுதாய வரலாற்றை மீளாய்வுசெய்யவேண்டி நிலை இன்று உருவாகியுள்ளது. ஐராவதம் மகாதேவனின் பழந்தமிழ்க் கல்வெட்டுகளின் காலவரையறையை அடிப்படையாகக் கொண்டு சங்ககால எல்லையை 250 ஆண்டு காலத்திலிருந்து 450 ஆண்டுகாலப் பரப்பிற்கு உரியதாக வரையறுத்த கா. சிவத்தம்பியின் வரையறுப்புக்குப் பின் பொருந்தல் அகழாய்வு நிறுவியுள்ள கி.மு. 5 எனும் காலப் பழமையைக் கருத்தில்கொண்டு புதிய சிந்தனைக் களங்களை இனங்கண்டு ஆய்ந்து தமிழின் தொன்மை நிலைநாட்டலுக்கு வழிகோலவேண்டியது இன்று நமது கடமையாக உள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றும் முயற்சியாக இந்த நூல் அமைந்துள்ளது.





























