உப்பு வேலி என்பது ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு உப்பு கொண்டு செல்வதைத் தடுக்க ஏற்படுத்தப் பட்டிருந்த சுங்க வேலியாகும். ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்திருந்ததால் அதை மக்கள் கொடாமல் இருப்பதைத் தடுத்து வரி வசூலிக்க இது ஏற்படுத்தப்பட்டது. இது அதிக அளவாக 4000 கிலோ மீட்டருக்கு மேலான நீளமும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது. 1803-ஆம் ஆண்டு வாக்கில் இவ்வேலி அமைத்தல் தொடங்கப்பட்டது.
ஒரு சமயத்தில் இதன் பாதுகாப்பில் 14000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
உப்பின் மீதான இந்த வரி 1930-இல் தொடங்கிய உப்பு சத்தியாகிரகத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.
மீள் கண்டுபிடிப்பு
இவ்வளவு பெரிய வேலியும் சுங்க வரி அமைப்பும் இருந்த போதிலும் அந்தக் காலகட்ட வரலாற்றுக் குறிப்புகளில் இதனைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால் இவற்றைப் பற்றி இந்தியாவிலோ பிரிட்டனிலோ பரவலாகத் தெரியவில்லை. இராய் மாக்சாம் என்னும் இலண்டன் பல்கலைக் கழக நூலகப் பணியாளர் வில்லியம் என்றி சிலீமான் என்பாரின் நூலில் குறிப்பிட்டிருந்த இந்த வேலியைப் பற்றி படித்து அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள முயன்றார். மேலும் இதன் இடத்தைக் கண்டுபிடிக்கவும் விரும்பினார். இலண்டனில் இதைப்பற்றி விரிவான ஆய்வுகள் செய்து பின்னர் இந்த வேலியைத் தேடி இந்தியாவிற்கு மும்முறை வந்தார். 1998-இல் உத்திரப்பிரதேசத்தில் எட்டவா மாவட்டத்தில் சிறிய கரைமேட்டைக் கண்டார். இது அந்தப் பெரும்வேலியின் மிச்சமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது
உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம் 2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது. ஆனால், அந்த வேலியைப்பற்றிய ஒட்டுமொத்த நினைவுகளும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக இத்தேச மக்களுக்கு மறந்துபோனது. பழங்ககதைகள் துவங்கி தற்போதைய வரலாற்று நூல்கள்வரை எதிலும் அந்த வேலிபற்றிய சிறுகுறிப்புகூட இடம்பெறவில்லை. பிரிட்டனிலிருந்து கிளம்பிவந்து, ஒரு தேசமே மறந்துவிட்ட சுங்கவேலியின் மிச்சமான சிறுபகுதியைக் கண்டடைந்து ஆவணப்படுத்தினார் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம். சமகால இந்திய வரலாற்றாவணங்களில் தவிர்க்கமுடியாத ஆக்கங்களில் இப்புத்தகமும் இடம்கொள்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து நிலங்களில் வரைபடங்களோடு அலைந்துதிரிந்து, இறுதிவரை முயிற்சியைக் கைவிடாமல் பயணித்த ஆசிரியர் ராய் மாக்ஸம் அவர்களின் பெருந்தேடல், உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை நமக்கு ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளது. தவறவிட்டுவிடக்கூடாத வரலாற்று ஆவணமான ‘உப்புவேலி’ புத்தகம், சிறில் அலெக்ஸ் அவர்களின் தமிழாக்கத்தில், தன்னறம் நூல்வெளி வாயிலாக மீள்பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.