Description
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மோர்ப்பண்ணை கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு மீன்வளம் தரும் கடல்தாயை நினைத்து ஒரு நாள் பொங்கலிட்டு வணங்கி வருகின்றனர். இக்கிராம மக்களில் கடையர் எனும் மீனவ சமுதாயத்தினரிடம் இவ் வழிபாட்டு நம்பிக்கை நீண்ட காலம் தொட்டு நீடித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இச் சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் ஊர்கூடி கூட்டம் போட்டு 11 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழு சிறுமிகளைத் தெரிவு செய்து, பொங்கலன்று ஊரில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தபின்பு ஏழு சிறுமிகளை கடலிலும் குளத்திலும் நீராட்டி கோயிலுக்கு அழைத்து வந்து, அங்கும், பொங்கல் வைத்து, குரவையிட்டு அம்மனை வழிபட்ட பின்பு மஞ்சல் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரகச் செம்புகளோடு, ஏழுவாழை இலைகளில் பொங்கலைப் படைத்து அம்மனை மன்றாடி வழிபட்டு முடிந்ததன் பின்னர், தென்னம் பாளையில் தயாரிக்கப்பட்ட சிறிய படகு ஒன்றில் பூசைப்பொருட்களோடு பொங்கலையும் வைத்து, நெய் விளக்கேற்றி பூசாரி கொடுக்க.
அதனை கிராமத்தவர்கள் வாங்கி கடலை நோக்கி மேளதாள இசை முழங்க ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர். இவ் ஊர்வலத்தோடு ஏழு கரகச் செம்புகளைத் தலையில் ஏந்தியபடி ஏழு சிறுமியர்களும் பின்தொடர்ந்து கடலினுள் சென்று பூசைப்பொருட்கள் அடங்கிய படகினையும், கரகச் செப்பினுள் இருந்த மஞ்சல் கலந்த பாலையும் கடலில் கொட்டி வழிபடுகின்றனர் இவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் பூசைப் பொருட்களைக் கடல்தாயிடம் கொண்டு சேர்ப்பிப்பதாக இக்கிராம மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். உழவர்கள் எப்படி சூரியனுக்கு நன்றி செலுத்த விழா எடுத்தார்களோ அதேபோல மீனவர்கள் தங்கள் வாழ்வை வளமாக்கும் கடல் தாய்க்கு நன்றி அறிவிக்கும் திருநாளாக இவ்விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
கடல் நாச்சியம்மன் வழிபாடு மட்டக்களப்பு பிரதேசம் தவிர்ந்து வேறு எப்பிரதேசத்திலும் போற்றப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் எதுவுமில்லை. எனவே மட்டக்களப்புத் தமிழகத்திற்குரிய தனித்துவமான வழிபாடாகவே இவ்வம்மன் வழிபாடு நிலவியுள்ளது. இதற்கேற்றால் போல் கடல் நாச்சியம்மன் குளுத்திப் பாடல்களில் வரும் அம்மன் உலாவில்
“கண்டந்தக் கன்னியர் கப்பலி லேறிக் கல்லாறு மட்டுக் களப்பி லிறங்கி வந்தாள் கன்னியர் வந்தாள்……”
என்றும், குளிர்ந்தருளல் பகுதியில்
”தங்கு நாவலடி கல்லாறு கருங்கொடி முகத்துவாரம் பொங்கல் பூசை யேற்றருளும் பூரணியும்….”
என வரும் பாடலிலும் குறிப்பிட்டுள்ளதன் படி பெரியகல்லாறு. நாவலடி கருங்கொடித்தீவு, முகத்துவாரம் போன்ற கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் இவ் வழிபாடு பரந்திருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. இவ்வாறு கடல் நாச்சியம்மன் கோயில் கொண்டிருந்த இருப்பிடத்தைக் கடந்து ஒந்தக்காரக்கந்தன் கப்பலில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு தலத்தில் உள்ள கடல் நாச்சியம்மனை வழிபாடாது சென்றமையால் கப்பல் ஓடாது பிரயாணம் தடைப்பட்டது. பின்பு ஒந்தக்காரக்கந்தன் திரைசேர் மடந்தையாரை வழிபட்டு பிரயாணத்தைத் தொடர்ந்ததாக மேல்வரும் கடல்நாச்சியம்மன் காவியம் தெரிவிக்கின்றது.
“கயிலையங் கிரிமீது கன்னியர்கள் சூழவே கருத்தொரு மித்துவிளை யாடிவரு நாளில் ஓலமுடன் ரெத்தின மணிக்கப்ப லேறி ஒத்தக்கா றக்கந்த னோடிவரு நாளில் சீலமுட னேகப்ப லோடாத துகண்டு செய்திசெய லறியாது திகைத்துநிற் பளவில் வாலைபுவ னேசுபரி திரைசேர் மடந்தை மாதுதனை யேகண்டு மலரடி பணிந்தார்”
கடல்நாச்சியம்மன் வழிபாடு முதல்முதலில் தமிழ்நாட்டிலேயே ஆரம்பித்து இருக்கவேண்டும். ஏனெனில் இராமநாதபுரத்தின் அருகே உள்ள மோர்ப்பண்ணை கிராம மக்களில் கடையர் எனும் மீனவ சமுதாயத்தினர் ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் கடற்கரையில் கடல் தாய்க்கு பொங்கல் இட்டு, குரவை இட்டு, படையல் இட்டு, தென்னப்பாளையில் தயாரிக்கப்பட்ட சிறிய பாய்மரப்படகில் பூசைப்பொருட்களை வைத்து கடலில் விட்டு கடல்தாய்க்கு நன்றி செலுத்தும் விழாவாக தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகின்றனர். இவ்வழிபாட்டின் எச்சமாகவே மட்டக்களப்பு கடற்கரையோரப் பிரதேசங்களில் அண்டி வாழும் மீனவ சமுதாயத்தினரால் போற்றப்படும் கடல்நாச்சியம்மன் வழிபாட்டினையும் உற்று நோக்க முடிகின்றது. இதற்கு பொருந்தினால் போல் கடல் நாச்சியம்மன் காவியம், பள்ளுப்பாடல்களில் கடல் பயணம் செய்து வந்த ஒரு கூட்டம் கடல் தாய்க்கு நன்றி செலுத்துவதற்காக கப்பலேறி இலங்கையின் மட்டக்களப்பு கரையருகில் இறங்கி பூசைகள் புரிந்து பெண்கள் பட்டுப்புடவை கொசுவிக்கட்டி குரவைக் கூத்தும் ஆடி கடலைப் பார்த்து பள்ளுவளைந்து (செவ்வாய்க்கூத்து) செவ்வாய்ச்சடங்கு புரிந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்கங்கள்: 100