இந்துத்துவம் மேலெழுந்த வரலாறு – தொலைதூரத் தேசியம்- காந்தியும் இந்துத்துவவாதிகளும் – இரட்டைக் கோபுரத் தாக்குதலும் அமெரிக்க இந்துத்துவமும் – இன்டெர்நெட் இந்துத்துவத்தின் யூத பயங்கரவாதத் தொடர்புகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் குறித்து இந்த நூலில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
***
இந்துத்துவம் அது தோன்றிய காலத்திலிருந்தே வெளிநாட்டு பாசிஸிட் மற்றும் சியோனிஸ்ட் பயங்கரவாத அமைப்புகளுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.
தொடக்க கால ஆர்எஸ்எஸ் அமைப்பு முசோலினி, ஹிட்லர் போன்றோருடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தது. அதன் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சே இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்து, அவருடைய பாணியில் தங்கள் அமைப்பை அமைத்துள்ளதாகச் சொல்லியதையும் முசோலினியின் பாசிச அறிக்கையை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டதையும் நாம் அறிவோம்.
இந்த நூலில் அ. மார்க்ஸ் சாவர்க்கரின் இரத்த வாரிசுகள் பாசிஸ்டுகளின் ’பலில்லா’ வடிவில் இந்திய இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க, மகாராஷ்டிரத்தில் போன்சாலே இராணுவப் பள்ளியை உருவாக்கியுள்ளதையும், அதனுடன் தொடர்புகொண்டவர்கள் இன்று மலேகான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்.
அத்துடன் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் யூத பயங்கரவாத சியோனிச அமைப்புகளுக்கும், இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியுள்ள உயர்சாதி இந்துத்துவ பயங்கரவாத சக்திகளுக்கும் உள்ள இரகசிய மற்றும் வெளிப்படையான தொடர்புகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் மிக விரிவான ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.
இந்துக்களும் யூதர்களும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் முதலான நவீன சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனச் சொல்லும் இந்த சியோனிச ஆதரவு இந்துத்துவ சக்திகள், மீண்டும் இந்துப் பெருமையை நிலைநாட்டுவதற்கு யூத பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வெளிப்படையாகச் சொல்கின்றன.
அந்த அடிப்படையில் அவர்கள் மேற்கொண்டுள்ள அச்சமூட்டும் இயக்கச் செயற்பாடுகளையும், இந்தியாவில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் நிவாரணப் பணிகளுக்கென வெளிநாடுகளில் திரட்டப்படும் ஏராளமான நிதி, இங்கு இந்துத்துவ வன்முறை அமைப்புகளுக்கு எவ்விதம் பிரித்தளிக்கப்படுகின்றன என்பதையும் விரிவான ஆதாரங்களுடன் முன்வைக்கிறது இந்நூல்.