கொங்கு நாடு என்பது கோவை சார்ந்த தமிழகப் பகுதியாகும். இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களின், சமுதாய, பொருளாதார, கல்வி பற்றிய பல்வேறு செய்திகளை, இந்த நூல் கூறுகிறது. கொங்கு சமுதாயக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயங்கள் ஆகிய வரலாற்று ஆவணங்களையும் சிற்றிலக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு, 27 தலைப்புகளில் கொங்கு மகளிர் என்னும் “கவுண்டச்சியர்’ பவனி வருகின்றனர்.
பஞ்சாயத்து தலைவியாய் இருந்த தெய்வானை அம்மாள், புலமை பெற்ற அவ்வையார், பூங்கோதை, வள்ளியாத்தாள், வெற்றி மங்கை வெள்ளையம்மாள், திருப்பணி செய்தவர், பக்தி மிக்கவர், தேனாயி, குடும்பப் பெண், பணிப் பெண்கள், மருத்துவ மங்கை மங்கலை, வீரமங்கை மீனாட்சி முதலிய கொங்கு குலமகளிர் பெருமை இந்த நூலில் கொடி கட்டிப் பறக்கிறது.
இஸ்லாமியர் ஆட்சிக் காலத்தில் வெள்ளையம்மாள் மேல் சந்தேகப்பட்டு பஞ்சாயத்தார் மூன்று சோதனை வைத்தனர்.
1.பச்சை மண் குடத்தில் நீர் எடுத்து,
2.மண் குதிரை மீது ஊற்ற அது கனைக்க வேண்டும்,
3.கோவிலில் உள்ள பட்ட மரமான கழுமரம், தண்ணீர் ஊற்ற தழைக்க வேண்டும் என்ற அதிரடி சோதனைகளை ஏற்று வென்று, தான் குற்றம் அற்றவள் என்று நிரூபித்து காடையூர் ஈசுவரன் கோவிலில் தெய்வமாகி வெள்ளையம்மாள் இன்று பூஜிக்கப்படுகிறாள்.
நாட்டுப்புறப் பாடல்களையும், இலக்கிய வெண்பாக்களையும், கல்வெட்டு, செப்பேடுகளையும் ஆதாரமாக வைத்து கொங்கு மங்கையர் பெருமையை, இந்நூல் வழி உணர்ந்து நிமிரலாம்