கொங்குநாடும் கம்பரும் – புலவர் செ.இராசு

70

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

திருவள்ளுவரைப் போன்றே கம்பருக்கும் ஆவணங்கள் அடிப்படையில் உருவாக்கத் தக்க வரலாறு இல்லை. ஆனால், அவர்கள் காலத்தையடுத்து உருவான கற்பனைக் கதைகள் பல, மக்களிடையே உலாவத் துவங்கின. அவற்றுள் சில, பிற்காலச் செப்பேட்டு ஆவணங்களிலும் இடம் பிடித்தன.

கம்பரை பொறுத்தவரை, அவருக்கும் வேளாளர்களுக்கும் இடையே நிலவிய நல்லுறவு குறித்த கதைகள், கொங்கு நாட்டு ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. எந்த ராமனை நாயகனாக வைத்து ராமகதை எழுதினாரோ, அந்த ராமனை தமது குல முன்னோராகக் கூறிக்கொண்ட சூரியகுலச் சோழர்களை புகழ்ந்து பாடாத கம்பர், சடையப்பன் என்ற வேளாளர் குல உபகாரியைப் புகழ்ந்து பாடி, கம்பராமாயணத்திலேயே பதிவு செய்துள்ளார்.
‘சடையன் இல்லத்தில் விருந்துண்டு செல்வோர், காவிரியாற்றில் கை கழுவுவர்’ என்ற கருத்து இடம் பெற்ற ஒரு வெண்பா, மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர்க் கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து ஒரு கதை, மக்களால் புனையப்பட்டது.

காவிரியின் மணவாளன் என்றே சோழ அரசர்கள் தம்மை குறிப்பிட்டுக் கொள்வர். அப்படியிருக்க காவிரி, வேளாளர்கள் (கை கழுவிய) எச்சில் என்று கம்பர் பாடினார் என்றும், அதனால் சோழனுக்கு கம்பர் மீது வன்மம் உருவாயிற்று என்றும் கதைகள் வழங்கத் துவங்கின. சோழனுடன் கருத்து வேறுபாடு கொண்ட கம்பர், கொங்கு நாட்டுக்குச் சென்றுவிட்டார் என்றும் நம்பப்படுகிறது.
இச்செய்திகளை குறிப்பிடுகிற, நூலாசிரியர் புலவர் செ.இராசு, இதற்கு சடையப்பரின் கொங்கு நாட்டுத் தொடர்பு ஒரு காரணமாகலாம் என, ஊகிக்கிறார். கம்பருக்கும், கொங்குநாட்டுக்கும் இடையே நிலவிய உறவினை, ஆவணங்கள் வழி விரிவாகவே ஆராய்கிறார். கொங்கு மண்டல சதகம் போன்ற இலக்கியங்களையும் இக்கண்ணோட்டத்தில் ஆராய்கிறார்.
வேளாளர் குலப்பிரிவுகளைப் பாடிய கம்பர், கம்பர் பெற்ற திருமண வரி, கம்பரை போற்றிய கொங்கர் என்பன போன்ற பல செய்திகளை குறிப்பிடும் நூலாசிரியர், வேளாளர் கீர்த்திப் பாடல் போன்றவற்றை மேற்கோள் காட்டுகிறார். கொங்கு நாடு பற்றி கம்பர் பாடியதாக, ‘நீரெல்லாம் சேற்று நாற்றம்’ என துவங்கும் ஒரு பாடல் வழங்கி வருகிறது. மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடான பெருந்தொகைத் தொகுப்பிலும் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ‘காருலாம் கொங்கு நாட்டை கனவிலும் கருதொணாதே’ என, முடிகிற அப்பாடலை, கம்பர் பாடியிருக்க வாய்ப்பில்லை என, இராசு உறுதிப்பட கூறுகிறார். அவர் கருத்து ஏற்கத்தக்கதே.
அப்பாடலின் இறுதிவரி, ‘காருலாம் கெங்கை நாட்டை கனவிலும் கருதொணாதே’ என்பது தான் என்றும், அப்பாடலை பாடியவர் வசைகவி ஆண்டான் என்பவர் என்றும், பாஞ்சாலங்குறிச்சி – கயத்தாற்றுப் பகுதியில் மக்களிடையே  ஒரு கதை வழங்கி வருகிறது.
கெங்கை நாடு என்பது கங்கை கொண்டான் சீமை என, வழங்கப்படும் பகுதி. அப்பாடலில் வரும் வருணனை கள், கங்கை கொண்டான் சீமைக்கே பொருந்தும். கொங்குநாடு, எம்பெருமான் கவிராயர் இயற்றிய, தக்கை ராமாயணம் என்ற சார்பு நூலைப் பதிப்பிக்க முயன்ற, தி.அ.முத்து சாமிக் கோனார், யுத்த காண்டம் தவிர பிற ஐந்து காண்டங்களை தொல்லியல் துறை மூலமாக வெளியிட்ட கு.அருணாச்சல கவுண்டர் போன்ற பெரியோர்களை குறிப்பிட்டு எழுதும் புலவர் இராசு, எதிர்நூலான, ‘ராவண காவியம்’ எழுதிய புலவர் குழந்தையையும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பருக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையே உறவு நிலவி இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார்.
நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கோபி, நல்லமுத்து கம்பன் அறநிலைக்குழுத் தலைவர் முனைவர் செ.சு.பழனிசாமியோ, ‘கொங்கு நாட்டில் வாழ்ந்த கம்பர் பிற்காலத்தவர்’ என்றும் ‘கம்பராமாயணம் இயற்றிய கம்பருக்குச் சடையப்ப வள்ளல் ஆதரவு தந்தது போலப் பிற்காலக் கம்பருக்கு இந்த நூலின் ஆசிரியர் பேராதரவு தந்துள்ளார்’ என்றும் எழுதியுள்ளார்.
ஏர் எழுபது போன்ற நூல்கள் ராமகாதை எழுதிய அதே கம்பரால் பாடப்பட்டவை தாமா என்பது ஐயத்துக்குரியதே. ஆனால், கம்பருக்கு கொங்கு நாட்டுடன் – குறிப்பாகக் கொங்கு வேளாளர் குலப் பிரிவினருடன் நல்லுறவு இருந்திருப்பதற்கான சாத்தியம் உண்டு என்ற எண்ணமே, புலவர் இராசு அவர்களின் நூலைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுகிறது.
–  எஸ்.ராமச்சந்திரன்
(கட்டுரையாளர் – கல்வெட்டு ஆய்வாளர்)

Weight0.4 kg