பண்டைய சிங்கள இலங்கை வரலாறு, விஜயனின் வருகையோடு துவங்கியது என்பது நாம் அறிந்ததே.
ஆனால் மகாவம்சம் இல்லாமல் மற்ற சில சிங்கள இலக்கியங்கள் வேறு ஒரு வரலாற்றுக் கதையை நமக்கு கூறுகின்றன.
இலங்கைக்கு வணிகம் செய்ய வந்த வணிகக்குழுவினரை இலங்கை ஆட்சி செய்த யக்ஷர்கள் பிடித்து வைத்துக் கொண்டதாகவும், அவர்களை மீட்க வந்த படைக்குழுவின் தலைவனே சிங்கள என்ற பெயருடையவன் என்பதும் இந்நூலில் கூறப்படும் தகவல்கள் ஆகும்.
போரில் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தால், அங்கு ஆட்சி செய்த யக்ஷ அரசியை நீக்கிவிட்டு அத்தலைவன் இலங்கையின் ஆட்சியில் அமர்த்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை பாகியான் மற்றும் யுவான் சுவாங் ஆகியோரின் குறிப்புகளில் இருந்தும் அறிய முடிகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையான உறவைப் பற்றியும், இலங்கைக்கும் தமிழர்களுக்கும் இடையேயானக் கலாச்சார பண்பாட்டு மற்றும் சமூக பரவல்கள் பற்றியும், மாற்றங்கள் பற்றியும், மொழி அடையாளங்கள் பற்றியும், இன அடையாளங்கள் பற்றியும், இந்நூல் எடுத்துரைக்கின்றது.
தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் இலங்கையானது தமிழகத்தோடு தொடர்ச்சியான ஒரு நெருங்கிய தொடர்பினை கொண்ட நாடாகவே இருந்துள்ளது. தமிழக வரலாறும் இலங்கை வரலாறும் பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகின்றது. இந்நூலைப் படிக்கும் போது தமிழக வரலாற்றின் பல விடுபட்டப் பக்கங்கள், இலங்கையின் வரலாற்றில் கிடைப்பதாகவே நமக்கு அறிய முடிகின்றது.