தமிழகத்தின் ராபீன் ஹூட்டுக்கள் – மக்களைக் கவர்ந்த சமூகம்சார் கொள்ளையர்கள

சமூகச் சூழலாலும் – சமூகக் கொடுமையாலும் கொள்ளையராக மாறியவர்களில் சிலர், தங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சுரண்டும் வர்க்கத்துடன் பகையுணர்வும், தம்மை பொத்த நடுத்தர்கள் நிலக்களிடம் நட்புணர்வும் கொண்டிருந்தனர். இதனால் கையூட்டுப் பெற்று வளன் பட்டிக்குப் பணம் கொடுப் பவர்கள், கை ஆட்சிப் பெற்று வளம் படைத்தவருக்கு ஆதரவாகப் செயல்படும் அரசு அதிகாசொள் ஆகியோரிடம் கொள்ளையாகத் பதுடன் தையுமன்றி அக்கொள்ளைப் பொருளை ஏழைகளுக்கு வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டனர். இச்செயலே வழக்கமான கொள்ளையரிடமிருந்து இவர்களை வேறுபடுத்தியது. இத்தகைய கொள்ளையர் சமூகம் சார் கொள்ளையர் (Social Bandits) ஆவர் வளம் படைத்தவர்களிடமிருந்து பொருளையோ பணத்தையோ பறித்து ஏழைகளுக்கு வழங்குவது சமூகம்சார் கொள்ளையரின் அடிப்படை இயல்பாகும். மேலும் தற்காப்பிற் காகவோ, பழிவாங்குவதற்காகவோ அன்றி எவரையும் அவர்கள் கொலை செய்வதில்லை. அத்துடன் கிராமப் பகுதிகளில் ஆதிக்க சக்தியாகத் திகழும் வளம்படைத்தவர்களின் தன்னிச்சையான-அநீதியான, செயல்களைத் துணிவுடன் எதிர்த்து நிற்கின்றனர். அச்செயல்களால் பாதிக்கப்படும் ஏழைகளின் பாதுகாவலராயும் திகழ்கின்றனர்.

இத்தன்மைகள் காரணமாக இவர்கள் சமுதாயத்தின் முக்கிய அங்கமான பொதுமக்களிட மிருந்து முற்றிலும் விலகி நிற்பதில்லை. பொதுமக்களும் இவர்களது கொள்ளைச் செயலை வெறுத்து ஒதுக்குவதில்லை. அத்துடன் இவர்களைக் காட்டிக் கொடுக்காது, அடைக்கலமளித்தும் இவர்கள் மீது கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்துகின்றனர். இவர்களைப் புகழ்ந்து பாடல்களும் கதைப்பாடல்களும் கதைகளும் மக்களிடையே தோன்றி வழங்குகின்றன. எனவே தான் இவர்கள் சமூகம்சார் கொள்ளையர் எனப்படுகின்றனர்.

சமூகம்சார் கொள்ளையர் கிராமியச் சமுதாயத்தினின்றே தோன்றுவதாக ஹாப்ஸ்பாம் (1972:17) குறிப்பிடுவார். அவர்களை கண்ணியமிகு கள்ளர் (Nobel robber) என்று குறிப்பிடும் ஹாப்ஸ் பாம் அவர்களின் இயல்புகள் குறித்துப் பின்வருமாறு வரையறை செய்வார்.

முதலாவது, கண்ணியமிகு கொள்ளையன் குற்றம் புரிபவ னாகத் தனது தொழிலை ஆரம்பிப்பதில்லை. மாறாக மக்களின் வழக்கிற்கு ஒத்த ஆனால் ஆட்சியாளர்களால் குற்றம் எனக் கருதப்படும் ஒரு செயலைச் செய்ததால் அநீதிக்குட்படுத்தப் பட்டதாலோ ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டதாலோ கொள்ளையனாகிறான்.

இரண்டாவது, அவன் தவறுகளைச் சரி செய்கிறான்.

மூன்றாவது, ஏழைகளுக்குக் கொடுப்பதற்காகப் பணக்காரர் களிடம் இருந்து எடுக்கிறான்.

நான்காவது, தற்காப்பிற்காகவோ நியாயமான பழி வாங்கு தலுக்காகவோ அன்றி, யாரையும் கொலை செய்வதில்லை.

ஐந்தாவது, அவன் மீண்டும் மீண்டும் ஒரு கண்ணியமான குடிமகனாக மக்களிடமும் தன்னுடைய சமூகத்திற்கும் திரும்புகிறான். உண்மையிலேயே அவன் தன்னுடைய சமூகத்தை விட்டு விலகிச் செல்வதே இல்லை.

ஆறாவது, அவனுடைய மக்கள் அவனைப் போற்றி அவனுக்கு உதவி செய்கிறார்கள்.

ஏழாவது, துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டே அவன் சாகிறான். ஏனென்றால் சமூகத்தின் எந்த ஒரு நல்ல நபரும் அவனுக்கு எதிராக ஆட்சியாளர்களுக்கு உதவமாட்டார்கள்.

எட்டாவது, மக்களுடைய நோக்கில் அவன் கண்ணுக்குப் புலப்படாதவனாகவும் இருக்கிறான்.

ஒன்பதாவது, அவன் செயல்படும் பகுதியில் உள்ள அதிகாரி களுக்கும் மதக்குருக்களுக்கும் அக்கிரமக்காரர்களுக்கும் தான் அவன் எதிரியே தவிர நீதியின் ஊற்றான அரசருக்கோ சக்கரவர்த்திக்கோ அல்ல.

சமூகம்சார் கொள்ளையரின் செயல்

வளம்படைத்தவர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்கு வழங்கும் தன்மையில், முதன்மையானவனாக ராபின்ஹூட் என்பவன் உலகெங்கும் பரவலாக அறிமுகமாகியுள்ளான் (இவன் கற்பனைப் பாத்திரம் என்ற கருத்தும் உண்டு). பெருந்தன்மைக் கொள்ளையன் (Noble Robber) என்ற வகைப்பாட்டுள் ஹாப்ஸ்பாம் (1972:41) இவனை உட்படுத்துவார்.

தமிழகத்தில் சமூகம்சார் கொள்ளையர்களாக விளங்கியவர் களில், செம்புலிங்கம், சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கர் என்ற இருவரது செயல்பாடுகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டாகக் காண்போம்.

செம்புலிங்கம் குறித்து வழங்கும் பின்வரும் செய்திகள் அவர் கொள்ளைப் பொருளை ஏழைகளுக்கு வழங்கியதை உணர்த்து கின்றன.

மைலாடிக்கு அருகிலுள்ள பர்வதா மலையில் செம்புலிங்கமும் அவனது கூட்டாளிகளும் ஒளிந்து கொண்டிருந்தனர். அங்குள்ள வடலியில் பெண்ணொருத்தி பதனீர் காய்ச்சிக் கொண்டு தங்கி யிருந்தாள். அவள் இவர்களுக்கு உணவு சமைத்தளித்து உதவி னாள். மைலாடியிலுள்ள வட்டக்காரப் பிள்ளை என்பவரிடம் தன்னுடைய பாம்படங்களை அடகு வைத்திருந்த இப்பெண், திருமண வீட்டிற்குச் செல்ல பாம்படங்களைத் திருப்ப விரும் பினாள். 12 ரூபாய்க்கு அடகு வைத்திருந்த அப்பாம்படங்களுக்கு அசலும் வட்டியுமான 20 ரூபாய் செலுத்த வேண்டியிருந்ததால் அப்பெண்ணிற்குச் செம்புலிங்கம் 20 ரூபாய் கொடுத்து உதவினான்.

ஆனால் வட்டக்காரப் பிள்ளை மூன்று மாதங்களுக்குள் நகையைத் திருப்பாததால் அதனை விற்றுவிட்டதாகக் கூறி விட்டார். வருத்தத்துடன் திரும்பி வந்த அப்பெண்ணின் மூலம் நடந்ததையறிந்த செம்புலிங்கம் மாலை நேரத்தில் அவர் வீட்டிற்குத் தன் தோழர்களுடன் சென்று அவரை மிரட்டி அவர் அடகு பிடித்த நகைகளைக் கொள்ளையடித்து வந்தான். அப்பெண்ணின் பாம்படத்தையும் திரும்பக் கொடுத்தான் (த.எ.5).

சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கரின் சமூகம்சார் கொள்ளைச் செயல்களை இனிக் காண்போம். சங்கரபாண்டிய புரத்தில் வசதி யான நாயக்கர் ஒருவர், ஏழை நாயக்கர் ஒருவரின் நிலத்தை நூறு ரூபாய் கடன் கொடுத்துக் கைப்பற்றிக் கொண்டார். நிலம் நூறு ரூபாய்க்கு மேல் மதிப்புடையது. அந்நிலத்தில் விளைந்த கதிரை, வசதியுள்ள நாயக்கர் பொறுக்கிக் கொண்டு வந்து போட்டிருந்தார். ஏழை நாயக்கருக்காக கந்தசாமி நாயக்கர் பேச வந்தார். நிலத்தை ஏழை நாயக்கரிடம் கொடுக்கும்படிக் கூறியதுடன் கதிர்களையும் ஏழை நாயக்கரே எடுத்துக் கொள்ளும்படிச் சொன்னார். அத்துடன் வசதி படைத்த நாயக்கரின் காளைமாட்டை ஓட்டிச் சென்று விட்டார் (த.எ.1).

தருமத்துப்பட்டி என்னும் கிராமத்தில் சாமி நாயக்கர் என்ற நிலப்பிரபு ஊராரை மதிக்கவில்லை. ஊர் மகமையும் தருவதில்லை. 1938ஆம் ஆண்டு, கடுமையான பஞ்சகாலம். ஏழை மக்கள் உணவு தானியம் கிடைக்காது வருந்தினர். கந்தசாமி நாயக்கரும், சன்னாசித் தேவரும் இங்கு சென்று சாமி நாயக்கர் தோட்டத்தில் விளைந் துள்ள கம்பு கதிர்களைப் பொறுக்கியெடுக்கும்படிக் கூறிவிட்டு மக்களுக்குப் பாதுகாவலாக நின்றனர். இதுபோலவே சிப்பிப் பாறை – பாறைப் பட்டி – சங்கரபாண்டியபுரம் ஆகிய கிராமங் களிலும் வளமான நிலக்கிழார்களின் வயல்களில் தானியக் கதிர் களைப் பொறுக்கும் படி மக்களைத் தூண்டினர். இச்செயலின் போது நிலக்கிழார்கள் மக்களைத் தடுக்காதவாறும் பார்த்துக் கொண்டனர் ஆனால் சிறு நிலவுடைமையாளர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை (த. எ. 2). சுந்தசாமி நாயக்கரின் இத்தகைய செயல்களை அடிப்படை யாகக் கொண்டே அவரைப் புகழும் பாடல் ஒன்றில் ‘அண்டி வருவோரை ஆதரிக்க வல்லவராம்’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன எனலாம் (த.எ.1).

கொள்ளையடிப்பதுடன் மட்டுமின்றி அதிகாரிகளை எதிர்க்கும் இவர்களது செயலும் பொதுமக்களைக் கவர்ந்துள்ளன.

“செம்பு லிங்கம் குறித்து வழங்கும் பின்வரும் பாடல்கள் இதனை உணர்த்து கின்றன.
ஏட்ட இருக்க வச்சான்
இன்சு பெட்டர கட்டிவச்சான்
போலிசு சூபரென்டெ
போடச் சொன்னான் தோப்புக்கரணம் (த.எ.3)

சப்இன்ஸ்பெக்டர் சட்டையை சந்தடி ஒன்றும் இல்லாமே சல்லாபமாத் தான்கழற்றி உல்லாசமாப் போட்டுக் கொண்டு வாரார்சொக்கத் தங்கம்-நம்ம நாடார்ஜம்பு லிங்கம் குதிரைமேலே ஏறிவர குதிரைக்காரன் ஓடிவர குறுக்கேநின்ற போலீஸ்காரன் கும்பிட்டொரு பக்கம் நிற்க வாரார்சொக்கத் தங்கம்-நம்ம நாடார்ஜம்பு லிங்கம்.”

(ஜகநாதன் 1975:182-83)

இப்பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் மிகைப்படுத் தப்பட்ட செய்திகள் என்பதில் ஐயமில்லை. போலீஸ் மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்தையும் வெறுப்பையும், வெளிப்படுத்த முடியாத நிலையில், சமூகம்சார் கொள்ளையரின் அஞ்சாமை அவர்களைக் கவர்கிறது. இதன் வினைவாகத் தங்கள் விருப்பங் களை இவர்களின் செயலாகக் கூறுவதன் வாயிலாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

மக்கள் போற்றும் காரணம்

இதுவரை நாம் பார்த்த செய்திகளின் அடிப்படையில் சமூகம் சார் கொள்ளையர் மக்களால் போற்றப்படுவதற்கான காரணத்தை இவ்வாறு வகைப்படுத்தலாம்:

1) நிலஉடமையாளர்களைக் கொள்ளையடித்தல்-கொலை செய்தல்.

2) வட்டித் தொழில் புரிவோரைக் கொள்ளையடித்தல் கொலை செய்தல்.

3) அதிகார வர்க்கத்தினரை எதிர்த்தல்-கொள்ளையிடல்-கொலை செய்தல்.

4) துன்பப்படுவோருக்கு உதவுதல்

அறியாமை – அச்சம் – வறுமை- நிலப்பிரபுத்துவக் கொடுமை ஆகியவற்றின் பிடியில் சிக்கித்தவிக்கும் மக்கள் அதினின்றும் விடுபட வழியறியாது நிற்கின்றனர். இத்தகைய சூழலில் தனியொரு மனிதன் ஒரு கலகக்காரனாகக் கிளர்ந்தெழுந்து கொலை கொள்ளை போன்றவற்றைச் சுரண்டும் வர்க்கத்தின் மீது நடத்தும் போது, பொதுமக்கள் தங்களால் முடியாத ஒன்றைத் துணிவுடன் மேற்கொண்டமைக்காக அவனைப் போற்றுகின்றனர். இங்குக் கொள்ளைச் செயலைவிட ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் தண்டிக்கும் அவனது துணிச்சல் போற்றப்படுகிறது.

தங்களின் வெறுப்புக்கு ஆளானவர்களிடமிருந்து கொள்ளையடித்ததுடன் நின்றுவிடாது, கொள்ளைப்பொருளை வறுமையில் வாடுபவர்களுக்கு வழங்கும் சமூகம்சார் கொள்ளையரின் செயலும் மக்கள் மனதைக் கவர்கிறது. இதனால் இவர்களைக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கற்பனையடங்கிய பாடல்களும் கதைகளும் மக்களிடையே தோன்றி வழங்குகின்றன.

நூல்: அடித்தள மக்கள் வரலாறு
₹310

Buy: https://heritager.in/product/adithala-makkal-varalaru/