சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும்
வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களையும், கட்டிடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அண்மையில் இரண்டு வார கால சர்வதேச விழா ஒன்று நடைபெற்றது. எகிப்தில் பாயும் நைல் நதியில் கட்டப்படும் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்படும் போது, அந்நாட்டின் பல புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்கள் நீரில் மூழ்கிவிடும் என்பதால், அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிப் பாதுகாக்கும் பெருமுயற்சி நடந்து வருகிறது. இந்த விழாவும் அந்த முயற்சியை ஒட்டியே எழுந்தது. எகிப்தில் நடக்கவிருக்கும் இச்சம்பவம் போன்ற ஒன்று நம் நாட்டிலும் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது.
குண்டூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில், கிருஷ்ணா நதியின் வலது கரையில், குன்றுகளின் நடுவே அழகிய சூழலில் அமைந்துள்ள நாகார்ஜுனகொண்டம் என்னும் இடம், ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் புகழுடன் ஆட்சி செய்த இக்ஷ்வாகு மன்னர்களின் முக்கிய நகரமான விஜயபுரி இருந்த இடமாகும். கிருஷ்ணா நதியின் குறுக்கே அமைந்த நந்திகொண்டம் அணைக்கட்டு பூர்த்தியானவுடன், அந்த இடத்தில் 60 முதல் 70 அடி உயரத்திற்குத் தண்ணீர் நிரம்பி விடுவதால், நாகார்ஜுனகொண்டத்தின் பழைய சின்னங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஏற்கெனவே தோண்டி எடுக்கப்பட்ட சின்னங்கள் அல்லாமல், மேலும் அகழ்ந்து பார்க்கப்பட வேண்டிய பகுதிகளும் இருந்தன. இதனால், மத்திய அரசின் தொல்லியல் துறையினால் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் தோண்டி ஆராய்ந்து, கிடைத்த பொருட்களை அங்கேயே பத்திரமாக வேறு ஓர் இடத்திற்கு மாற்றி, ஒரு பொருட்காட்சிச்சாலையை அமைத்திருக்கிறார்கள்.
நடுகல் மரபு: சங்க காலம் முதல் விஜயபுரி வரை
அங்கே கிடைத்த அரிய பொருட்களுள் இரண்டு நடுகற்களும் அடங்கும். அவ்விரண்டுமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காக நிறுவப்பட்டவை என்பதால் அவற்றின் முக்கியத்துவம் அதிகமாகிறது.
போர்களில் வீரமரணம் எய்திய வீரர்களின் பெயரையும் சிறப்பையும் கல்லில் பொறித்து, அதனை நாட்டி வழிபடும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே நம் நாட்டில் இருந்து வருகிறது. இது பழைய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”
என்று அகநானூற்றுப் பாடல் (131) ஒன்று கூறுகிறது. அவ்விதம் நிறுவப்பட்ட கற்களும் நமக்குக் கிடைத்துள்ளன.
வேங்கடத்திற்கு வடக்கேயுள்ள மொழிபெயர் தேசத்தில்தான் அவை அதிகமாக இருந்தன என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. இன்றும் நமக்குக் கிடைக்கும் அத்தகைய கற்களும் அந்தப் பிரதேசத்திலிருந்தே அதிகமாக உள்ளன.
பல சமயங்களில் இறந்த வீரனின் பெயரும் புகழும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அவனுடைய உருவமும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சிலவற்றில் அவன் போரிட்டு வீரமரணம் அடைவதும், விமானத்தில் வான மங்கையர் அவனை வீரசொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதும் போன்ற நிகழ்வுகள் ஒன்றன்மேல் ஒன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அப்போது சாசனம் அடியிலும், சிற்பங்கள் தலையிலும் காணப்படும்.
ஸ்ரீ சாந்தமூலனின் “சாயாதம்பம்”
நாகார்ஜுனகொண்டத்தில் கிடைத்த இரண்டு நடுகற்களுள் ஒன்று, இக்ஷ்வாகு வம்சத்து ஆட்சியை நிறுவிய முதல் அரசனான ஸ்ரீ சாந்தமூலனுடையது. விஜயபுரி என்ற நகரம் அவனுடைய ஆட்சிக் காலத்தில்தான் தோன்றியது என்றும் கூறுவர். தூண் உருவமாக உள்ள அந்த நடுகல்லிலும் சாசனம், சிற்பம் ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.
நடுகல்லின் சிற்பங்களும் கல்வெட்டும் உணர்த்தும் காட்சிகள்
வட்டமான உச்சியையுடைய அந்தத் தூண் ஆறு அங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அடியில் உள்ள அங்கணத்தில்தான் பதின்மூன்று வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள ஐந்து அங்கணங்களும் புடைப்புச் சிற்பங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவை ஏதோ ஒரு சம்பவத்தை உணர்த்தும் வகையிலேயே செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எளிதில் புலப்படும்.
அரசனின் கொடை மற்றும் போர் புறப்பாடு:
கல்வெட்டுக்கு மேலே உள்ள முதல் கட்டத்தில் எட்டு மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவர்களில் முக்கியமானவன், தலையில் குல்லாய் அல்லது மகுடம் போன்ற ஒன்றை அணிந்து, இடது கையில் வில்லை ஏந்தி நிற்கிறான். இவன் ஓர் அரசனாக இருக்க வேண்டும். அவனுக்கு வலது புறத்தில் ஒருவர் இரு கைகளாலும் ஒரு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு நிற்கிறார். மற்றவர்கள் அவனுக்குப் பின்னால் உள்ளனர். இது, அரசன் தன் தேவியருள் ஒருத்தி நீர் வார்க்கவும், மற்ற நால்வரும் அதைத் தொட்டுக்கொண்டு நிற்கவும், பொன்னையும் பொருளையும் தானம் வழங்கும் காட்சியைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
அதற்கு மேலே உள்ள அங்கணத்தில் வேகமாக நடந்து செல்லும் யானையின் உருவம் ஒன்று காணப்படுகிறது. அதன் முதுகில் இருவர் உட்கார்ந்திருக்கிறார்கள். இது, யானைப் படையைச் சேர்ந்தவர்கள் போர்க்களத்திற்குச் செல்லும் முறையைப் போல சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, அரசன் போருக்குச் செல்வதைக் காட்டுவதாக அமைகிறது.
இராஜபோகம் மற்றும் விண்ணுலகப் பயணம்: அதற்கு மேலே உள்ள கட்டத்தில் அரசன் ஐந்து மங்கையரோடு காணப்படுகிறான். அவர்களில் மூவர் கீழே உட்கார்ந்து சங்கீதத்தால் அரசனை மகிழ்விப்பது போலத் தெரிகிறது. இந்தக் கட்டத்தின் சிற்பம், அவன் இராஜ்யத்தின் சுகபோகங்களை அனுபவிக்கும் காட்சியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அதற்கும் மேலே உள்ள சிற்பத்தில் அதே அரசன் நான்கு மங்கையர்களோடு இருக்கிறான். அவர்களில் ஒருத்தி அரசனுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறாள். பிற்காலத்து நடுகற்களில் வீரமரணம் அடைந்த போர்வீரனைத் தேவமாதர்கள் விமானத்தில் ஏற்றி வானுலகம் அழைத்துச் செல்லும் காட்சியைச் சித்தரிப்பது போலவே இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வத்தன்மை அடைதல்: கடைசியாக உள்ள அங்கணத்தில் சைத்தியம் அல்லது ஸ்தூபம் போன்ற உருவம் ஒன்று காணப்படுகிறது. புத்த மதச் சிற்பங்களில் புத்தர் பெருமான் பரிநிர்வாணம் அடைந்ததை ஸ்தூப உருவத்தால் உணர்த்துவது வழக்கம். அதைக்கொண்டு அம்மன்னன் இறந்து தெய்வமாக மாறியதையே அது காட்டுவதாகக் கொள்ளலாம்.
“சாயாதம்பம்” – காலம் மற்றும் நிறுவியவர்கள்
சாசனத்தில் இந்த நடுகல், சுவர்க்கம் அடைந்த ஸ்ரீ சாந்தமூலனுக்கு நிறுவப்பட்ட “சாயாதம்பம்” என்று காணப்படுகிறது. யாருக்காக நிறுவப்பட்டதோ அவனுடைய சாயல் அல்லது உருவம் கொண்ட ஸ்தம்பம் என்றே அது பொருள்படும். அதிலிருந்து அந்த நடுகல்லில் காணும் அரச உருவம் ஸ்ரீ சாந்தமூலனுடைய உருவமே என்பது தெளிவு.
இந்தக் கல், அவன் மகனான வீரபுருஷதத்தனுடைய ஆட்சியில், இறந்த அரசனின் உடன்பிறந்தார் பதின்மூன்று பேர், தாயார் (சொந்தத் தாயும் மாற்றாந்தாய்களோ அல்லது மாற்றாந்தாய்களே) பதினொருவர், தேவியர் ஐவர், காமக்கிழத்திகள் இருவர் ஆகிய முப்பதொரு பெண்மணிகளால் நிறுவப்பட்டது. இந்தச் செய்தி அதிலே பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டிலிருந்து தெரிகிறது.
வீரபுருஷ தத்தனுடைய ஆட்சியில், விஜய ஆண்டில், மழைக்காலத்தில் முதற்பக்ஷத்தில் இரண்டாம் நாள் அந்தக் “சாயாதம்பம்” நிறுவப்பட்டதாக அந்தச் சாசனம் கூறுகிறது. அக்காலத்தில் காலத்தைக் குறிப்பிடுவதற்கு இப்போது நாம் கொண்டிருப்பதைப் போல மாதம் என்ற வழக்கம் இல்லை. மழைக்காலம் (வருஷாகாலம்), பனிக்காலம் (ஹேமந்தம்), வெயிற்காலம் (கிரீஷ்மம்) என்று வருடத்தை மூன்று பிரிவுகளாகக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் எட்டுப் பக்ஷங்கள் உண்டு. பக்ஷம் பதினைந்து நாட்கள் கொண்டது. இந்த முறைப்படி சாசனங்களில் அரசனின் ஆட்சியின் இத்தனாவது ஆண்டு, இன்ன பருவத்தில், இத்தனையாவது பக்ஷத்தில், இத்தனாம் நாள் என்று குறிப்பதே வழக்கம். ஆண்டு, பக்ஷம், நாள் ஆகிய மூன்றையும் குறிக்கும் எண்கள் எண் உருவத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் கூடவே எழுத்தாலும் எழுதப்பட்டிருப்பது உண்டு. இந்தச் சாசனத்திலும் பக்ஷம், நாள் ஆகிய இரண்டும் எண் உருவத்திலும் எழுத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண்டு மட்டும் “விஜய” என்று காணப்படுகிறது.
ஓர் ஆசிரியர் “விஜய” என்பதை “விம்சய” என்று வாசித்து, இருபதாம் ஆண்டு என்று கொண்டார். அதன்படி வீரபுருஷ தத்தனுடைய ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அது நிறுவப்பட்டது என்று கருதினார். அது அவனுக்கு முன் ஆட்சி புரிந்தவனும் அவனுடைய தந்தையுமான ஸ்ரீ சாந்தமூலனுடைய நினைவுச் சின்னம் என்றும், அவன் இறந்து இருபது வருடங்களுக்குப் பிறகு நிறுவப்பட்டது என்றும் ஆகும். நீண்டகாலம் பிடித்ததற்கான காரணம் தெளிவாக இல்லை.
கல்லில் “விஜய” என்ற சொல் தெளிவாக உள்ளதைக் கண்ட மற்றோர் ஆசிரியர், அது இருபதாம் ஆண்டைக் குறிப்பதாக ஆகாது என்றும், பிரபவ என்று ஆரம்பிக்கும் அறுபது வருடச் சக்கரத்தில் ஒன்றான விஜய என்னும் ஆண்டையே குறிப்பதாகும் என்றும், அது கி.பி. 273 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்றும் கருதினார். பிரபவாதி அறுபது வருடச் சக்கரம் அப்போது வழக்கில் இருந்ததா என்பதே நமக்குத் தெரியாது. சாசனங்களில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே அது குறிப்பிடப்பட்டுக் காணப்படுகிறது.
இவற்றைக் கவனிக்கையில், விஜய சம்வத்ஸரம் என்பது பிரபவாதி சக்கரத்தில் வரும் வருடமாக இருத்தற்கில்லை என்பதும், அரசனுடைய ஆண்டையே குறிப்பதாக இருத்தல் வேண்டுமென்பதும் தெளிவாகும். உண்மையில், அது ஆட்சியின் முதலாம் ஆண்டைக் குறிப்பதாகவே தெரிகிறது.
“விஜய” – முதல் ஆண்டின் குறியீடு
நம் நாட்டில் ஏதாவது ஒன்றை எண்ணி கணக்கிடும்போது, முதலாவதை “ஒன்று” எனச் சொல்வதில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வர வர்மனுடைய ஆட்சியின் முதலாம் ஆண்டு கொண்டதாக திருவள்ளூர் தாலுகாவில் உள்ள சிற்றம்பாக்கத்திலிருந்து கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டு ஒன்றில், அந்த ஆண்டு “தலைத்தாவது” என்றே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் குழந்தையை “தலைச்சன்” என்றும், கல்யாணத்திற்குப் பிறகு நடக்கும் முதல் தீபாவளியைத் “தலைத்தீபாவளி” என்றும் குறிக்கும் வழக்கம் இன்றைக்கும் நம்மிடையே உள்ளது. அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறையின் முதல் நாள் “தலைப்பிறை” என்று சாசன வழக்கிலும் காணப்படுகிறது.
அந்த வழக்கத்தையொட்டியே அரசனின் ஆட்சியின் முதலாம் ஆண்டு “விஜய” என்று குறிக்கப்பட்டு வருகிறது போலும். வியாபாரிகள் நெல் முதலியவற்றை அளக்கும்போது “லாபம், இரண்டு, மூன்று” என்ற வரிசையிலேயே இன்றைக்கும் கணக்கிடுவர். அதிலிருந்து அவர்கள் முதல் அளவை “லாபம்” என்று குறிப்பது தெரியவரும். வியாபாரிக்கு லாபம் எப்படியோ, அதேபோன்றது அரசனுக்கு வெற்றி. பிற்காலத்துச் சாசனங்களில் அரசனுடைய ஆட்சியின் ஆண்டை “விஜயராஜ்ய சம்வத்ஸரம்” (வெற்றி ஆட்சியின் ஆண்டு) என்று கொடுப்பதே பெருவழக்கு.
—-
தமிழகக் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு இன்றும் அமரர் தி.நா.சுப்பிரமணியன் அவர்கள் குருவாகவும், குருக்களின் குருவாகவும் போற்றப்படுகிறார். அவரது கல்வெட்டுப் புலமையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அமரர் ஐராவதம் மகாதேவன், 1998 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் கழகத்தில் அவர் பெயரில் ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிறுவினார். இந்தச் சொற்பொழிவுகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தி.நா.சுப்பிரமணியன் அவர்களின் கல்வெட்டு ஆய்வுகள் மற்றும் எழுத்துக்கள், தமிழக வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளன.
சுதேசமித்திரன் நாளிதழ் வார மலர்களில் அவர் எழுதிய கட்டுரைகள், ஆழ்ந்த தமிழ், சமஸ்கிருத இலக்கியப் புலமையையும், நடுநிலையையும், பரந்த சிந்தனை ஓட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன. கல்வெட்டுத் தொன்மைச் சொற்களுக்கு வேர்ச்சொல் விளக்கம் அளிப்பதிலும், பழஞ்சொற்கள் திரிந்த விதத்தை பிற மொழிகளுடன் ஒப்பிட்டு விளக்குவதிலும் அவர் சிறந்து விளங்கினார். மானம் பேர்த்த கடுங்கோன், பாழியும் பூழியும், கேள்வியும் வேள்வியும் போன்ற சொல்லாடல்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள் அவரது நுட்பமான மொழி அறிவைப் பறைசாற்றுகின்றன. தனது ஊரான உடையாளூரில் உள்ள கிராம தேவதைகளின் வழிபாடு குறித்தும், ஆடி மாத நிகழ்வுகள் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள், சமூகவியல் மீதான அவரது ஈடுபாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன.
தி.நா.சுப்பிரமணியன் அவர்கள் இந்திய-சீனப் போர்க் காலத்தில் சீனர்களின் தமிழக மற்றும் இலங்கைத் தொடர்புகள் குறித்து எழுதிய கட்டுரைகள், அவரது சர்வதேச வரலாற்றுப் பார்வையையும் தென்கிழக்கு ஆசியக் கல்வெட்டுகளிலும் வரலாற்றுச் செய்திகளிலும் அவர் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கை அறிஞர் அமரர் கைலாசபதி, அவரை “தவம் புரிந்த கர்மயோகி” என்று பாராட்டியது, அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் உணர்த்துகிறது. தி.நா.சுப்பிரமணியன் அவர்களின் எழுத்துக்களும் ஆய்வுகளும் வருங்காலத் தலைமுறை ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து, தமிழகத் தொல்லியல் சமூகத்திற்கு மேலும் பல ஆய்வுகளை முன்னெடுக்க உந்துசக்தியாகத் திகழ்கின்றன. அவரது புகழ் தமிழின் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்
விலை: 450
Buy Link : https://heritager.in/product/t-n-subramaniyan-essays/