பல்யானைச் செல்கெழு குட்டுவன் குடநாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல் யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக்குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ் பெறுவதில் தணியா வேட்கையுடையவனாயிருந்தான். குட்ட நாட்டுக்குக் கிழக்கில் தென்மலைத் தொடரின் மேற்கில் பரந்திருக்கும் மணல் பரந்த நாட்டுக்குப் பூமி நாடென்று அந்நாளில் பெயர் வழங்கிற்று. அந்நாட்டவர் பூமியர் எனப்படுவர். பூமி நாட்டவர் தமக்கு அண்மையில் நிற்கும் தென்மலைக் காட்டில் வாழும் யானைகளைப் பிடித்துப் பயிற்றுவதில் தலைசிறந்தவர். அவர்கள் குட்ட நாட்டுக் குட்டுவர் ஆட்சியின் கீழிருந்து அவர்கட்குப் பெருந்துணை புரிந்தனர். அதனால் குட்டுவன் படையில் ஏனைப்படை வகை பலவற்றினும் யானைப் படையே சிறந்திருந்தது,அச்சிறப்புப் பற்றிக் குட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று சான்றோர் வழங்கும் சால்பு பெற்றான்.
குட்ட நாட்டின் வடபகுதிக்கு நேர்க்கிழக்கில் நிற்கும் வடமலைத்தொடரின் மலைமிசைப் பகுதிக்குப் பாயல் நாடென்பது அந்நாளில் வழங்கிய பெயர். அப்பாயல் நாட்டின் கீழ்ப்பகுதியில் இப்போது நும்பற்காடு என வழங்கும் உம்பற்காட்டில் குறுநிலத் தலைவர் சிலர் வாழ்ந்து வந்தனர். வடக்கே இமயவரம்பனது புகழ் மிகுவது கண்டு அவர்கள் பொறாமை மிகுந்து குட்ட நாட்டிற்புகுந்து குறும்பு செய்தனர். அக்காலத்தே இப்போது ஆனை மலையென வழங்கும் தென்மலைப் பகுதியில் முதியர் என்பார் வாழ்ந்து வந்தனர். உம்பற்காட்டுக் குறுநிலத் தலைவரது குறும்பு அவர்கட்கு இடுக்கண் விளைத்து வந்தது. உம்பற்காட்டின் வடபகுதியில் அகப்பா என்பது அதற்குத் தலைமையிடமாய் இருந்தது. உம்பற்காட்டு வேந்தர் அகப்பாவி லிருந்து கொண்டு குட்டுவனுக்கு மாறுபட்டொழுகினர். இமயவரம்பன் வடவாரியரோடும் கடற் கடம்பரோடும் போரிட்டொழிக்க வேண்டியிருந்தமையால் குட்டுவனே போர் மேற்கொண்டு உம்பற்காட்டுக் குறும்பரை தலைநகரான அகப்பா, இப்போது குறும்பர் நாடு தாலுக்காவிலுள்ள மீப்பாயூர்க்குக் கிழக்கில் இருந்திருக்கு மெனக் கருதப்படுகிறது. இப்பகுதி இடைக்காலத்தே பாய்மலை நாடு, என்றும் பாய்நாடு என்றும் வழங்கியிருந்து, பாயூர் மலை நாடென்று பின்னர் வழங்கிற்று. குறும்பர் நாடு தாலுக்காவில் பாயூர் மலைநாடு ஒரு பகுதியாகவே இன்றும் உள்ளது. இப்பகுதியை மேலை நாட்டு யவனர் குறிப்பு பம்மலா (Bammala) என்று குறிக்கின்றது. இது வடக்கில் சிறைக்கல் தாலூக்கா வரையில் பரந்திருந்தது. அப்பகுதியில் இப்போது இரண்டுதரா நாடெனப்படும் பகுதிக்குப் பழம்பெயர் பாநாடென்று வழங்கிற்றெனச் சிறைக்கல் வரலாறு கூறுமிடத்து வில்லியம் லோகன் என்பார் குறிக்கின்றார்.
அகப்பாவென்னும் நகரம் உயரிய மதிலும் பெருங்காடும் அரணாகக் கொண்டு சிறந்து விளங்கிற்று. மிகப்பலவாய்த் திரண்ட யானைப் படையும் பிறபடைகளும் உடன்வர, குட்டுவன் உம்பற்காட்டிற்குட்புகுந்தான். அவனது படைப் பெருமையறியாது எதிர்த்த குறுநிலத்தலைவர் எளிதில் அவன் படைக்குத் தோற்றனர். அவர்களுட்பலர் குட்டுவன் அருள் வேண்டிப் பணிந்து, திறை தந்து, அவன் ஆணைவழி நிற்பாராயினர். ஆங்கு வாழ்ந்த முதியர் அவனுக்குப் பெருந்துணை புரிந்தனர். உம்பற்காட்டில் சேரரது ஆட்சி நடைபெறுவதாயிற்று.
உம்பற்காட்டைத் தன் செங்கோலில் நிறுத்திச் சிறந்த குட்டுவன், உம்பற்காட்டுக் குறுநிலத்தலைவரும் முதியரும் துணை புரிய அதற்கு வடபாலில் உள்ள அகப்பா நோக்கிச் சென்றான். அகப்பாவிலிருந்து பகை செய்தொழுகிய வேந்தர் கடும்போர் உடற்றினர். குட்டுவன் உழிஞை சூடிச் சென்று அகப்பாவின் கடிமிளையும் கிடங்கும் நெடுமதிலும் பதணமும் சீர் குலைந்தழியக் கெடுத்துப் பகை புரிந்தொழுகிய தலைவர் பலரைக் கொன்று, வெற்றி கொண்டான். நாட்டின்பல பகுதியும் குட்டுவன் படைத்திரளால் அழிவுற்றன.
சேர மன்னர் வரலாறு – சு .துரைசாமிப்பிள்ளை
240/-
Buy Link: https://heritager.in/product/seramannar-varalaru/
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்