கிறிஸ்தவ பரவலும் அதனை எதிர்த்த சேதுபதிகளும்

“கிறிஸ்தவம் – இந்தக்காலகட்டத்தில் கிறிஸ்தவம் வரையறுக்க வியலாத ஒரு கயமை நிலையை அனுபவித்தது. அக்காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கப் பணியாக பிரிட்டோ வின் வலிமையானப் பிரச்சாரம் தொடர்ந்தது. ஆனால், சோகமானத் தோல்வியில் முடிந்தது. மறவர் நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்பிய டி பிரிட்டோ, ரகுநாத சேதுபதியின் மிரட்டலால் வேறுவழி யில்லாமல் பின்வாங்கியிருந்தார். ஆனால், அவர் பயந்துவிட வில்லை. எதிராளியின் அட்டூழியங்களுக்கு இடையிலும், அவரதுபணி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. எதிரிகள், கொள்ளைக்காரர்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிடமிருந்து தொல்லைகள் அவருக்கு வந்துகொண்டேயிருந்தன. பணியாற்றியக் காலம் முழுவதும், அவர் ஏதோ ஒன்றை சந்தித்துக்கொண்டே இருந்தார். கொள்ளைநோய், கடும்புயல், வெள்ளம் மற்றும் சீற்றம்கொண்ட விலங்குகள் ஆகியவற்றிற்கிடையிலும் உயிர் பயமில்லாமல் பணியாற்றினார். வணக்கத்திற்குரிய இடம் அல்லது பலிபீடத்தில் தனது இன்னுயிரைக்கொடுக்கத் தயாராக இருந்தாரே யொழிய, ஒருபோதும் பின்வாங்கியவராக இருக்கவில்லை. பெரும் எண்ணிக்கையிலான மக்களை அவர் மதம்மாற்றினார். ராம்நாட் அரியணைக்கு வாரிசு எனக்கூறப்பட்ட இளவரசர் தடியத்தேவரை, கிழவன் சேதுபதியின் கண்காணிப்பையும்மீறி மதம் மாற்றுவதில் வெற்றிகண்டார். தடியத்தேவரின் இளையமனைவி கிழவன் சேதுபதியின் கொழுந்தியாள். மதம்மாறியதும் இளையமனைவியை தடியத்தேவர் கைவிட்டுவிட்டார். கணவனால் கைவிடப்பட்ட நிலைகண்டு வெகுண்ட அப்பொர், பிரிட்டோவை மன்னிப்பவளாக இல்லை. தனது அக்காள் கணவன், தனது மூத்த மச்சான் கிழவன் சேதுபதியின் அரசசபைக்கு ஓடினாள். தனக்கு விதியாய் நேர்ந்துவிட்ட சங்கடத்தை அழுதுதீர்த்தாள். உடனே கிறிஸ்தவத்துக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றுகூடினார்கள். கிழவனின் மனதை மாற்றினார்கள். பிரிட்டோவுக்குக் கடும்தண்டனை வழங்கவேண்டு மென்று உசுப்பேற்றினார்கள். கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளால் நாடு அழிந்து கொண்டிருப்பதாகவும் பெருமளவில் மக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவுவதால் அவர்களின் எண்ணிக்கைப் பெருகி, கிழவனின் அரசநிலையில்கூட ஒருநாள் இடர்ஏற்பட்டு, தடியத்தேவரை அவர்கள் அரசனாக்கிவிடுவார்கள் என்று குறிப்பிட்டுப் பேசினார்கள். அதில் பெரும்உத்வேகம் பெற்ற கிழவன் சேதுபதி, மதச்சார்புநோக்கியப் பற்றை விட்டுவிடும் அளவுக்கு, பிரிட்டோவுக்கு கடும் துன்பங்களைக் கொடுக்க முயற்சித்தார். அதற்கெல்லாம் கிஞ்சிற்றும் அசைபவராக பிரிட்டோ இருக்கவில்லை. மாறாக, மதம்மாற்றும் புகழொளியில் அவர் மீண்டும்மீண்டும் ஈடுபட்டார். எதிராளியாக இருந்த தடியத் தேவரின் செல்வாக்கால், தனது பட்டம் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் அலைக்கழித்து, முன்னேற்றத்தை நோக்கிய இடத்தி லிருந்து நழுவிக்கொண்டேயிருந்தார். அதனால், தனது கோபம். பழி, ஆங்காரம் அனைத்தையும் பிரிட்டோமீது திருப்பினார். தனது சாம்ராஜ்ஜியத்துக்குள்ளிருக்கும் அத்தனைப் பேராலயங்களையும் இடித்துநொறுக்கும்படியும் பிரிட்டோவைக் கைதுசெய்யும்படியும் செய்யபிட்டார். 1693ஆம் ஆண்டு ஜனவரி, 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிரிட்டோ, 11ஆம் தேதி ராம்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்தநேரத்தில் தடியத்தேவர் மறவநாட்டுத் தலைநகரில் தங்கியிருந்தார். அவரது செல்வாக்கு, பிரிட்டோவுக்கு உறுதிசெய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. சேதுபதி, தனது முடிவை செயல்படுத்தமுடியாமல் அல்லாடினார். பெரிய அளவிலான மதம்மாறியிருந்த கிறிஸ்தவ மக்கள் எண்ணிக்கையும், பிரிட்டோவின் விதியை நிர்ணயிப்பதில் மிகமுக்கியப்பங்கு வகித்தது. அதனால் சமயோசிதமாக சேதுபதி, பிரிட்டோவை சாதாரணமாக நாடுகடத்துவதுபோல, தனது சகோதரனின் நாட்டுக்குக் கடத்திவிட்டார். ஆனால் ரகசியமாக தனது சகோதரனிடம், பிரிட்டோவைக் கொன்றுவிட உத்தரவிட்டிருந்தார். மறவநாட்டு எல்லைக்குள், பாம்பாற்றின் கரையில் அமைந்திருந்த ஓரியூருக்கு, அனுப்பி வைக்கப்பட்டார். அந்தஇடத்துக்கு, ஜனவரி, 31 ஆம்தேதி பிரிட்டோ வந்துசேர்ந்தார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிகழ்வுகள் குறித்து, 1693 ஆம் ஆண்டு பிப்ரவரி, 3 ஆம்தேதியிட்டு சிறையிலிருந்து அவர் எழுதியக் கடிதம், ‘ஜனவரி, 28ஆம் நாள், எனக்குத் தீர்ப்பளிக்கப்பட்டு, ரங்கநாத தேவன் முன்னிலையில் தூக்கிலிட அனுப்பிவைக்கப்பட்டுள்ளேன். …..நான் கிறிஸ்தவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றேன். சேதுபதியின் சகோதரன் ஓரியூர் தேவனுக்கு, ‘தாமதமில்லாமல் என்னைக்கொன்றுவிட’ ரகசிய உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி, 31ஆம் தேதி இங்கு கொண்டுவரப்பட்டேன் …… எனதுமரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன். அதைத்தான் எனது பெருவிருப்பமாகக் கொண்டிருக்கின்றேன். எனது பணிக்கும். தியாகத்துக்கும் அதுதான் மிகச்சிறந்த ஈடுசெய்யும் உழைப்பூதியம். உண்மைக் கடவுளின் அன்பைப் போதித்ததற்கு, என்மீது எல்லாக் குற்றங்களும் சுமத்தப்பட்டிருக்கின்றன. காவலர்கள் என்னைக் கண் காணித்துக்கொண்டே இருக்கின்றார்கள். என்னால் அதிகமாக எழுத முடியாது……’ என்று தெளிவுபடுத்துகின்றது.30 உத்தரவை நிறைவேற்றுவதில் சிலதடைகள் இருக்கத்தான் செய்தன. ஓரியூர் தேவனின் மனைவி ஒருகிறிஸ்தவப் பெண்ணாக இருந்தார். அவர் தன்னால் முடிந்தமட்டுக்கும் பிரிட்டோவை மீட்கப் போராடினார். ஆனால், முதன்மை அமைச்சராக இருந்த முருகப்பப்பிள்ளை, கண்மூடித்தனமான கிறிஸ்தவ எதிர்ப்பாளர். 1693ஆம் ஆண்டு பிப்ரவரி, 4ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற அவர் ‘சாடை’ காட்டிவிட்டார். அப்போது முதன்மை அமைச்சர் வெளியிட்ட உத்தரவு. ‘இந்த மதகுரு (பிரிட்டோ), நமது கடவுள்களைக் கும்பிடுவதைத் தடுக்கின்றார். நாடுமுழுவதும் மக்கள் திரள்முன் பிரசங்கம்செய்து, அவர்கள் மனதை மாற்றி, மதம் மாற்றிவிடு கின்றார். மன்னரின் பெயரால், இவரது தலையை வெட்ட உத்தரவிடுகின்றேன்’. பிரிட்டோ கொல்லப்பட்டார். அவரது உடல்கொடூரமாகச் சிதைக்கப்பட்டு, வல்லூறுகளுக்கு இரையாக்கப் பட்டது.

ஜான் டி பிரிட்டோவின் மரணத்தை நெல்சன், ‘கணிசமாக முன்னேறிச் சென்றதால், கிறிஸ்தவத்துக்கு ஏற்பட்டக் காயம்’ என்று – உண்மையைப் பதிவுசெய்கின்றார். அதேவேளையில் கிழவன் சேதுபதியின் நேர்மை மற்றும் வாய்மையைக் கணக்கில் கொண்டால், கிறிஸ்தவத்தை வேரறுக்கும் செய்கையில் அவர் ஈடுபட்டது தொடர்பாகக் கேள்வி எழுப்புவது, கடினமான ஒன்றாக இருக்கின்றது. தனது கிரீடத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், அரசின்பேரிலான விருப்பத்திலும் இதுபோன்ற கடினமானக் கொள்கைகளை எடுக்கவேண்டியது அவசியம் என்று சேதுபதி நம்பியதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. என்ற போதிலும், சேதுபதியின் கணக்குகள் எல்லாமே தவறாகிப்போயின. பிரிட்டோவின் மரணத்துக்குப் பின்பு, மறவர் நாட்டில் கிறிஸ்தவம் முன்னெப்போதுமில்லாத அளவில் தழைத்தோங்கியது.

1700ஆம் ஆண்டு ஜூன், 1ஆம் தேதியிட்ட மார்டினின் கடிதம்,” ‘கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், சிலவேளைகளில் தனிப்பட்டத் தாக்குதலாக நடத்தப்பட்டதை’ விவரிக்கின்றது. பாதிரியார் பெர்னார்ட், கடுமையாக அடித்துநொறுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பற்கள்கூட, உடைந்துபோயின. அவரது உதவியாளர்கள் கருணை யற்று சித்ரவதைக்கு ஆளானார்கள். கசையடிகளைப் பெற்றார்கள். அந்தநேரத்தில் மக்களின் உணர்ச்சிநிலை, கிறிஸ்தவத்துக்கு எதிரானதாக இருந்தது என்று, அது கூறுகின்றது. 1700 ஆம் ஆண்டுவரையில் அதாவது, பிரிட்டோ கொல்லப்பட்டு ஏழெட்டு ஆண்டுகள் ஆன பின்பும், தனது சாம்ராஜ்ஜியத்துக்குள் கிறிஸ்தவத்தை வேரோடு பிடுங்கியெறியும் கொள்கையிலிருந்து சேதுபதி மாறவேயில்லை. படிப்படியாக நிலை மாறியது. கொல்லப்பட்ட பிரிட்டோவின் எஞ்சிய ஆவி, பலகற்பிதமான அற்புதங்களை நடத்தியதாகப் பேசப்பட்டது. ஓரியூர் தேவனும், அவரது அமைச்சரும், பிரிட்டோ கொலைசெய்யப்பட்ட சிலநாட்களிலேயே இறந்துபோனது, அந்தக்கற்பனைக்கு மிகவும் துணையாக இருந்தது. இதையடுத்து கிறிஸ்தவத்தின்மீது மக்களுக்கு ஒருவிதப்பரிவு உண்டானது. இதுவரை அட்டூழியம் செய்துவந்தவர்களை இந்தச்செயல்கள் முடக்கிப்போட்டன. அந்தநிலையில் சேதுபதியின் மூத்தமகன் வடுகநாதத் தேவரின் நட்பான அணுகுமுறை, கிறிஸ்தவத்தை மீண்டும் அங்கே. துளிரச்செய்தது. திருச்சபை அமைப்புகள் மனதைரியம் பெற்று. மறவர் நாட்டுக்குள் நுழைந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் முதல்பத்தாண்டுகளில் கிறிஸ்தவத்துக்கு ஆள்பிடிப்பது படிப்படி யாக உயர்ந்தது.

ராம்நாட் நாட்டுக்குள் கிறிஸ்தவம் பலதரப்பட்ட அனுபவ முறைகளைக் கொண்டிருந்தாலும், மதுரையில் அதுபெரிய அளவிலான சுதந்திரத்தைப் பெற்றிருந்தது. மங்கம்மாள் கிறிஸ் தவப் பிரசங்கிகளிடம் சகிப்புத்தன்மையைக் காட்டினார். கிறிஸ்தவ மக்களிடம் தயாள சிந்தை உள்ளவராக நடந்துகொண்டார். 1691ஆம் ஆண்டின் துவக்கத்தில், மறவர் நாட்டுச் சிறையில் மாண தண்டனைக்காகக் காத்துக்கொண்டிருந்த பங்குத்தந்தை மெல்லோவை, விடுதலைசெய்யச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். மதுரைத் திருச்சபைகளிலும்கூட அவரவர்க்கேற்ப சச்சரவுகள் இருந்துவந்தன. பாதிரியார் பௌச்சட் தார்மீகக் கடமை தவறிய கிறிஸ்தவ அந்தணர்கள் மூன்றுபேரை, சபையிலிருந்து வெளியேற்றி யிருந்தார். வெளியேற்றப்பட்டவர்கள் கிறிஸ்தவத்துக்கு எதிரான வர்களுடன் சேர்ந்துகொண்டனர். அப்படியே திருச்சபைகளுக்கு கெட்டபெயர் உருவாக்கும் வகையில், எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். திருச்சபை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் அடுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான சில: (1) அவர்கள் பரங்கியர்கள். (2) அவர்கள் அரசாங்கத்துக்குச் சுமையானவர்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்தவொரு வருமானமும் இல்லை. இத்தனைக்கும் அவர்களுக்கு அதிகஅளவிலான வருமானம் இருக்கின்றது. (3) அவர்கள் சமயத் துறவியொருவரைக் கொன்றவர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களால் பாதிரியார் பெளச்சட் மிகுந்த கவலைக்குள்ளானார். ஆயினும் துணிந்து, தளவாய் நரசப்பையாவைச் சந்திக்கச் சென்றார். நரசப்பையாவுக்கு ஐரோப்பியர்கள் என்றாலே ஆகாது. அவரிடம் பணியிலிருந்த மிகச்சிறந்த தகுதியும், திறமையும் கொண்ட பீரங்கி வீரர்களை, அவர்கள் ஐரோப்பியர்கள் என்ற ஒரு காரணத்தால், போர் நடந்துகொண்டிருக்கும்போதே பணியிலிருந்து நீக்கியவர். பெளச்சட் தனித்திறம் கொண்ட வேலைப்பாடுகளால் ஆனப் பரிசுப் பொருட்களை தன்னுடன் எடுத்துச்சென்றார். மதுரையை ஆண்ட அமைச்சர்களில் முன்னெப்போதுமில்லாத அளவில் புகழ் பெற்றிருந்த தளவாய், அவரை எதிர்கொண்டு முக்கியத்துவம் கொடுத்து அழைத்துப்போனார். அரசவை சடங்குமுறைமைகள் முடிந்த நிமிடத்திலேயே, தன்மீது எழுப்பப்பட்ட பழிபாவம் குறித்த சந்தேகங்களுக்கு இடமளிக்காதவகையில், பெளச்சட் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அப்படியே, தளவாய்க்குத் தன்னைப் பிடிக்குமளவில் தேர்ச்சித்திறத்துக்கு உகந்தவராய் ஆக்கிக்கொண்டு, நரசப்பையாவின் வீரதீரங்களையும் வெற்றிகளையும் குறிப்பிட்டுப் புகழ்பாடினார். கிறிஸ்தவச்

சட்டங்கள் குறித்த சிறப்புகள், முக்கியத்துவங்களை எடுத்துக்கூறி, குடிமக்கள் எல்லோரும் தங்கள் இறையாண்மையின்கீழ் நிழலாடுகின்றனர் என்று பாராட்டு மழையில் நனைத்தார். ஈரம் சொட்டச்சொட்ட நனைந்த தளவாய், இப்போது பெளச்சட்டைப் பாராட்டத் தொடங்கினார். அப்படியே அவரது வருகை குறித்து, அரசிக்குத் தெரியப்படுத்தினார். மங்கம்மாள், தனது நன்றியைத் தெரிவிக்குமாறு அமைச்சரிடம் சொல்லி அனுப்பினார். அவரதுகோரிக்கைகள் அத்தனை யும் நிறைவேற்றிக்கொடுக்கும்படி உத்தரவிட்டார். அரசியின் வாழ்த்துகளை தளவாய், அரசசபை யிலேயே வெளிப்படையாக அறிவித்தார். பௌச்சட், தளவாய்க்குக் கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, மீண்டும் ஒருமுறை கிறிஸ்தவ மதத்துக்கு அரச பாதுகாப்பு கேட்டுக்கொண்டு புறப் பட்டார். சந்திப்பு முடிந்ததும், தளவாயின் உத்தரவின்பேரில் பாதிரியார் பெளச்சட், ஊர்வலமாக பெரும்ஆடம்பரத்துடன் நகர்முழுவதும் நான்கு கல்தொலைவுக்கும் அதிகமான தூரம் அழைத்துச்செல்லப்பட்டு, பின்னர் அவரது இருப்பிடம் சேர்க்கப்பட்டார். வெற்றிகரமாக முடிந்த இந்தச் சந்திப்பு தந்த உத்வேகம், பௌச்சட்டின் அடுத்த நடவடிக்கைகளுக்குப் பலமாக இருந்தது. தனக்கெதிராக சமயத்துக்குள்ளே செயல்பட்ட பகைவர்களை எளிதில் கையாண்டார். சமயப்பகைவர்கள் குறித்தச் சுற்றறிக்கையொன்றை அவர் உத்தரவாக வெளியிட்டார். ஒருவர் மட்டும் பாதிரியாருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்க, இருவர் மீண்டும் கிறிஸ்தவ மதத்துக்குள் வந்துவிட்டனர். கிறிஸ்தவத்துக்கு எதிராக வீசிக்கொண்டிருந்த அச்சுறுத்தல்கள், பெளச்சட்டின் திட்டமிட்ட சமயோசித முயற்சிகளால் தவிர்க்கப்பட்டன.”

பாதிரியார் பௌச்சட்டுக்கும் தளவாய் நரசப்பையாவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பின் வெற்றி, அதனால் அரசசபையில் எதிரொலித்த மரியாதை ஆகியவற்றை, மார்டின் ஒளிரும் சித்திரமாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் டெய்லர் அதனை, ‘ஒருதலைப்பட்சமான அறிக்கை. அந்தக்கடிதம் பெருமளவு உண்மையை வெளிப்படுத்தவில்லை; அக்கடிதத்தின் வேறு பலபகுதிகள் கேள்விக்குரியனவாகவும்; வேறுபல் வேறு தரத்திலானதுமாக இருக்கும்’ என்று மதிப்பிடுகின்றார். என்ற போதும், மங்கம்மாள் கிறிஸ்தவ திருச்சபையிடமும் அம்மத்தா மும் கருணையுடன் நடந்துகொண்டார் என்பதுமட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதை மானுச்சியின் கடிதங்களும் உறுதிசெய்கின்றன. தஞ்சாவூர் அரசரோ, தனது எல்லைக்குகள் வசித்த கிறிஸ்தவர்களுக்கு எதிராக, தான் எடுத்த நடவடிக்கைகளில் திருப்திகொள்ளாதவராக இருந்தார். இன்னும் இன்னும் அவர்களைத் துன்புறுத்தச்சொல்லி, தனது இளவரசர்களுக்கு உத்தரவிட்டார். மதுரை அரசி கிறிஸ்தவர்களுக்கு ஆதரவுகொடுத்ததுபோல, உடையார்பாளையம் அரசர் பெரிய அளவில் சாதகமாகவோ, பாதுகாப்பாகவோ இருக்க வில்லை. அதேவேளையில் தஞ்சாவூர் அரசர் கிறிஸ்தவர்களை நடத்தியதுபோல, கடுமையாகவோ, தீவிரமாகவோ நடத்த வில்லை. அப்போது தன் எல்லைக்குள்ளிருந்த இயேசு சபையைச் சேர்ந்த நான்கு மதப்பரப்புரையாளர்களை கைதுசெய்ய உத்தரவிட்டார். அத்துடன் அவரது ஆதரவாளர்களை எச்சரித்தார். கைது செய்யவில்லை. அவர்களின் பொருட்களெல்லாமே, அவரவர் இல்லங்களிலேயே பொருட்படுத்தப்படாமல் அப்படியேகிடந்தன. கிறிஸ்தவ மக்கள் பாதிப்பின்றி வசித்தனர்.*

அண்டை ஆட்சியாளர்கள் மற்றும் சேதுபதி ஆகியோர் கிறிஸ்தவத்துக்கு எதிராக நடந்துகொண்டதைப் போலல்லாமல், மதக்கொள்கையில் தைரியமாக, தெளிவாக இருந்தார் என்பது உறுதியாகின்றது.” – நூலிலிருந்து.

– மதுரை நாயக்கர்களின் வரலாறு – ஆர். சத்தியநாத அய்யர்

Buy: https://www.heritager.in/product/mathurai-nayakkar-varalaaru/

WhatsApp Order: wa.me/919786068908