இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் :

உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும் கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்றும் அந்த இறையுருவங்களை மழை வெயிலிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் விரும்பினான். அவ் எண்ணங்களின் விளைவால் தோன்றியதே கோயில்கள். இந்தியாவைப் பொருத்த அளவில் வேத காலத்தில் கடவுளுக்கு உருவம் கற்பிக்கப்படாமையாலும், உருவ வழிபாடு இன்றித் தீ வழிபாடு இருந்துவந்த காரணத்தினாலும் இன்றைய கோயில்களின் அமைப்பு அக் காலத்தில் இல்லாமல் போனது.

கோயில்கள் துவக்க காலத்தில் குறிப்பாக வட இந்தியாவில் ஆற்றுப் படுகைகளும், அடர்ந்த காடுகளும் இருந்ததனால் மரங்களை வைத்தும் வண்டல் மண்ணாலும் கோயில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு துவங்கும் கோயில் கட்டடக் கலை பௌத்த சமயத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரைகள் அமைக்கும் மரபினின்றும், ஸ்தூபங்கள், விகாரங்கள் முதலிய கலைகளினின்றும் கல்லைப் பயன்படுத்திக் கட்டடங்களைக் கட்டும் மரபை உள்வாங்கிக் கொண்டது. இந்து சமயத்திலும் பல குடைவரைகள் குடையப்பட்டன. அதன் பின்னரே கல்லை வைத்துக் கோயில் கட்டும் மரபு துவங்குகிறது. வட இந்தியாவில் கி.பி.5 -ஆம் நூற்றாண்டில் குப்தர்களது ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமானக் கோயில் மரபு துவங்கியது. அவ்வாறு தொடங்கிய கட்டுமான மரபு சிறிது சிறிதாக நகரத் தொடங்கி தமிழகத்திற்கு வந்தது. சங்க காலம் தொட்டே தமிழகத்தில்இருந்து வந்த மண்ணால் கோயில் கட்டப்படும் மரபுடன். புதிதாக வட இந்தியாவிலிருந்து சாளுக்கியரது தொடர்பால் கிடைத்த கட்டுமானக் கலையும் இணைந்து கி.பி.8-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கற்களால் கோயில் கட்டும் கட்டுமான மரபு துவங்கியது. எனவே வடஇந்தியாவில் தோன்றிய கட்டுமானக் கோயில்கள் ஒருவித அமைப்பிலும் தென்னிந்தியாவை அடைவதற்குள் இடையில் மத்திய இந்தியாவில் ஒருவித அமைப்பிலும் தென்னிந்தியாவில் மற்றொருவித அமைப்பிலும் கோயில்களின் கட்டுமானங்கள் அமைந்தன.

இத்தகைய வேறுபாட்டால் இந்தியக் கட்டடக்கலையை மூன்றுவித பெரும் பிரிவுகளில் வகைப்படுத்துவர். அவை நாகரம், வேசரம், திராவிடம் என்பனவாகும். இந்த மூன்று பெரும்பிரிவுகளும் கோயில்களின் அமைப்பை வைத்தே இவ்வாறு பெயர் பெறுகின்றன. நாகரம் என்பது சதுரமான வடிவுடைய கோயில்கள் என்றும், வேசரம் என்பது வட்டவடிவிலான கோயில்கள் என்றும், திராவிடம் என்பது விமானம் எனும் அமைப்பினைக் கொண்ட தென்னிந்தியக் கட்டடக்கலை கோயில்கள் என்றும் கூறப்படும்.இந்தியக் கோயில்கள் இந்த முப்பெரும் பிரிவுகளில் கூறப்பட்டாலும் அந்தந்த வட்டாரக் கட்டடக் கலையினையும் இணைத்தே அவ்வப்பகுதி கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்றாலும்கூட கோயில்கள் அடிப்படை அமைப்பு மனித உருவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டது. அதன் அழகு வேலைப்பாடுகள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அல்லது அரசபரம்பரைகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப் பட்டாலும் அடிப்படையில் மனித உருவ அமைப்பு மாற்றப்பட வில்லை. இன்றளவும் அவ்வப்பகுதி கலைஞர்களால் அப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களின் அமைப்பைப் பின்பற்றியே மராமத்துப் பணிகளும் புதிய கோயில் கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

நர்மதை ஆற்றுக்கு வடக்கே வடஇந்தியா முழுவதும் காணப்படும் வடஇந்தியக் கோயில்களை நாகரப்பாணிக் கோயில்கள் என்பர். தெற்கே ஓடும் கிருஷ்ணா நதிக்கும் வடக்கே ஓடும் நர்மதை ஆற்றுக்கும் இடைப்பட்ட தக்காணப் பகுதியில் உள்ள கோயில்கள் அனைத்தும் வேசரப் பாணிக்கோயில் களாகும். கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள பகுதியில் அமைந்துள்ள கோயில்களை திராவிடப் பாணிக் கோயில்கள் என்று கூறுவர். என்றாலும் இவ்வகைப்பாடு திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் என்று எடுத்துக்கொள்ள இயலாது. பெரும்பான்மை கருதியே இப்பிரிவு அமைகிறது. சிற்சில கோயில்கள் அவ்வப்பகுதியில் இடம்பெறும் கட்டடக்கலைப் பாணியை விடுத்து வேறு பாணியிலும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக திராவிடப் பாணிக் கோயில்கள் இடம்பெறும் தமிழகத்தில் வேசரப் பாணிக் கோயில்களும் இடம்பெறுவதைக் கூறலாம்.

திராவிடப்பாணி வகையில் சாளுக்கியர், ஒய்சாளர், பல்லவ, பாண்டிய, சோழ, விசயநகர நாயக்கர் ஆகியோரது கட்டடக்கலை அடங்கும். இவற்றிடையே சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. தமிழகத்துக் கட்டடக்கலைக்குள்ளே பல்லவர், பாண்டியர், சோழர், விசயநகர நாயக்கரது கலைப்பாணிகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.

நாகரப் பாணி :

நாகரப் பாணி பிரிவைச் சேர்ந்த வட இந்தியக் கோயில்கள் அடிமுதல் முடிவரை நான்கு பட்டைகளாக சதுரமாக அமைந்திருக்கும். இக்கோயில் கருவறையின் தரை அமைப்பும் விமான அமைப்பும் ஒரே மாதிரியான சதுர அமைப்பிலோ, நீள்சதுர அமைப்பிலோ காணப்படும். இக்கோயில்களின் முகமண்டபம் மற்றும் பக்கவாட்டில் உள்ள மண்டபங்கள் தூண்களுடன் கூடியதாகவும் சமதள அமைப்பிலும் காணப்படும். கருவறைக்கு முன்னுள்ள தூண்களுடன் கூடிய மண்டபத்திலிருந்து நுழைவு வாயிலுக்குச் செல்ல பாதை அமைந்திருக்கும். பாதையின் இருபுறமும் இறை யுருவங்கள் அமைந்தும் அமையாமலும் காணப்படும். கி.பி.7ஆம் நூற்றாண்டிற்குப் பின் கட்டப்பட்ட நாகர பாணிக் கோயில்கள் மிக உயரமான கூரைகளையும் அதன் மேல் பல அடுக்குகளையும் இறுதியில் சிகரத்தைக் கொண்டும் அமைக்கப்பட்டன. உச்சிப்பகுதியில் முதலில் மூன்று சுழல்களும் பின்னர் ஐந்து அல்லது ஏழு சுழல்களும்அமைக்கப்பட்டிருக்கும். இவை பார்ப்பதற்கு ஸ்தூபத்தின் மேற்பகுதியை ஒத்ததாக பௌத்த இருக்கும். கோயிலில் மேற்பகுதி மாடிமேல் மாடி போல் தனித்தனியாகக் கட்டி ஒன்றன்மேல் ஒன்றாக எடுத்து அடுக்கப்பட்டதைப்போ வளைத்துச் எனப்படும் காணப்படும். மேற்பகுதியில் மூங்கில் பட்டைகளை கட்டியதுபோல் காணப்படும் பகுதி அமலகம் அதன்மேல் கலசம் இடம்பெறும்.

நாகர வகைக் கோயில்கள் உயரமான மேடை அமைத்து அதன்மேல் கட்டப்படுவதும் உண்டு. சில கோயில்கள் மேடை யின்றித் தரையிலிருந்தே கட்டப்படும். மேடைகள் அமைந்தால் அம்மேடைகளில் சிற்ப வரிசையும் உட்பகுதியில் வளைகோட்டு வரிசையும் காணப்படும். முன்மண்டபத்தில் அமையும் தூண்கள் கருவறையின் கூரை அளவிற்குக் காணப்படும். அதற்குமேல் கூரையமைப்பு மொட்டையாகக் குவிந்து நாற்புறமும் சரிந்த அமைப்பில் அமையும்.

கருவறை, முன் மண்டபம், மகாமண்டபம் நுழைவுவாயில் என அனைத்துப் பகுதிகளும் தனித்தனி விமானம் மற்றும் கட்டுமானங்களை ஒரே மாதிரியான அமைப்பில் வெவ்வேறு உயரத்தில் கொண்டிருக்கும். கற்களை வைத்துக் கட்டும் பொழுது வெளிப்புறத்தில் அக்கற்கள் அழகு வாய்ந்ததாகவும், உட்புறத்தில் நன்கு செதுக்கப் படாமலும் அமையும். இதனை உட்புறம் பயன்பாட்டுத் தேவை கருதியும், வெளிப்புறம் அலங்காரத் தேவை கருதியும் அமைத்ததாகக் கொள்ளலாம். விமானப்பகுதியின் உயரம் அதிகமானால் அதன் உடற்பகுதியைக் கனமாக அமைக்காது உள்ளீடற்ற குழல்போல அமைப்பர். மேலும் குறுக்கும் நெடுக்குமாக உட்பகுதியில் மரத்தாலான உத்தரங்களை அமைத்திருப்பர். ஏணிப்படிகள் அமைப்பதும் உண்டு.

இடைக்காலத்தில் வட இந்தியாவில் கட்டப்பட்ட கோயில்கள் கருவறையின் இருபுறமும் இரண்டு மண்டபங் களையும் முன்பக்கம் நீண்ட ஒரு மண்டபமும் தோரண வாயிலும் கொண்டு கட்டப்பட்டதால் இவை சிலுவைக் கோயில்கள் என்றழைக்கப்பட்டன. தரையமைப்பு சிலுவையினைப் போல் அமைகின்ற படியால் அவ்வாறு 
அழைக்கப்பட்டன.

இந்தியக் கட்டடக்கலை வரலாறு – முனைவர் அம்பை மணிவண்ணன்

Buy this book online: https://www.heritager.in/product/indiak-katttkkalai-varalaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/