நெய்தல் நிலத்தில் உமணர்

நெய்தல் நிலத்தில் உமணர் :

உமணர் :

உமணர் மீன்பிடித் தொழில் மட்டுமின்றி உப்பெடுக்கும் தொழிலையும் செய்தனர். இதை மதுரைக்காஞ்சி, நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெரிய வண்டியில் உப்பை மட்டுமின்றித் தம் வீட்டுச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு உள்நாடுகளில் நெடுந்தொலைவு சென்று விற்பவர்கள் உமணர்களாவர். உமணர் பெண்ணே வண்டியை ஒட்டிக்கொண்டு நடந்து செல்வாள். மாடுகள் பயனற்றுப் போகும்போது நடுக்காட்டிலேயே அவற்றை விட்டுச் செல்வர். படகில் உப்பினை ஏற்றிச்சென்று விற்றனர். திரும்பி வருகையில் படகு நிறைய வெண்ணெல் நிரம்பி இருந்தது. இவர்கள் ஒரு இடத்தில் நிலையாகத் தங்கமாட்டார்கள்.உவர் நிலத்தில் விளையும் உப்பை மலைநாட்டில் கொண்டு விற்பனைச் செய்வர்.

உழாது விளைவிக்கும் உப்பினை வணிகர் விற்பனைக்குக் கடற்கரைச் சோலையில் குவித்து வைப்பர். பறவைகளை விரட்டும் தோழியர் அக்குவியலின் மீதேறி என் தந்தையின் படகு இது,உன் தந்தையின் படகு இது என்று கடற்பரப்பில் மீன் வேட்டைக்குச் சென்ற தம் சுற்றத்தாரின் படகுகளை எண்ணுவர். ‘அயனிமா இன்று அருந்த’ (நற் 331:1-8). உப்பு பாத்தியில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு விளைவித்துக் கொள்வ தன்றி, மழை விரும்பாத வேளாண்மையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊரில் உமணர் உப்புக் குவியலுக்கு மாற்றாகப் பெற்று வந்த நெல்லைக் குற்றி ஆக்கி தம் உறவினர்களுக்கு உணவாகக் கொடுத்தனர்.

உமணர் குடியிலே தோன்றிய சிறுமகள் ‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு” என்று கூவுகின்றபோது இல்லங்கள் நிறைந்தபுதிய ஊரில் வேற்றவர் வரவைக்கண்ட நாய் குரைக்க அவள் அஞ்சினாள். உப்பு விற்கும் வணிகரின் வண்டிகளின் பின்னால் அவரிகள் குழந்தைகளும் சென்றனர். உமணர் பெண்டிர் குழந்தைகளுடன் கிலுகிலுப்பையைக் கொண்டு விளை யாடினர். மேலும், இவர்கள் கூட்டம் கூட்டமாகவே சென்று காட்டுப்பகுதிகளில் தங்கி உப்பு விற்றனர். பரல் கற்கள் நிறைந்த வழிகளில் உப்பு வணிகரின் சிறிய குடியிருப்புகள் ஓங்கியிருந்தன என்பதனை நற்றிணை விளக்குகிறது.உப்பு வணிகர் சமைத்து விட்டுப்போன அடுப்பில் ஊன் கலந்த உணவைச் சமைத்து மறவர் உண்டனர். செல்லும் வழியில் உப்பை ஏற்றிச்செல்லும் காளைகளை மேயவிட்டு தானும் இளைப்பாறுவான் உமணன்.

உப்பு வணிகர் கூட்டம் (சாத்து) சமைத்து உண்டு கைவிட்டுச் சென்ற கல் அடுப்பில் வலிய வில்லையுடைய மழவர்கள் மணம் உண்டாக நன்கு புழூக்கிய இறைச்சியை விருப்பமுடன் சமைத்து உண்ணுவார்கள் (அகம் 119:8-9). பாலை நிலத்தில் புலி யானையைக் கொன்று உண்டுவிட்டுச் சென்ற ஊன் இறைச்சியை அங்கு வந்த வேட்டுவர் உண்டனர். அவ் வேட்டுவர் விட்டுச்சென்ற ஊனினை உப்பு விற்கும் வணிகர் கூட்டம் தங்களிடம் உள்ள தீக்கடைக்கோலால் உண்டாக்கிய நெருப்பால் சுட்டும், சுனையிலிருந்து நீர் முகந்தும் உலையில் சேர்த்து சோறு சமைத்து உண்டனர் (அகம் 169 :3-7). வண்டி ஓரங்களின் துளைகளில் மர உரல்களைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். வாரால் நன்கு இறுக்கிக் கட்டப்பட்ட முழவைப் போல காடி (ஊறுகாய்) வைத்து மிடா அசையாதவாறு கயிற்றால் வரிந்து கட்டப்பட்டிருந்தது (காடி -ஊறுகாய்) என நச்சினார்க்கினியார் உரை கூறுவதாக முனைவர் ராஜ் கௌதமன் (2006-205) கூறுகிறார்.

உப்பு :

பரதவர் உப்பினை ஏரால் உழுவதன்றிக்கையால் பாத்தி கட்டி விளைவிப்பர். மேலும், சிறுசிறு பாத்தியாகப் பிரித்த உப்பை நேர் நேராக வகுக்கப்பட்ட சிறுசிறு பாத்திகளில் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவிப்பர். இதனை,

‘நேர்கட் சிறுதடி நீரின் மாற்றி
வானம் வேண்டா வாழ்வின் எம்
கானலஞ் சிறுகுடி’ (நற் 254 :10-13)

என்னும் பாடல் அடிகள் மூலமாக அறிய முடிகிறது. உவர் நிலத்தில் விளைந்த உப்பினை விலைகூறி நெடுந்தொலைவில் கொண்டுசென்றனர். உப்பிற்கு மாற்றாக வெண்ணெல்லைப் பெற்றுக்கொண்டனர்.

‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு” (அகம் 140).

உமணர் பயன்படுத்திய விலங்குகள் :

உமணர் வாணிபம் மேற்கொள்ளும்போது ஆநிரை, காளை, கழுதை, எருது போன்ற விலங்குகளை தான் பயன்படுத்திய வண்டியில் பூட்டிப் பொதிச் சுமக்க செய்தான். உப்பு விற்கும் வணிகர்கள் கடற்கரையில் பூட்டப்பெற்றிருக்கும் காளைகள் மிகவும் வலிமையுடையது. உப்பை ஏற்றிச்செல்லும் உமணர் எருதுகள் இளைப்பாற நிலத்தை உடைத்து கிணறு உண்டாக்கிச் சென்றார். கொற்கை நகரத்து உப்பு விற்கும் உமணர் தம் குழந்தைகளோடு, குழந்தையாகக் கருதிப் பெண் குரங்குகளையும் (மந்தி) வளர்த்தனர். உப்பு மூட்டையை வண்டியில் ஏற்றிச்செல்ல எருதினைப் பயன்படுத்தினர். பொதிச் சுமந்து தளர்ச்சியுற்ற எருதுகள் இளைப்பாற காட்டு வழியில் கொண்டுச்சென்றனர். அவை வலுவில்லாது போனால் அவற்றை அங்கேயே இட்டுச் செல்வர்.

பாதுகாப்பு முயற்சி :

உமணன் உப்பை வண்டியில் ஏற்றிக் கடற்கரையில் இருந்து குறிஞ்சி, முல்லை,மருதம் ஆகிய நிலங்களில் கொண்டுச் சென்று விற்றான். ஆங்காங்கே கிடைக்கும் பூவைச் சூடிக் கொண்டார். கையில் காளைகளைச் செலுத்தும் கம்பினை வைத்திருந்தனர். கூட்டமாகவேச் சென்றனர். களைப்பு நீங்க வேண்டியும், பயத்தைப் போக்கவேண்டியும் விசில் அடித்தனர். இதன் மூலம் உமணன் தன்னையும் தன் குடும்பத்தையும் பாது காத்தமையை அறியமுடிகிறது.

மழை :

விளைவிக்கும் விளைப்பொருளுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதுபோல மழையும் அவசியமாகிறது. ஆனால் உழாது விளையும் உப்பிற்கு மழை எமனாக உள்ளது.உப்பு மேட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் உப்புக்குவியல் மழை வந்தால் முழுமையாக கரைந்துவிடும்.

உணவுமுறை :

உப்பு விற்று வாங்கிவந்த நெல்லாலே ஆக்கப்பட்ட மூரலாகிய வெண் சோற்றை அயிரை மீனை இட்டு ஆக்கிய சுவை மிகுந்த புளியங்கறியை அதிலே ஊற்றிக் கொழுமீன் கருவாட்டுடன் தன் தந்தைக்குப் பரிமாறினாள் உமணர் மகள். கூட்டம் தீக்கடை கோலால் உண்டாக்கிய சிறு தீயில் ஊனை வாட்டி சுனையினின்றும் கொண்டுவந்த நீர் கொண்டு ஏற்றிய உலையிற் போட்டு ஒன்றுகூட்டி ஊன்சோறு ஆக்கினர். உப்பு வணிகருக்கு தீ மூட்ட யானை சவைத்து மீதம் வைத்த யாமரத்தின் சக்கை பயன்பட்டது.

சடங்குமுறை :

சடங்கு முறை என்பது நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியது. அச்சத்தை தரக்கூடிய கடல் நீரினால் உவர்நிலத்தில் பாத்திகட்டி நீர் பாய்ச்சி வெயிலில் காய்த்து உப்பாக விளையும் உப்பை விற்பனை செய்யும் உமணரும் வணிகத்திற்குச் செல்லும்முன் சகுனம் பார்த்தனர்.

பூசல் :

உப்பளங்களில் உள்ள பாத்தியில் நெல் உமிகள் பரந்து வந்து உப்பை குப்பையாக்கின. இதனால் கோபம்கொண்ட உமணர் வயல் வெளியில் கிடந்த சேற்றை எடுத்து ஒருவர்மேல் ஒருவர் வீசி சண்டையிட்டனர். (நூலிலிருந்து)

உமணர் வாழ்வியல் – சகாய சுசி
விலை: 80/-
வெளியீடு: ஆதாம் ஏவாள் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/umanar-vaazhviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers