இருளுக்குள் பாயும் கீழடி வெளிச்சம் – சிராப்பள்ளி மாதேவன்

 

இலக்கியத் தேடல்கள் வரலாற்றை நோக்கியும், வரலாற்றுத் தேடல்கள் இலக்கியங்களை நோக்கியும் திருப்பும் இயல்பு கொண்டவை. அந்த இயல்பை மறுதலித்தே இங்கு நீண்ட காலமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. இரண்டையும் இணைத்துக் கொண்டவை மிகச்சிலவே. இந்த இரண்டுக்குமான இடைவெளியை அகழ்வாய்விலும் தொல்பொருள் ஆய்விலும் கிடைக்கும் தரவுகளின் துணைகொண்டு சரிசெய்து கொண்டே வரவேண்டும். இதன் மூலமாகத்தான் இரண்டிலும் இருக்கும் குறைகளைக் களையமுடியும்.

நான் தமிழாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, தொல்பொருள் ஆய்வாளராகப் பணியாற்றுவதற்கான படிப்பெதுவும் படித்தவனில்லை. ஆனாலும் தேடல்கள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அந்தத் தேடலின் போது கீழடி அகழ்வாய்வு வரலாற்றின் மீதும் இலக்கியங்களின் மீதும் புத்தொளி பாய்ச்சியிருப்பதை உணரமுடிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கீழடி சென்றுவந்தவுடன் அதன் பண்டைய பெயர் மற்றும் இருப்பிடம் பற்றித் தேடத் தொடங்கியபோது “1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்” என்ற நூலில் க. அப்பாத்துரையார் “பழமதுரை” என்றும் “திருமுருகாற்றுப்படை” பற்றியும் சொல்லியிருந்த செய்தி நினைவுக்கு வந்தது. அதில் “பண்டை மதுரை” அல்லது ”கூடல்” இருந்த இடம் தற்கால மதுரை நகரத்துக்குத் தென்கிழக்கே ஆறுகல் தொலைவில் இருக்கும் பாழடைந்து கிடக்கும் பழமதுரையாகவே இருத்தல் கூடும். இந்தப் பாழ்நகர் வையையின்(வைகையின்) வடகரையில் இருக்கிறது. ஆனால், பழமதுரை வையையின் தென்கரையில் இருந்ததாகவே அறிகிறோம். ஆயினும் நகரின் அழிவுக்குப் பிற்பட்டு ஆறே போக்குமாறித் திசைமாற்றம் உண்டு பண்ணியிருக்கலாமென்று எண்ண இடமுண்டு என்று குறிப்பிடுகிறார். பாண்டியர் பழைய மதுரை பற்றிய ஒரு தகவல் அது. வையையின் தென்கரையில் இருந்திருக்கவேண்டும் என்ற அவரது கருத்தை உறுதி செய்திருக்கிறது கீழடி அகழ்வாய்வு.(படம் 1).
திருமுருகாற்றுப்படை நோக்கிய தேடலில் ம.ராசமாணிக்கனாரின் “பத்துப்பாட்டு ஆரய்ச்சி” நூல் அகப்பட்டது. அதில் அகநானூறு, திருமுருகாற்றுப்படை இரண்டும் பரங்குன்றின் (திருப்பரங்குன்றம்) அமைவிடம் பற்றிக் கூறும் செய்திகள் இருந்தன. இந்த ஆய்வுநூல் 1964 ம் ஆண்டே எழுதிமுடிக்கப்பட்டுவிட்டது என்பதை நினைவில் கொள்க. அவர் எடுத்தாண்ட அகப்பாடல் வரிகள் கீழே

கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
– எருக்காட்டூர் தாயங்கண்ணனார் (அகம்-149)
“ கூடற் குடாஅது……………… நெடியோன் குன்றத்து”, அதாவது கூடல் நகரின் மேற்கே தொலைவில் இருக்கும் பரங்குன்றம் என்று பொருள். அற்றை நாளில் பரங்குன்று கூடல் நகருக்கு மேற்கே தொலைவில் இருந்திருக்கிறது.

அந்நூலில் எடுத்தாளப்பட்ட திருமுருகாற்றுப்படை வரிகள் கீழே
பொருநர்த் தேய்த்த போரறு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து . . . .70
மாடமலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன் ; அதாஅன்று,
திருமுருகாற்றுப்படை(70-77) – மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர்

“மாடமலி மறுகின் கூடற் குடவயின்” மாடங்கள் நிறைந்த கூடல் நகரின் மேற்கே என்று பரங்குன்றின் அமைவிடம் சொல்லப்பட்டுள்ளது. குணாஅது, குடாஅது என்பனவற்றிற்கு விளக்கம் தந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஐயாவுக்கு நன்றி.
தற்காலத்திற்கு வருவோம். அகழப்பட்டிருக்கிற கீழடியில் நின்று பார்த்தோமானால் பரங்குன்று (திருப்பரங்குன்றம்) குடாஅது (நேர் மேற்கே) தான் தெரிகிறது.

இங்கே பெருநகரொன்றின் நாகரிக அடையாளங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. வீடுகள், தொழில் நடைபெற்ற இடங்கள், நன்றாகப் பாவப்பட்ட செங்கற்தளம், கிணறு, கருவிகள், பெரிய மற்றும் சிறிய பானைகள் போன்றவை ஏராளமாகக் கிடைத்துள்ளன. சீரான கழிவுநீர் வடிகால் வசதிகள் கண்டறியப் பட்டுள்ளன. எனவே இந்த ஆய்வு மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர் மற்றும் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் ஆகிய இருவரின் பாடல் குறிப்புகளை வலுவாக உறுதி செய்கிறது. எனவே அவர்களின் பாடல்களில் சொல்லப்படுகிற பிற செய்திகளின் உண்மைத்தன்மையும் வலுப்பெறுகிறது.

திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை இலக்கிய வகையைச் சார்ந்தது. தொல்காப்பிய விதியின் படி இவை கூத்தர், பாணர், பொருநர், விறலியர் பொருளுதவிபுரியும் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவதையே கூறும். ஆனால் திருமுருகாற்றுப்படையோ முருகன்பால் புலவரை ஆற்றுப்படுத்துவதாய்ப் பாடப்பட்டுள்ளது. இது தொல்காப்பியம் சொல்லாத செய்தி.

“ தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்கு” எனத் தொடங்கும் தொல்காப்பிய புறத்திணை நூற்பா, ஆற்றுப்படை இலக்கியங்களின் விதிகளைக் கூறுகிறது. ஆற்றுப்படை இலக்கியங்கள் எதிரிருப்பவர் செல்லவேண்டிய இடம், அதைச் சென்றுசேர்வதற்கான வழி, எதிர்படும் நிலங்கள், மனிதர்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாகப் பேசும். அந்தவகையில் நக்கீரரும் ஏராளமான செய்திகளைச் சொல்லிச் செல்கிறார். முக்கியமானதொன்றைப் பார்ப்போம்.

முருகன் உறையும் இடங்கள்
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .220

“ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்,
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
தினையை மலர்களுடன் விரவி,
ஆட்டுக்கிடாயறுத்து கோழிக்கொடி நாட்டி
ஊரார் நடத்தும் சீர்மிகு விழாக்களிலும்
முருகன் உறைகிறான்” என்று தொடங்குகிறது பழமுதிற்சோலை பற்றிய ஆற்றுப்படை.
முருகன் வழிபாடு

மாண்டலைக் கொடியடு மண்ணி அமைவர
நெய்யடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் . . .230

செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியடு விரைஇய தூவௌ¢ ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியடு இன்னியம் கறங்க . . .240

உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக . . .

குறமகள் ஒருத்தி முருகனை வழிபடும் இடத்தைத் தூய்மையாக்கி கோழிக்கொடியை நாட்டினாள். அதன்மீது நெய்யோடு வெண்சிறுகடுகை அப்பினாள். அழகிய மலர்களை அக்கொடிமீது தூவினாள் .இரண்டு ஆடைகளை உள்ளொன்றும் புறமொன்றுமாக உடுத்தாள். சிவந்த நூலைக் கையில் காப்பாகக் கட்டினாள். வௌ¢ளிய பொரியைத் தூவினாள். ஆட்டுக்கிடாயின் குருதியொடு பிசைந்த தூய வௌ¢ளரிசியை சிறுபலியாக இட்டாள்.மஞ்சள், சந்தனம் தெளித்தாள். மாலைகள் இட்டாள். மலைநகர் வாழ்கவென்றாள். தூபம் காட்டிக் குறிஞ்சிப்பண் பாடினாள். பல்லியங்கள் ஒலித்தன. பல வண்ண மலர்களைத் தூவி குருதியளைந்த சிவந்த தினையைப் பரப்பினாள். வெறியாடுகளம் ஆராவாரிக்க அங்கிருந்தவர் பாடினர். கொம்பு ஊதி மணி ஒலித்து முருகனின் ஊர்தியான “பிணிமுகம்” என்னும் யானையை வழிபட்டனர். (சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் முருகனுக்கு முன் மயிலுக்குப் பதில் யானை இருக்கக் காணலாம்) .

இவ்வாறு பெருஞ்செய்திகளைச் சுமந்து நிற்கிறது திருமுருகாற்றுப் படை. முருக வணக்கம் சார்ந்த, பேசப்பட்ட நிலம், மக்கள் பற்றியச் செய்திகள் நிறைய மறைக்கப்பட்ட உண்மைகளை நமக்கு இயம்புகின்றன அதன் வரிகள். கீழடி திருமுருகாற்றுப்படையை உறுதி செய்திருக்கிறது.

இதே உறுதிப்படுத்தலோடு எருக்காட்டூர் தாயங்கண்ணனாரிடம் போவோம். மூன்று வரிகள் மட்டும் இராசமாணிக்கனார் நூலில் பார்த்துவிட்டு முழுப்பாடலுக்குப் போனேன். கீழடி இந்தப் பாடலுக்குமான உறுதியொன்றையும் தந்திருக்கிறதே. செய்தி கண்டு பெருவியப்பெய்தினேன். இதோ பாடல்

“சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19
– எருக்காட்டூர் தாயங்கண்ணனார் (அகம்-149)

“வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை, முதல் ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,” வரையிலான வரிகள் வரலாற்றின் முகடுகளை நோக்கி என்னை நகர்த்தின. “வளம் நிறைந்த சேரலரின் பேரியாற்றங்கரை முசிறியை ஆர்த்தெழுந்து வளைத்து சமர் கடந்து படிமம் (சிலை) கவர்ந்து வந்த அடுபோர்ச் செழியனின் கொடி அசைவது போல கூடலின் மேற்கே மயிற்கொடி அசையும் விழாக்கள் முடிவுறா நெடியோன் குன்றம்” என்று பரங்குன்றைக் குறிக்கிறார் தாயங்கண்ணனார். பெரும் போர் இல்லை அது. சட்டென்று நுழைந்து அடுத்தவர் எதிர்பாராத நிலையில் சேரலரின் முசிறி வழியாக பேரியாற்றில் நுழைந்து சிலை கவர்ந்த “அடுபோர்ச் செழியன்” யார்? கவர்ந்து வந்த சிலை யாருடையது? அன்றிருந்த சேரல மன்னன் யார்? அடுக்கடுக்காய்க் கேள்விகள் எழுந்தன.

“தென்புலங் காவல் என்முதல் பிழைத்தது “ என்று வீழ்ந்த பாண்டிய மன்னன் கண்முன் வந்துபோனான். பெருந்தொலைவு நடந்துபோன கண்ணகி வந்தாள். சிலையெடுத்த சேர மன்னன் வந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்தது உலகிற்கு நற்செயலே. ஆனால், பாண்டியர்களைப் பொறுத்தமட்டில், அவர்களின் முன்னோன் செய்த பெரும்பிழை ஒன்றின் குறியீட்டுப் படிமம் அது. அது இருக்குந்தோறும் அவர்களின் பெருமைக்குக் களங்கம் என அடுத்த தலைமுறை எண்ணியிருக்கலாம். அதனால் பின்னால் வந்த அடுபோர்ச் செழியன் முன்னவர் பிழை படிமமாய் நின்றதைக் களைய நினைத்தானோ? அந்தச் சிலை முசிறியில் எங்கே இருந்திருக்கும்?

இந்தக் கேள்விக்குத் தொடர்புடைய செய்தி ஒன்று, பலா மரத்தால் செய்யப்பட்ட சேரலரின் கொடுங்கல்லூர் பகவதி கோயிலின் உள்ளே எப்பொழுதுமே மூடியே வைக்கப்பட்டிருக்கிற அறை. கொடுங்கல்லூர் கோயிலில் மூடியே கிடக்கும் அந்த அறை பற்றி பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனுள் சிறீ சக்கரம் இருக்கிறது, திறந்தால் அவள் கொடுமை தாங்க முடியாது என்ற கதைகளைக் கேட்டிருக்கிறேன். கீழடி அந்தக் கதைகளை உடைத்து ஒரு ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொடுங்கல்லூர் கோயில்

அடுபோர்ச்செழியனிடம் கடற்படை இருந்திருக்கும். அதை அனுப்பி திடீரென மேலைக்கடலிலிருந்து கழிமுகம் வழியாக பேரியாற்றில் நுழைந்து, முசிறி வழியாக அந்தச் சிலையை எடுத்து வந்திருக்கலாம். “படிமம் வவ்விய” என்ற பாடல் வரிகள் இதை உறுதிப் படுத்துகின்றன.

மதுரையின் அமைவிடம், மற்றும் பேரியாற்றின் உள்ளே கடலிலிருந்து சிறு தொலைவில் முசிறி இருந்தமை போன்ற செய்திகள் உறுதிப்படுத்தப் படும்போது சிலை கவர்ந்ததையும் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பாண்டியர்களுக்கு இருந்த அதே பெருமை சேரருக்கும் இருந்திருக்கும். அதன் காரணமாகவே தம் முன்னோர் செய்துவைத்த படிமம் கவரப்பட்டதைக் களங்கம் என்று எண்ணியிருக்கலாம். அதனாலேயே அந்தப் படிமம் மீட்டுக் கொண்டுவரப்படும் வரை அந்த அறையைப் பூட்டி வைத்திருந்திருக்கலாம். ஆனால் காலங்கள் ஓடிவிட்டன. அரசுகள் மாறிப்போயின. அந்த அறை இன்னும் பூட்டியே கிடக்கிறது. அதற்கு வேறு கதைகள் உருவாகி உலாவருகின்றன.

கீழடியின் பழம்பெயர் தேடலில் தொடங்கிய என் பயணம் சேரல நாட்டின் முசிறியில் நின்றுகொண்டிருக்கிறது. காரணம் கீழடி மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்கிறது. பேரறிஞர்கள் பலர் இலக்கியத்தின் வழி வரலாற்றை அறிய முற்பட்டு ஆய்வுநூற்கள் பல செய்திருக்கிறார்கள். அவற்றை உறுதிசெய்ய நாம் அகழ்வாய்வுகளை, தொல்லியல் சான்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அந்த ஆய்வு நூல்கள் எழுதப்பட்டக் காலத்தில் அவர்களுக்கு இத்தனை அகழ்வாய்வு மற்றும் தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்கவில்லை. அதைச் செய்யவேண்டியது நம்முடைய கடமை என நான் கருதுகிறேன். வரலாற்றுத் தேடல் என்பது குமரியில் மாலைத் தொடர்வண்டியிலேறி மறுநாள் காலை சென்னையில் இறங்குவது போலன்று. இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது.

இந்த ஆய்வு ஒரு தொடக்கநிலை ஆய்வே. தமிழ்ப் பேராசிரியர்களே, வரலாற்றுப் பேராசிரியர்களே இதுவரை வெளிவந்திருக்கிற அகழ்வுகளின் வழி இலக்கியத்தை உறுதி செய்யுங்கள். அதன் வழி எம் வரலாற்றை மீட்டுத்தாருங்கள். அறிவியலும் பண்பாடும் புதைந்து கிடக்கிற அந்த வரலாற்றுப் பேழைகளைத் திறந்து எமக்குப் பரிமாறுங்கள்.

Leave a Reply