எங்கள் பயணத்தின் முதல் இடமாக நாங்கள் தேர்வு செய்த ஊர் உத்திரமேரூர். பழைய கற்காலத்தை சேர்ந்த கல் திட்டை, வடவாயில் செல்வி எனும் பல்லவர்கால கொற்றவையின் பலகைக்கல் சிற்பம், ஐயனார், பராந்தக சோழன் காலத்தில் குடவோலை தேர்தல் முறை மற்றும் விதிகளை கூறும் கல்வெட்டு, த்ரி தள அஷ்டாங்க விமான அமைப்பு கொண்ட சுந்தர வரதராஜ பெருமாள் கோயில், புணரமைக்கப்பட்ட கைலாசநாதர் கோயில், மாதிரி அம்மனாக வணங்கப்படும் சோழர்களின் காவல் தெய்வமான நிசும்பசூதனி, சப்தமாதர் சிற்பத்தொகுதி என உத்திரமேரூர் வரலாற்று ஆர்வலர்களுக்கு அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாக விளங்குகிறது.
அதைத்தொடர்ந்து உத்திரமேரூர் அருகேயுள்ள அனுமந்தண்டலம் எனும் கிராமத்திற்கு பயணப்பட்டோம். அங்கே பல்லவர்காலத்தை சார்ந்த போரில் பங்கெடுத்த வீரனின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல், சப்தமாதர், இரண்டு தவ்வை சிற்பங்களையும், ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள பாறையில் ஏகாந்தமாக நின்ற நிலையில் எட்டுக்கரங்களை உடைய கொற்றவையின் புடைப்புச்சிற்பம் என தன்னுடைய தேடலில் கண்ட இவ்விடங்களை எங்களுடைய உத்திரமேரூர் நண்பர் திரு. பாலாஜி அவர்கள் அழைத்துச் சென்று காட்டினார்.
அங்கிருந்து கூழமந்தல் கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் சென்றோம். இக்கற்றளியானது இராஜேந்திர சோழனின் குருவான ஈசான சிவ பண்டிதரால் கட்டப்பட்டதாகும். அதைத் தொடர்ந்து மாமண்டூர் மற்றும் நரசமங்கலம் கிராமத்தில் சித்திர மேக தடாகத்தின் கரையிலுள்ள மலைத்தொடரில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட நான்கு குடைவரை கோயில்களையும், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு மற்றும் சமணப்படுக்கைகள் கொண்ட இயற்கை குகைத்தளத்தையும், அருகிலுள்ள குரங்கணில்முட்டம் குடைவரையையும் பார்வையிட்டோம்.
காஞ்சிபுரத்தில் மதிய உணவை முடித்துவிட்டு காஞ்சி நகரில் அதிகம் அறியப்படாத கான்கிரீட் காடுகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பல்லவ பொக்கிஷங்களான மணற்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டுமான கோயில்களான பிறவாஸ்தானம், இறவாஸ்தானம், மதங்கீஸ்வரர், ஐராவதேஸ்வரர் கோயில்களை கண்டு வியந்தோம். இத்தனை ஆண்டுகளை கடந்து இயற்கை மற்றும் செயற்கை இடர்களை சந்தித்துப் அவற்றின் கம்பீரம் சிறிது கூட குறையவில்லை.
அதற்கு பின்னர் இரண்டாம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்ட பரமேஸ்வர விண்ணகரம் எனும் வைகுண்ட பெருமாள் முத்தள விமானக் கோயிலையும், இறுதியாக இராஜசிம்மனின் உன்னத படைப்பான கச்சிப்பேட்டு பெரியத் திருக்கற்றளியான கைலாசநாதர் கோயிலை பார்த்து ரசித்தோம்.
மேலும் இப்பயணத்தில் கல்திட்டை, குகைத்தளங்கள், சமணப்படுக்கைகள், குடைவரைக் கோயில்கள், பாறைகளில் குடையப்பட்ட புடைப்புச் சிற்பங்கள், பலகைக்கல் சிற்பங்கள், மணற்பாறைகளை கொண்டு உருவாக்கபட்ட கட்டுமானக் கோயில்கள், முத்தள விமானம், அஷ்டாங்க விமானம், சோழர் கால கற்றளிகள் என பழைய கற்காலம் முதல் பல்லவர் சோழர் காலம் வரை படிப்படியாக கட்டிடக்கலை வளர்ச்சியடைந்தை அறிந்து கொள்ள முடிந்தது.
மொத்தத்தில் எங்களுடைய உத்திரமேரூர்-காஞ்சி பயணம் நாங்கள் திட்டமிட்ட இடங்கள் மட்டுமில்லாமல் மற்ற பல புதிய இடங்களை பார்ப்பதற்கும், அவற்றை பற்றி கற்பதற்கும் நிறைய புதிய விஷயங்களை வாரி வழங்கியதென்றே சொல்ல வேண்டும்.