சென்னை வேலூர் நெடுஞ்சாலையில், 20 கி.மீ ராணிப்பேட்டைக்கு அருகில் நீவா நதிக் கரையில் பாடல் பெற்ற திருத்தலம் திருவல்லம் அமைந்துள்ளது. பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள் எனப் பல அரசர்கள் நிவந்தனம் அளித்த மற்றும் பாடல் பெற்ற தலம் இது.
திருவலம் கோயிலின் தெற்கே சுமார் 2 கி மீ. தொலைவில் கம்மராஜபுரம் என்ற சிறிய கிராமத்தில், பனந்தோப்பு என்ற பகுதி உள்ளது. விளைநிலங்களுக்கு நடுவில் சிதிலமடைந்த சிவன் கோயில் பூமியில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த ஆலய கற்கள் கருப்பு நிறத்தில் காணப்படுவதால் இக்கிராம மக்கள் இதைக் கருப்பு கோயில் என்று அழைக்கின்றனர்.
வயல்வெளியில் தூரத்திலிருந்தே அடர்ந்த மரங்கள் செழித்து வளர்ந்து இருப்பது தெரிகின்றது. இதன் அருகே சென்று பார்த்தாலும் ஆலயம் தெரியாதவாறு மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. மரங்களின் வேர்கள் கட்டடப் பகுதிகள் முழுவதும் ஊடுருவி உள்ளன.
கருவறை நிலமட்டத்திலிருந்து சுமார் 3 அடி கீழே உள்ளது. பத்து அடி சதுரத்தில் காணப்படும் கருவறை உள்ளே தெய்வ சிலைகள் ஏதும் இல்லை. உருளையான எட்டுத் தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. வடக்கு வாயில் உள்ளே நுழையும் போதே சுவரில் உள்ள உடைந்த கல்வெட்டு காணக்கிடைக்கிறது. துண்டு கல்வெட்டால் பொருள் ஏதும் புரியவில்லை.
உடைந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, நந்தி, முயலகன் எனச் சிற்பங்கள் சிதறிக் காணப்படுகின்றன. முயலகன் சிறு பாலகன் வடிவில் சிதையாமல் சுருண்ட கேசத்துடன் கையில் சிறு நாகத்துடன் அழகாகக் காட்சியளிக்கிறார். பார்க்கும் அனைவரையும் ஒருமுறை கைகளால் வருடவைக்கும் அழகு சிலை.
கிழக்கு மூலையில் மட்டும் ஆலய சுவர் சிதையாமல் உள்ளதால் அதில் உள்ள குறுஞ் சிற்பங்களைக் காணமுடிகின்றது. சிறு முனிவர்கள் வழிப்படும் காட்சி, நடனமாடும் நங்கை, மன்னர் ஒருவர் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி, இசைக்கருவிகள் வாசிக்கும் காட்சிகளும் மற்றும் தேவ கோட்டத்தின் மேலே மகரதோரணம். அதில் அழகிய வேலைப்பாடு உடையச் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. ஒரு மூலையிலே இவ்வளவு என்றால், முழு கோயிலும் சுவர் அழிவதற்கு முன்பு எப்படிக் காட்சியளித்திருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே.
கீழே விழுந்து கிடந்த மற்றொரு துண்டு கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ விக்ர (கி. பி.1118-1135) என்று ஆரம்பிக்கும் விக்ரமசோழன் ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணக்கிடைக்கிறது பாதி மட்டுமே உள்ளதால் முழு பொருள் விளங்கவில்லை. அருகில் உள்ள புதரில் மேலும் பல உடைந்த சிற்பங்கள் மறைந்தும் சிதறியும் கிடைக்கின்றன.