1792ல் ஆங்கிலேயரே நடக்காது என்று நினைத்தது நடந்தது. கார்ன்வாலிஸ், திப்புவின் கதை முடித்த தருணம் அது. போரில் வெற்றி கண்ட பின், திப்புவின் நாட்டிற்கு பல கிடுக்கிப்பிடிகள் கொடுத்து படிய வைத்தான் அவன். திப்புவின் மீது ஆறு கோடி அபராதம் விதித்து (பிறகு இது 3.3 கோடியாக குறைக்கப்பட்டது) ஒரு ஒப்பந்தம் தயாரானது. அந்த ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறும் வரை திப்புவின் ஏழு மற்றும் பதினோரு வயதான இரண்டு மகன்கள் பணயமாகக் கைது செய்யப்பட்டனர். இது ஆங்கில கம்பெனியாருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது.
இப்பேர்பட்ட வெற்றியை கொண்டாடவும், அதைத் தேடித் தந்த கார்ன்வாலிஸ் துரைக்கு நன்றி தெரிவிக்கவும், மதராஸில் வசித்த ஆங்கிலேயர்கள் தாமாக முன்வந்து ஒரு சிலை வைக்க பணம் வசூல் செய்தனர். இந்த வசூல் நடந்து கொண்டிருக்கையில், அந்த வௌ¢ளைக்கார பிரபு, கல்கத்தா சென்று மீண்டும் தன் தாயகமான இங்கிலாந்து திரும்பினான்.
அவனுக்கு இங்கிலாந்தில் தலை சிறந்த ஒரு சிற்பி சிலை வடித்தான். அதற்க்கு கீழே, புடைப்புச்சிற்பமாய் திப்புவின் இரண்டு மகன்கள் கைதாவதை வடித்து, மேலே உயரிய கார்ன்வாலிஸ் தனது பெரிய கண்களுடன் நிற்பது போன்றதோர் அற்புதச்சிலை. கீழே பிரிட்டிஷின் உருவகமாய் பார்க்கப்பட்ட ரோமானிய தேவதை “பிரிட்டானியா” மற்றும் வெற்றிக்கான ரோமானிய தேவதையான “விக்ட்டோரியா” திகழ, இந்த சிலை இந்தியா கொண்டு வரப்பட்டது. பொது மேடையில் வைக்கப்பட்ட சிலைகளில், இறக்குமதி செய்யப்பட்ட முதல் சிலை இந்தியாவில் இது தான். 1800ல் கோட்டையில் இந்த சிலையை ஒரு சிறு மண்டபத்தில் நிறுவினர். இந்த சிலை,அந்த கார்ன்வாலிஸ் மீண்டும் இந்தியா வரும் வரை காத்திருந்தது. 1805ல் அவன் மீண்டும் இங்கு வந்து, தனது ப்ரம்மாண்ட பளிங்கு உருவத்தை தானே கண்டு ரசித்திருப்பான். பின்னர், அவன் கொல்கத்தா சென்று, மாண்டான்.
ஒரு மண்டபம் அமைத்து, அந்த சிலையை தேனாம்பேட்டையில் நிறுவத் திட்டமிடப்பட்டது. ஆங்கிலத்தில், மண்டபத்திற்கு கப்போலா என்றும், அதன் கூரைக்கு செனடாப் என்றும் பெயர். இந்த பெயரை தாங்கியே இன்றும் ஒரு சாலை தேனாம்பேட்டையில் இருக்கிறது, ஆனால், இந்த சிலை அங்கு கொண்டுசெல்லப்படவில்லை. மண்டபம் மட்டும் நின்றது. பின்னர் அந்த மண்டபமும், 1880களில் “பர்ஸ்ட் லைன் பீச்”ற்கு மாற்றப்பட்டது. இன்றும் அது நிற்கிறது, ஆனால் சரித்திரச் சான்றாக அல்ல, திறந்த கழிவறையாக.
முன் கூறிய அந்த அழகிய சிற்பம் இன்று கோட்டை அருங்காட்சியகத்தில் நடுநாயகமாக நிற்கிறது. அது நின்றுகொண்டிருந்த அந்த சிறிய ‘கப்போலா’ இன்றும் நமக்கு கோட்டைக்கு வெளியிலிருந்தே காட்சி தருகிறது. கார்ன்வாலிஸ் கப்போலாவில், ஒன்று கோட்டையில் கேட்பாரற்றும் மற்றொன்று கழிவறையாகவும் தனது காலத்தை போக்கிக் கொண்டிருக்கின்றன.
படம் – கோட்டையில் உள்ள கார்ன்வாலிஸ் கப்போலா