நீர்நிலை பராமரிப்பின் முக்கியத்தும் கூறும் கல்வெட்டு -கி. ஸ்ரீதரன்

நீர்நிலைகள் பராமரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கல்வெட்டு
கி. ஸ்ரீதரன் (தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை)

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற ஊர் சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்கிறது. பல்லவ அரசர்கள் காலத்தில்அமைக்கப்பட்ட இந்த ஊர் சோழ மன்னர்கள் காலத்தில் மேலும் சிறந்து விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் காணப்படும் பராந்தக சோழனது கல்வெட்டில் குறிக்கப்படும் “குடவோலை” முறை அக்காலத்தில் இருந்த கிராம நிர்வாக அமைப்புமுறை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. அவ்வூரின் மேற்கில் உள்ள “வைரமேக தடாகம்” என்ற எரி எவ்வாறு தூர்வாரி, ஆழப்படுத்திப் பராமரிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகளினால் அறிய முடிகிறது. நீர் நிலைகளைப் பண்டைய நாளில் எவ்வாறு சிறப்பாகப் போற்றிப் பராமரித்தனர் என்பதற்கு உத்திரமேரூர் சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்திரமேரூலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சோமநாதபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் “பார்ப்பனர்குளம்“ என்று அழைக்கப்படும் குளம் மிகவும் மண்மேட்டிட்டுத் தூர்வாராமலும், ஆக்கிரமிப்புகளினால் பாழ்பட்டும் இருந்தது.

“சேவாலயா” என்ற அமைப்பு ஹுண்டாய் க்ளோவில் நிறுவனத்துடன் இணைந்து உத்திரமேரூர் பேரூராட்சி உதவியுடன் இக்குளத்தைத் தூர்வாரிச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டது. குளத்தைச் சுற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இக்குளத்தினைத் தூரெடுத்து ஆழம் செய்யும் பொழுது, குளத்தின் மேற்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் கற்கள் போடப்பட்டுப் படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தது வெளிப்படுத்தப்பட்டது. மேற்குப்பகுதியில் படித்துறை சரிவாகக் குளத்திற்குள் இறங்குவது போல அமைக்கப் பட்டுள்ளது.இத்தகைய அமைப்பு கால்நடைகளான மாடு, ஆடுகள் சரிவான படித்துறையில் இறங்கி நீர் அருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். காஞ்சிபுரம் செல்லும் வழியில் இக்குளம் அமைந்திருப்பதால் வண்டிகளை இழுத்துச் செல்லும் மாடுகள் மற்றும் கால்நடைகள் எளிதாக இறங்கிக் குளத்து நீரை அருந்த இத்தகைய அமைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

குளத்தின் மேற்குப் பக்கத்தில் உள்ள படித்துறையின் இருபக்கங்களிலும் மண் சரிந்துவிடாமல் இருக்கக் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இக்கற்களில் ஒன்றில் கோயிலின் அடித்தளம் (அதிட்டானம்) பகுதியில் அமைந்திருக்கும் முப்பட்டக வடிவிலான குமுதவரியில் கல்வெட்டு காணப்படுகிறது. கோயிலுக்குரிய கட்டுமான கற்களும் இப்பகுதியில் காணப்படுகிறன.

கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஏதாவது ஒரு கோயிலைச் சேர்ந்திருக்க வேண்டும்.

முப்பட்டக குமுதவரியில் காணப்படும் கல்வெட்டு பல்லவ மன்னன் கம்பவர்மனின் காலத்தைச் சேர்ந்ததாகும். இம்மன்னன் உத்திரமேரூர் கோயில்களுக்கும் வரமேக தாடகம் என்ற ஏரிக்கும் பெரிதும் தொண்டு செய்துள்ளான். குளக்கரையில் காணப்படும். கல்வெட்டு கம்பவர்மனின் 26வது ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். உத்திரமேரூரைச் சேர்ந்த எண்ணெய் வணிகக்குழுவைச் சேர்ந்த சங்கரப்பாடியார் காஞ்சிபுரத்துக் கச்சிப்பேட்டு அரையன் பரமயன் அய்யன் என்பவர் அய்யன் ஸ்ரீ கோயிலையும் மண்டபத்தையும் எடுப்பித்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சங்கரப்பாடியார் குழுவினர் சொல்ல உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்து உத்திரமேரூர் பெருந்தச்சன் இக்கல்வெட்டினைப் பொறித்தான் என்பதை அறிகின்றோம். இக்கல்வெட்டினைப் படித்து இக்கருத்துக்களைத் தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் சு. ராசகோபால் முனைவர் நா. மார்க்சியக் காந்து ஆகியோர் கூறினார்கள்.

சீர் அமைக்கப்பட்ட குளத்திற்கு வடக்கே சிவலிங்கமேடு என்ற பகுதியை ஆய்வு செய்தபொழுது சற்று மேடான பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் மிக்க நந்தியின் கற்சிற்பமும், சிவலிங்கத்தின் (எட்டுப்பட்டைகொண்ட) அடிப்பகுதியான ஆவுடையாரும் காணப்பட்டன. குளத்தில் காணப்படும் கல்வெட்டு குறிப்பிடும் அய்யன் ஸ்ரீ கோயில் என்பது இதுவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இப்பகுதியும் குளக்கரையில் காணப்படும் கற்களையும் ஆய்வு செய்தால் மேலும் கல்வெட்டுகள், வரலாற்றுசெய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

களஆய்வு: கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை கண்காணிப்பாளர, தமிழகதொல்லியல் துறை (பணி நிறைவு)

ஆய்வு உதவி: சேவாலயா வி. முரளீதரன், இயக்குநர், மா. கேசவன், பாலாஜி – உத்திரமேரூர்

உத்திரமேரூர் கல்வெட்டு வாசகம்:

1. ஸ்வஸ்திஸ்ரீ கம்பவர்மருக்கு யாண்டு இருபத்தாறாவது உத்திரமேரூர் சதிர்வேதி மங்கலத்து சங்கபாடி [அய்]
2.. யன் சீகோயிலும் மண்டகமும் கச்சிப்பேட்டு பரமந் சங்கரப்பாடி அரையன் தேய பரமண்ய [ன் செ]
3. ய்வித்த அய்யன் ஸ்ரீகோயிலும் மன்கமும் ப[நனா]ட்டுப் பலபறிய மண்டகமாக பேர் சாத்திநோம்
4. உத்திரமேரூர் சதிர்வேதி மங்கலத்து சங்கரப்பாடி [ஸபையோம்] இவர்கள் சொல்ல சபை
5.தச்சந் உத்தர மேருச் சதிவேதி மங்கலத்து உத்தமேரூப்பெருநதச்சநேன்

பல்லவமன்னன் கம்பவர்மன் கி.பி காலத்தில் கச்சிப்பேட்டு காஞ்சிபுரம் சேர்ந்த எண்ணெய் வணிகர்கள் அய்யன் ஸ்ரீ கோயிலை எழுப்பியிருகிறார்கள். அக்கோயிலிருந்த கட்டுமானத்தில் முப்பட்டை குமுத வரியில் உள்ள கல்வெட்டு இது. உத்திரமேரூர் சங்கரப்பாடி சபையிற் சொல்ல உத்திரமேரூரைச் சேர்ந்த உத்திரமேரூர்ப் பெருந்தச்சன் என்பவர் இக்கல்வெட்டினைப் கல்லில் பொறித்துள்ளார்.

இப்பகுதியை ஆய்வு செய்தால் மேலும் பல கல்வெட்டுகள் கோயிலின் கட்டடப் பகுதிகள் கிடைக்கக்கூடும். தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் சு. ராஜகோபால் முனைவர் மார்க்சீயக் காந்தி ஆகியோர் உதவியுடன் இக்கல்வெட்டு படிக்கப்பட்டது.

இக்கல்வெட்டு குறித்த ஆய்வறிக்கை தமிழ் நாடு அரசு தொல்லியல் துறைக்கு என்னால் அனுப்பட்டுள்ளது.

Leave a Reply