மரபு, மருத்துவம், சூழியல் – சந்தோஷ் மாதேவன், சென்னை

குற்றங்களற்ற ஊரில் காவலர்களின் துணை தேவைப்படாது என்ற காரணத்துக்காகவே இங்கு மூடப்பட்ட காவல் நிலையங்கள் பல உள்ளன. அமைதியான சூழல், மகிழ்ச்சியான மக்கள் என நிரம்பியிருக்கும் தமிழ்நாட்டின் பல சிற்றூர்கள் காவல் நிலையங்களே இல்லாமலிருக்கின்றன. இது கொஞ்சம் விசித்திரமான சட்டம்தான். ஆனால், தருக்க அடிப்படையில் பார்க்கும்போது குற்றமில்லாத இடத்தில் காவல் நிலையம் தேவையில்லை என்பதே உறுதியாகிறது.

 

காவல்துறை மட்டுமின்றி, இது ஒரு அரசாங்கத்தின், அல்லது ஒரு ஊரின் எந்த ஒரு பொது சேவைத் துறைக்கும் பொருந்தும். திருச்சி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் உழவர்களுக்கெனத் தனியாக ஒரு குறைதீர்க் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஆட்சியர் அலுவலகத்தில் கூடும். வேளாண்மை பெரிதும் செய்யப்படாத மாவட்டங்களில் இத்தகைய குறைதீர்க் கூட்டங்கள் நடப்பதில்லையென்றே கருதுகிறேன். அதே போல், கடற்கரை மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்கள் மீனவர்களுக்கெனச் சில சிறப்பு நடைமுறைகளை மேற்கொள்வதும் வழக்கம். இது அந்தந்த ஊர்களின் இயல்பின் அடிப்படையிலேயே மாறுகிறது.

அதாவது, ஒரு பொது சேவையானது, அந்த ஊரின் சூழலியல் அமைப்பு மற்றும் அந்த மக்களின் உளவியலைப் பொறுத்தே முகமைத்துவம் பெறுகிறது. இந்தப் பெரும் துணைக் கண்டத்திலேயே, வாழைச்சாகுபடி அதிகமாகச் செய்யப்படும் திருச்சியில்தான் இந்திய ஒன்றிய அரசு, வாழை ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. தமிழகத்துக் கடல்சார் ஆராய்ச்சிகளெல்லாம் பெரும்பாலும் சென்னை, நாகப்பட்டினம் அல்லது தூத்துக்குடியில்தான் இன்றும் நடைபெறுகின்றன. இதெல்லாம் அந்த ஊர்களின் இயல்பினாலேயே அங்கே நிகழ்கின்றன.

இந்த இயல்பு, ஒரு ஆராய்ச்சி மையத்துக்கோ, பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ மக்களை இட்டுச்செல்கிறதென்றால் அதை வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முதலில் கூறியதுபோல் ஒரு காவல் நிலையத்தில் போய் முடிகிறதென்றால், அச்சமூகத்தில் ஏதோ சிக்கல் இருக்கிறதென்றுதானே பொருள்?

அதேபோல், காவல் நிலையத்துக்குப் பதிலாக அதுவொரு மருத்துவமனையாக இருக்கும் சூழலில், அதை எப்படி எடுத்துக்கொள்வது? காவல் நிலையங்கள் தேவைப்படும் ஊரில் குற்றங்கள் தலைவிரித்து ஆடுகிறதென்றால், மருத்துவமனைகள் அதிகம் உள்ள ஊரில் நோய்களுக்குக் குறைவில்லை என்றுதானே பொருள்? அப்படியானால் மருத்துவ வசதியில் செழிக்கும் ஒரு சமூகத்தை வளர்ச்சியடைந்த சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா?

ஒரு நிலம் மற்றும் வீடு விற்பனை விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பெருநகரத்தின் எல்லைக்குச் சற்று வெளியே இடம்பெறும் ஒரு நிலத்தை விற்க, அருகிலிருக்கும் வசதிகளாக வானூர்தி நிலையம், தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம் என அவர்கள் பட்டியலிடும்போது அதில் கண்டிப்பாக ஒரு மருத்துவமனையும் சேர்ந்துவிடும். இது போன்ற தருணங்களில் தான் நாம் நம்முடைய உளவியலை நேரடியாக உணர்கிறோம். வாரம் முழுக்க வேலைக்குச் செல்லப் பயன்படும் பேருந்து அல்லது மின் தொடர்வண்டியின் வரிசையில் என்றோ ஒருநாள் நோய்க்கு மட்டும் தேவைப்படும் ஒரு மருத்துவமனை இடம்பெறும் ஒரு விளம்பரம்தான் இன்று நம் சமூகத்தின் உளவியல் சிக்கலை அப்பட்டமாகக் காட்டுகிறது.

துவக்கத்தில் கூறியதுபோல் ஒரு பொது சேவையானது சூழலியல் அல்லது உளவியல் சார்ந்தே எந்தவொரு சமூகத்திலும் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில், மருத்துவமனைகள், ஏற்கனவே நம் வாழ்வின் ஒரு அங்கமாக நம் உளவியலுக்குள் கட்டமைக்கப்பட்டுவிட்டன.

ஆனால், உண்மையில் மருத்துவ சேவையானது, சூழலியல் மற்றும் புவியியல் அடிப்படையில்தான் ஒரு சமூகத்தில் அமையவேண்டும். இதற்கான உதாரணங்கள் ஒரு தலைமுறை முன்புவரை இங்கே உலாவிக்கொண்டுதான் இருந்திருக்கின்றன.

எங்கள் ஊரில் இன்றுவரை கடலுயிரினங்கள்தான், குறிப்பாக மீன் பரவலாக உண்ணப்படும் அசைவ உணவு. ஒரு 35 ஆண்டுகளுக்கு முன்புவரை எங்கள் ஊரில் சுப்பிரமணி என்று ஒரேயொரு அலோபதி மருத்துவர் இருந்துள்ளார்.

பிறரெல்லாம் தமிழர்வழி அல்லது இன்று ‘மரபுவழி’ என்று புதிய பெயர்க்கொண்டுள்ள மருத்துவர்கள் தான். மீன் அதிகம் உட்கொள்ளும் ஒரு சமூகத்தில் அடிக்கடி வரும் ஒரு சிக்கல், தொண்டையில் முள் மாட்டிக்கொள்வது. இதற்காகவென்றே சுப்பிரமணி ஒரு மருத்துவக் கருவியைப் பயன்படுத்தி வந்தார். கைக்கடிகாரத்தின் சங்கிலி இணைப்பைப்போல் வடிவம் கொண்ட அந்தக் கருவி, தொண்டைக்குள் சென்று குரல்வளை வரை சிக்கியிருக்கும் எந்த ஒரு சிறு பண்டத்தையும் எளிதாக உணவுக்குழாய்க்குள் தள்ளிவிட்டுவிடும்.

இப்போது, சூழலியலின்படி பார்த்தால், மீன் உண்ணாத ஒரு சமூகத்தில் இந்த மருத்துவக் கருவிக்கு வேலையில்லை. இவ்வளவுதான் மருத்துவத்தின் தேவை. மீன் முள் துவங்கி புற்றுநோய் வரை இது அனைத்து மருத்துவச் சிக்கல்களுக்கும் பொருந்தும்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில் தெற்காசிய நாடுகளை நடுங்கச்செய்த சார்ஸ் நோய், தென்னிந்தியப் பகுதியில் மட்டும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கண்டு அஞ்சிய சிக்குன் குனியா நோய்க்கு நம் வீட்டு கழிவுநீர்ப் பாசனத்தில் விளைந்த பப்பாளி மரத்தின் இலைகள்தான் மருந்து என அலோபதியே ஒப்புக்கொண்டதல்லவா? அதேபோலத்தான் சில நாட்களுக்கு முன் டெங்குவுக்கு நிலவேம்பு மருந்தானது.

இந்நிலையில், நமக்கு சார்ஸும், டெங்குவும், சிக்குன் குனியாவும் சுட்டிக்காட்டுவது இதுதான் – மருத்துவம் என்பது சூழலியல் சார்ந்த்தது. அதற்காக பம்மல் கே சம்பந்தம் திரைப்பட வசனம் போல் ‘பாம்பேயில இருக்கும்போது மெட்ராஸ் ஐ வராது’ என்று பொருள் கொள்ள முடியாது. மும்பையில் இருப்பவருக்கும் சென்னையில் பரவும் இதே பார்வைக்கோளாறு ஏற்படும். எப்போதென்றால், இருவரின் வாழ்வியலும் ஒரே போன்றதாக மாறும்போது.

பிற எந்த விலங்கினத்தைப்போன்று மனித இனமும் பன்முகத்தன்மைக்கொண்டது. பனிக்கரடிக்கும் பாண்டாக்கரடிக்கும் வெவ்வேறு வாழ்வியல்தான் இருக்கிறது. இரு இனத்துக்கும் வெவ்வேறு உறைவிட, உணவு மற்றும் உறக்கப் பழக்கவழக்கங்கள் உள்ளன. அதனால்தான் அவையிரண்டும் வேறுபடுகின்றன. மனிதனும் அப்படியானவன் தான். ஆனால், அவனை ஒரு ஓர்மைக்குள் அடைக்கும்போதெல்லாம் இப்படிப்பட்ட உளவியல் சிக்கலைச் சந்திக்கிறான்.

ஒரே மதம், ஒரே மொழி எனக்கூறும் போது சினங்கொள்ளும் அவன், ஒரே வாழ்வியலுக்கு மட்டும் ஏனோ ஒத்திசைந்துவிட்டான்.

மும்பையிலிருப்பவரும், சென்னையிலிருப்பவரும், டோக்கியோவிலிருப்பவரும் ஒரே உணவை உட்கொள்ளும்போது, ஒரே போன்ற எரிபொருள் புகையினால் மாசுபட்ட காற்றை உள்வாங்கும்போது, ஒரே தட்பவெப்ப நிலைக்குத் தன்னைத்தானே குளிரூட்டிக்கொள்ளும்போது, இப்படி ஓரே நோயினால் அவதிப்படுவதொன்றும் வியப்பில்லைதானே.

இதை வைத்துக்கொண்டு, உலகமயமாதல் கொள்கை வணிகத்துக்கு வரமாக இருந்தாலும், வாழ்வியலுக்குப் பங்கமாக இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வருவதும் ஒருவகை அறியாமையே. ஏனென்றால், அது நம் வாழ்வியலுக்குள் சிக்கல் ஏற்படுத்தப்படுவதே, வணிகத்துக்கு வரம் கிடைக்கத்தான்.

பலதரபட்ட மனிதர்களுக்கு ஒரே ஒரு சுப்பிரமணி மருத்துவர் என்ற நிலை மாறி, இன்று ஒரே வகை மனித வாழ்வியலுக்குள், கண்ணுக்கொரு சுப்பிரமணி, இதயத்துக்கு ஒரு சுப்பிரமணி, எலும்புக்கொரு சுப்பிரமணி என்று மருத்துவர்களைப் பல தரப்பட்டவர்களாக்கியது தான் அலோபதியின் சாதனை.

அம்மை நோய் தாக்கினால் வேப்பிலை கொண்டும், மஞ்சள் நீராட்டியும் குணமடையச்செய்யலாம். இது தமிழரின் மரபு வழி மருத்துவம். ஒருவேளை அமெரிக்க ஆராய்ச்சி மையத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட எபோலா தாக்கினால், எந்த வேப்பிலைகொண்டு உடல்நிலையை மீட்டெடுக்க முடியும்? இதுதான் இந்த உலகமயமாதல் தன் வணிகத்தின் வரத்துக்காக வாழ்வியலுக்குள் ஏற்படுத்தும் சிக்கல். அது நோய்களையும் உருவாக்கும், அதற்கான மருந்துகளையும், மருத்துவ வசதிகளையும், பல தரபட்ட மருத்துவர்களையும் சேர்த்தே உருவாக்கும்.
கண் பார்வைக்கோளாறுக்குக் கண் மருத்துவரை அணுகுவது மட்டுமே ஒரே தீர்வு என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். இதற்கு இந்த உலகமயமாதல் நம் உளவியலுக்குள் செய்த மாற்றங்களே காரணமாகின்றன. நம் நிலத்துக்கான உணவையும், நம் வாழ்வியலையும் சார்ந்தே நம் அன்றாடம் இருந்திருக்குமேயானால், இந்தச் சிக்கல்களே நமக்கு நேர்ந்திருக்காது.

அப்படிப் பார்த்தால், இங்கு அலோபதி மருத்துவத்துக்கு மாற்றென்று நாம் கூறவேண்டியது மரபுவழி மருத்துவமல்ல, அது மரபுவழி வாழ்க்கைமுறை. அந்த வாழ்க்கை முறைக்குள் மகப்பேறுமுதல் காடாற்றுவரை எவையெல்லாம் அடங்குமோ அவைகளையெல்லாம் நோக்கி நாம் திரும்பவில்லையென்றால், இன்னும் சில நாட்களில் வலப்பக்கக் கண்ணுக்கொரு சுப்பிரமணியென்றும், இடக்கண்ணுக்கு ஒரு சுப்பிரமணியென்று கூட அலோபதி முறைகள் பரிணாம வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

எங்கள் ஊரில் தெருவுக்கொரு மருத்துவமனை இருக்கிறதென்பது பெருமையல்ல. அத்தனை நோய்கள் உங்களைச் சுற்றியுள்ளது என்பதற்கான அறிகுறி. நீங்கள் சென்னைக்கு மிக அருகில், செங்கல்பட்டில் வீடுவாங்கி குடிபெயர்ந்து போகும்போது, மருத்துவமனை உங்களுக்கு அருகே இருக்கவேண்டியதில்லை. ஆனால் உங்கள் வீட்டின் சமையலறையிலும், உங்கள் சூழலியலிலும் தான் உள்ளது என்ற எண்ணம்தான் மரபுவழிக்குத் திரும்புவதற்கான முதல் அடி.

Leave a Reply