பல்லவர்களின் எல்லைப்பகுதியைக் காத்தவர்கள் Bana என்ற வாணர்கள். வாணர்கள், வணிகத்தோடு தோடர்புடைய வடுகப்பெருவழி (வடுகவழி பன்னிரண்டாயிரம்) பகுதியைச் சேர்ந்தவர்கள். சாளுக்கியர், பல்லவர், கங்கர், கடம்பர், பல்லவர், சோழர் என யாராக இருந்தாலும் வட தமிழக அரசியலை அன்று நிர்ணயித்த குறுநில மன்னர்களில் ஒருவர் வாணர்கள் (Bana Dynasty). அவர்கள் ஆண்ட பகுதி இன்றைய தென் ஆந்திர கர்நாடக, கோலார், சேலம் மற்றும் வட ஆற்காடு மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.
பல்லவர்கால நடுகற்களில் பெரும்பாலனவை சங்க இலக்கியம் கூறும் பெரும்பாணப்பாடி நாடு (Panarastra) எனும் பாணர்/வாணர்களின் பகுதியில் கிடைத்துள்ளவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்கள் வடுகப்பெருவழி எனும் ஆந்திர வணிகப்பெருவழிப் பாதையைக் காத்தவர்கள் எனலாம்.
சங்க கால இலக்கியமும் வணிகத்துக்காக சென்றவர்கள், காட்டு வழியில் மறைந்திருந்த கள்வர்களால் கொல்லப்பட்டனர் எனக் கூறுகிறது. பின்பு, அம்பெய்திக் கொல்லப்பட்ட போது இறந்தவர்களுக்காக அப்பாதையின் அருகில் கற்பதுக்கைகளை எழுப்பியும், நடுகற்களை நட்டும் வழிபட்டனர் எனக் கூறுகிறது.
வரலாற்றில் மிக நீண்ட தடயங்களை விட்டுச்சென்ற வாணர்களிடமிருந்தே, பிற்கால சோழர் ஆதரவு பெற்ற இடைக்கால வணிகக்குடியின் ஒருபிரிவினரான வளஞ்சியர் கிளைத்து தோன்றியிருக்கலாம்.
வாணர் குந்தவை என்ற பெயர்களுக்கு அப்படி என்ன தொடர்போ தெரியவில்லை பொன்னியின் செல்வன் புகழ் வாணர் குல வந்தியத்தேவன் – குந்தவை தொடர்புக்கு முன்பே, வரலாற்றில் வாணர் குந்தவை ஜோடி உள்ளது. அதனை பின்பு காணலாம்.