ஆந்திர தேச கடவுள் கனவில் கூற, கன்னடப் பேரரசை ஆளும் துளு அரசர், தமிழ் புலவர் பற்றி தெலுங்கில் எழுதிய காவியம்
கிருஷ்ணதேவராயர், புலமைமிக்க அறிஞராகவும் மிகச்சிறந்த கவிஞராகவும் இருந்தார். சமகால இலக்கியங்களும் கல்வெட்டுகளும் இவரை, ‘காவிய நாடகம் அலங்கார மர்மக்ஞர்’ (காவியம், நாடகம், மற்றும் அணி இலக்கணத்தின் ரகசியங்களை அறிந்தவர்), ‘சாகித்ய சமர ஆங்கண சர்வபௌம’ (இலக்கியத்திலும் போர்க்களத்திலும் பேரரசர்), மற்றும் ‘கவிதா பிரவீண்ய ஃபணிச’ (கவிதை இயற்றும் திறனில் ஆதிசேஷனை போன்றவர்) என்றெல்லாம் போற்றுகின்றன. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இவர் இயற்றிய படைப்புகள் இவரின் பன்முகப் புலமைக்கும் கவித்திறனுக்கும் சான்றாக விளங்குகின்றன.
கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் பல நூல்களை இயற்றினார். இவரின் ‘மதாலாசாரித்ரா’ நூல், உவமை மற்றும் பிற அணிகளால் நிறைந்துள்ளது. மற்றொரு காவியமான ‘சத்யவதூ ப்ரீனனம்’, அசைவு, பொருள் மற்றும் மறைமுகக் குறிப்புகளுக்காக புகழ்பெற்றது. ராயர், சுருதி, புராணம் மற்றும் உபசம்கிதா ஆகியவற்றிலிருந்து கவனமாகப் பரிசீலித்து, தேர்ந்தெடுத்த உள்ளடக்கங்களைக் கொண்டு ‘சகலகதசார சங்கிரஹா’வை இயற்றினார். ‘ஞானசிந்தாமணி’ என்பது ஒரு தத்துவ நூலாகும். இது பல்வேறு தத்துவப் பள்ளிகளைப் பற்றிய அவரின் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது. ‘ரசமஞ்சரி’ என்பது சொல்லணிகள் குறித்த ஒரு அறிவார்ந்த ஆய்வாகும். ‘ஜம்பவதி கல்யாணம்’ என்னும் நாடகம் ஹம்பியில் உள்ள கடவுள் விருபாட்சாவின் வசந்த உற்சவத்தின்போது, அரங்கேற்றவதற்காக சிறப்பாக எழுதப்பட்டது.
ஆமுக்தமால்யதா: தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த காவியம்
இந்த புகழ்மிக்க தெலுங்கு காவியம், கிருஷ்ணதேவராயரின் மிகச்சிறந்த படைப்பாகும். இது இறுக்கமான நடையில் சமஸ்கிருத சமாசங்களும் தூய தெலுங்கு வார்த்தைகளும் கலந்து, தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த காவியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நூல், கிருஷ்ணதேவராயரின் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளின் மீதான ஆளுமையையும், வைணவ சித்தாந்தமான விசிஷ்டாத்வைத தத்துவம் மற்றும் அரசு நிர்வாகம் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவையும் வெளிப்படுத்துகிறது.
கிருஷ்ணதேவராயர் கலிங்கத்தின் மீது படையெடுத்தபோது, சில நாட்கள் விஜயவாதியிலும் பின்னர் அங்கிருந்து ஸ்ரீகாகுளத்திலும் தங்கினார். அங்குள்ள தெய்வமான ஆந்திர விஷ்ணுவை வணங்கி, ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். அந்த இரவில், நான்காவது யாமத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில், ஆந்திர விஷ்ணு கடவுள் தெலுங்கில் ஒரு காவியம் இயற்றும்படி அவருக்குக் கட்டளையிட்டார். கிருஷ்ணதேவராயர் புலவர்களை அழைத்து கனவைப் பற்றித் தெரிவித்தார். அது ஒரு நல்ல சகுனம் என்று கூறிய புலவர்கள், அந்நூலை இயற்றும்படி ராயரை ஊக்குவித்தனர்.
இந்த காவியம், தென்னிந்தியாவின் பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) கதையைக் கூறுவதால், ‘விஷ்ணுசித்தீயம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், தான் அணிந்து கழித்த மாலையை இறைவனுக்குச் சூடிய, ஆழ்வார்களிலேயே ஒரே பெண்ணான ஆண்டாள் (கோதை) கதையையும் கூறுவதால், இது ‘ஆமுக்தமால்யதா’ எனப் பிரபலமாக அறியப்படுகிறது. இந்நூலின் முக்கிய கருப்பொருள், தென்னிந்தியாவின் வைணவ ஞானநூலில் இருந்து எடுக்கப்பட்டது. அதேநேரம் பக்தி மற்றும் பிரபத்தி (இறைவனிடம் முழுமையாக சரணடைதல்) கோட்பாடுகளை விளக்குவதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஆமுக்தமால்யதா: கதையின் சுருக்கம்
பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற நகரம் இருந்தது. அங்கு விஷ்ணுவுக்கு புகழ்பெற்ற கோயில் இருந்தது. விஷ்ணுசித்தர் என்ற வைணவ பிராமணர், பெரிய அறிஞராக இல்லாவிட்டாலும், விஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தார். அவர் தினமும் இறைவனுக்கு மாலைகளைக் கட்டி கொடுக்கும் எளிய பணியை மேற்கொண்டார். மேலும், வருகைதரும் பக்தர்களுக்கு உணவளித்து உபசரித்தார்.
தக்ஷிண மதுராவைத் தலைநகராகக் கொண்டு, பாண்டிய மன்னன் மத்சியத்வஜா ஆட்சி செய்து வந்தார். ஒரு நாள், இரவு மன்னன் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பிராமணர்கள் குழுவைப் பார்த்தார். அவர்களில் ஒருவர், வசந்த காலத்தில் மழைக் காலத்தின் துன்பங்களைத் தவிர்க்க, பகலில் இரவின் துன்பங்களை வெல்ல, இளமையில் முதுமையின் தீமைகளைத் தடுக்க, மற்றும் இந்த வாழ்க்கையில், மறுபிறவியில் ஆனந்தமடைய, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் ஒரு செய்யுளைச் சொன்னார். அதைக் கேட்ட மன்னன், சிற்றின்பத்தில் மூழ்கி, மோட்சத்தை அலட்சியம் செய்ததற்காக வருந்தினான். மோட்சத்திற்கான வழியைக் கண்டறிய முடிவு செய்தான். மறுநாள், மன்னன் தன் அவையில் உள்ள அனைத்து அறிஞர்களையும் வரவழைத்து, எந்தக் கடவுள் மோட்சத்தை அருளக்கூடியவர் என்று கேட்டான். சிறந்த பதிலுக்குப் பரிசாக, ஒரு தங்க நாணயப் பையை ஒரு தூணில் தொங்கவிட்டான்.
இதற்கிடையில், ஒரு நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில், விஷ்ணுசித்தர் வழக்கம்போல் இறைவனுக்கு மாலைகளுடன் சென்றபோது, பாண்டிய மன்னனின் அரசவையில் நடப்பதைக் கடவுள் அவரிடம் கூறினார். அங்குச் சென்று மற்ற அறிஞர்களை வென்று, விஷ்ணுவின் பெருமையை நிலைநாட்டி, பாண்டிய மன்னனை வைணவராக மாற்றும்படி அவருக்குக் கட்டளையிட்டார். சாஸ்திரங்கள் தனக்குத் தெரியாது என விஷ்ணுசித்தர் கூறியபோது, கடவுள் அவரிடம் புலமை தானாகவே வரும் என்றும் வெற்றி நிச்சயம் என்றும் கூறினார். இதனால் உற்சாகமடைந்த விஷ்ணுசித்தர் மதுரை சென்றார்.
விஷ்ணுசித்தர் பாண்டிய மன்னனின் அரசவைக்குச் சென்றபோது, வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட அறிஞர்கள் தங்கள் தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தனர். அரசனையே நடுவராகக் கொண்டு, அறிஞர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அவர் அனைத்து அறிஞர்களையும் வென்று, விஷ்ணுவே அனைத்துக் கடவுளுக்கும் மேலானவர் என்றும், பக்தி மார்க்கமே முக்திக்கு ஒரே வழி என்றும் நிலைநாட்டினார். இது தொடர்பாக, கண்டிக்யா மற்றும் கேசித்வஜா கதையையும் விவரித்தார். அவரின் செயலால் மகிழ்ந்த மன்னன் அவருக்குச் செல்வத்தையும் கௌரவத்தையும் வழங்கினான். விஷ்ணுசித்தர் அந்தச் செல்வத்தை பக்தர்களின் சேவைக்காகச் செலவிடுவார் என்று அறிந்த விஷ்ணு பகவான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விஷ்ணுசித்தரின் வீட்டை ரத்தினங்களால் நிரப்பும்படி கட்டளையிட்டார். வீடு திரும்பியதும் விஷ்ணுசித்தர், தான் அடைந்த மாற்றம் இறைவனின் அருளால்தான் என்று உணர்ந்து, முன்போலவே பக்தர்களுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் இறைவனுக்கும் மாலைகள் சூடிச் சேவை செய்து வந்தார்.
ஒருநாள், துளசித் தோட்டத்தில் தோண்டிக் கொண்டிருந்தபோது, விஷ்ணுசித்தர் ஒரு தாமரைத் தடாகத்தின் அருகே ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று தன் மனைவியிடம் கொடுத்தார். இருவரும் அக்குழந்தையை மிகுந்த கவனத்துடன் வளர்த்தனர். காலப்போக்கில் அக்குழந்தை அழகான இளம்பெண்ணாக வளர்ந்தாள். அவளுக்கு கிருஷ்ணன் மீது ஈடு இணையற்ற காதல் இருந்தது. அவனுடன் சேர ஏங்கினாள். அவளது தோழிகள் அவளைச் சத்தியபாமா என்று கேலி செய்தனர். கோதைவரி என்று பெயரிடப்பட்ட அந்த இளம் பெண், தன் தந்தை கட்டிய பூ மாலைகளைத் தன் கூந்தலில் சூடிக்கொண்டு, கிணற்றில் தன் பிம்பத்தைப் பார்த்து ஆனந்தமடைந்தாள். ஒரு நாள், விஷ்ணுசித்தர் இறைவனை மாலைகளால் அலங்கரித்துக்கொண்டிருந்தார். அப்போது கோதை, இறைவனின் மீது காதல் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தாள். அவளது மனம் ஒரு வெறி நிலையை அடைந்தது. தன் மகளின் நோயின் தன்மையை அறியாத விஷ்ணுசித்தர், இறைவனிடம் உதவிக்கு வேண்டினார். அப்போது இறைவன் கோதை, பூமிதேவியின் அவதாரம் என்றும், அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தினார்.
விஷ்ணுசித்தர் தன் மகளுடன் ஸ்ரீரங்கம் சென்று, ரங்கநாதரை வழிபட்டார். கோதை யார் என்பதை அறிந்த ரங்கநாதர், அவளது அழகில் ஈர்க்கப்பட்டு, அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். அவளுக்குப் பதிலாக அதே உருவத்தில் இன்னொருத்தியை அமர்த்தினார். விஷ்ணுசித்தர், அந்தப் பொம்மை கோதைவை ஒரு பல்லக்கில் வைத்துத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றார். ஆனால் பல்லக்கு காலியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அப்போது விஷ்ணுசித்தர் இறைவனைக் குற்றம் சாட்டி, தன் மகளைத் திரும்பத் தருமாறு கோரினார். இறைவனின் ஆலோசனையின்படி, தன் வீட்டில் தேடிப் பார்த்தபோது, தன் மகளை வீட்டிற்குள் கண்டார். பின்னர், ரங்கநாதர், பிரம்மா, ருத்ரன் மற்றும் பிற கடவுள்களை விஷ்ணுசித்தரிடம் அனுப்பி, கோதைவைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். விஷ்ணுசித்தர் சம்மதித்தார், ஆனால் திருமணம் தன் சொந்த ஊரில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அங்கிருந்த கூட்டத்தினருடனும், பிற கடவுள்கள் மற்றும் தெய்வங்களுடனும், ரங்கநாதர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று, ஒரு சிறந்த இளவரசருக்குரிய வகையில் கோதைவைத் திருமணம் செய்து, அவளுடன் ஸ்ரீரங்கம் திரும்பினார்.
கதையில் சேர்க்கப்பட்ட புதிய பகுதிகள்
கிருஷ்ணதேவராயர் சில காரணங்களுக்காக, அசல் கதையில் பல மாற்றங்களையும் சேர்த்தல்களையும் செய்தார். அசல் கதையில் கோதை ஒரு சிறந்த பக்தையாகச் சித்தரிக்கப்பட்டாலும், ராயர் அவளை இறைவனின் காதலியாக மாற்றி, நாடக விளைவை அதிகரிக்கும் நோக்கில் பிரிவின் வேதனையை அனுபவிப்பதாகக் காட்டினார். அசல் கதையில் கோதை லட்சுமியின் அவதாரமாக குறிப்பிடப்பட்டாலும், வராக அவதாரக் கதையைச் சேர்ப்பதை நியாயப்படுத்த, ராயர் அவளை பூமிதேவியின் அவதாரமாகக் காட்டினார். அசல் கதையில் கோதை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதும், இறைவனுடன் கலந்ததாகக் கூறப்பட்டாலும், இந்தக் காவியத்தில் கவிஞர், திருமண விழாவை மிகவும் ஆடம்பரமாக நடத்தியதாகக் காட்டினார்.
அதேபோல், அசல் கதையில் இல்லாத மூன்று நிகழ்வுகளைக் கவிஞர் சேர்த்துள்ளார். கண்டிக்யா மற்றும் கேசித்வஜா கதை, விஷ்ணு புராணத்திலிருந்து எடுக்கப்பட்டு, சம்சாரத்திலிருக்கும்போது இறைவனிடம் முழுமையாக சரணடைவதே, கர்மம் மற்றும் ஞானத்தை விட உயர்ந்தது என்பதைப் போற்றுவதற்காக இந்தக் காவியத்தில் இணைக்கப்பட்டது. தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த பக்தனின் கதை மற்றும் ஒரு பிராமணனின் தீய ஆவிகள் கதை, வராக புராணத்திலிருந்து எடுக்கப்பட்டு, இறைவனின் பெருமைகளைப் பாடுவது முக்திக்கான ஒரு சிறந்த வழி என்பதையும், வேத அறிவை விட பக்தி மார்க்கம் அதிக சக்தி வாய்ந்தது என்பதையும் மகிமைப்படுத்தச் சேர்க்கப்பட்டது. யமாச்சாரியாவின் கதை, சமூக சீர்திருத்தத்தின் ஒரு நடவடிக்கையாக, பிராமண-சத்திரிய திருமண உறவை நியாயப்படுத்தவும், முக்கியமாக அரசு நிர்வாகம் அல்லது ராஜநீதி குறித்த தனது சொந்த கருத்துக்களை விளக்க ராயருக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவும் பல மாற்றங்களுடன் இந்தக் காவியத்தில் சேர்க்கப்பட்டது.
கிருஷ்ணதேவராயரின் ராஜநீதி
‘அமுக்கதமால்யதா’ என்னும் இந்த அற்புதமான நூல் ஒரு தனித்துவமான நடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாராயண ராவ் மற்றும் ஷுல்மன் குறிப்பிட்டது போல, ‘இந்த வியக்கத்தக்க புத்தகம் ஒரு தனித்துவமான நடையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அறிவியல் மற்றும் கல்வியின் பல கிளைகளில் ஒரு பெரிய அறிவானது, அன்றாட வாழ்க்கையின் காட்சிகளில் கொண்டு வரப்படுகிறது. ஒரு அசாதாரண யதார்த்தவாதமும், ஒரு பரந்த கற்பனையும் ஒன்றிணைந்து விளையாடுகின்றன… இந்த மிகுந்த நேர்த்தியான பாணியானது பின்பற்ற முடியாததாக இருந்தது; பிற்கால தெலுங்கு கவிஞர்கள் யாரும் இதைப் போல் முயற்சி செய்யவில்லை.’ மேலும், ‘அமுக்கதமால்யதா’வின் ராஜநீதி பகுதி, இந்திய அரசியல் கோட்பாட்டிற்கு ஒரு தனித்துவமான பங்களிப்பாகும். இது ‘சரஸ்வதி விலாசம்’ போன்று அல்லாமல், பழங்கால கருத்துக்களை விரிவுபடுத்தி, பதினாறாம் நூற்றாண்டின் நிர்வாகம் குறித்த அனுபவ அறிவை ஒருங்கிணைத்தது.
இவ்வாறு, ஆமுக்தமால்யதா பல நோக்கங்களுக்காகச் செயல்பட்ட ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகும். அரச கவிஞர், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளின் மீதான தனது ஆளுமையையும், ஒரு மகா காவியத்தின் தேவைகள் குறித்த தனது நெருங்கிய அறிவையும் வெளிப்படுத்தியுள்ளார். பருவங்களைப் பற்றிய அவரின் விளக்கங்கள், அவரின் கற்பனைத்திறனைக் காட்டுகின்றன. அதேநேரம், பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகள் குறித்த அவரின் குறிப்புகள், சமகால சமூக மற்றும் மத வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. வைணவத்தின் விசிஷ்டாத்வைதப் பள்ளியைப் போற்றுவதில் அவரின் ஆர்வம் வெளிப்படையாகவே உள்ளது. மேலும் அந்தப் பள்ளியின் தத்துவத்தில் அவரின் ஆளுமை மிகவும் பாராட்டத்தக்கது.
தனது பல படையெடுப்புகளிலும் விஜயநகரப் பேரரசின் நிர்வாகத்திலும், கிருஷ்ணதேவராயர், ‘அமுக்கதமால்யதா’வில் கூறிய கொள்கைகளைச் செயல்படுத்தினார்.