காலச்சுழற்சி என்பது எல்லாவற்றிற்கும் பொதுவானது என்பது நிதர்சனமான உண்மை. அதிலிருந்து அரசர்களுக்கு, ஏன் கடவுளுக்கு கூட விதிவிலக்கு கிடையாது என்பதைப் புராணங்களும் கூறுகின்றன.
300 வருடங்களுக்கு மேலாக ஆரணியை ஆண்ட ஜாகிர்தார்களின் வாழ்வு முறையை, அதுவும் குறிப்பாக 12வது தலைமுறை ஜாகிர்தாரைப்ப பற்றிய பதிவே இக்கட்டுரை. ஆரணி ஜாகிர்தார்கள் என்பவர்கள் யார் ?. எங்கிருந்து வந்தார்கள்? இவர்கள் அரசர்களா?. இவர்களுக்கும் ஆரணிக்கும் என்ன தொடர்பு? இது போன்று என்னுள் எழுந்த இக்கேள்விகளுக்கு விடை காண விழைந்ததே இத்தேடல். அவர்களின் வரலாற்றையும் சிறிது காண நாம் காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். வாருங்களேன் நீங்களும்.
17ம் நூற்றாண்டின் மத்தியில் மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் தந்தை ஷாஜி, முகலாயர்களுடன் போர் புரிந்து, பல தோல்விகளுக்ககுப் பிறகு பெங்களூரு, ஆரணி, போர்டோ நோவா, தஞ்சாவூர் பகுதிகளைக் தங்களுக்கு கீழ் கொண்டு வந்தனர். இப்போர்களின் போது தன்னுடன் இருந்த வேதாஜி பாஸ்கர் பந்த் என்பருக்கு, அவருடைய சேவையைப் பாராட்டி ஆரணி ஜாகிர் பகுதியைத் தானமாக அளிக்கப்பட்டது. இராணுவ சேவை என்று தான் குறிப்பிடப் படுகின்றது. ராணுவத்தில் எதிரிகளுடன் போரிட்டாரா இல்லை அலுவலக வேலையா என்பது போன்ற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் வேதாஜி பாஸ்கர் பந்த் என்பவர் பிராமணர் என்ற குறிப்பும் கிடைக்கின்றது.
பொயு 1690 ல், ஜுல்பிர்கான் மற்றும் பொயு 1690ல் ஹைதர் அலி ஆகியோரின் படையெடுப்பின் போது அரணி ஜாகிர் பறிக்கப்பட்டது. மீண்டும், ஷாஜியின் மறைவுக்குப்பிறகு, பொயு 1677ல், சிவாஜி கோல்கொண்டா மன்னன் குதுப்ஷாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஹைதர் அலியிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றி ஆரணி ஜாகிரை வேதாஜி பாஸ்கர் வசமே ஒப்படைக்கப் படுகின்றது.
ஆரணி ஜாகீர் ஆட்சி 4 தலைமுறை வரை, அதாவது பொயு 1750 வரை அமைதியாகவே சென்றது. பொயு 1750 களில், ஆற்காடு நவாப்களின் வாரிசு உட்பூசலில், அப்போதைய ஜாகிர் திருமலா ராவ் சாகிப் பங்கு கொள்ள நேர்ந்தது. அதனால் இழந்த ஆரணி ஜாகிர், பிரித்தானியர்களுடன் பொயு 1762ல், ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொயு 1763ல், திருமலா ராவ் சாகிப் மறைவுக்குப் பின்பு வாரிசு குழப்பம், முகம்மது அலி, ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் தலையீடுகளால் ஏற்பட்ட குழப்பம், வாரிசின்மை போன்ற காரணங்களால் ஆரணி ஜாகிர் உரிமம் பறிக்கப்பட்டு பிரித்தானியர்களால், 1762ஆம் வருட ஒப்பந்தப்படியே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
இக்குழப்பங்கள் 12வது தலைமுறை ஆரணி ஜாகிர்தார் ஸ்ரீநிவாச ராவ் சாகிப் காலம் வரை தொடர்ந்தது. பொயு 1937ல் ஸ்ரீநிவாச ராவ் சாகிபின் 36வது வயதில் கிடைத்த ஜாகிர் பதவி 11 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதுவே இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசால் மன்னர், ஜாகிர் மற்றும் ஜமீன்தார்கள் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது.
சத்ய விஜய நகரம்.
ஜாகிர்தார்கள் மாத்வா சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர்கள். சத்ய விஜய தீர்த்தருக்கு ஒரு மடமும் மூல பிருந்தாவனமும் கட்டிக்கொடுத்தார். குருவின் ஆனைப்படி மராத்தா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு பிராமணர் முன்னேற்றத்திக்காக ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. அந்நகரம் சத்ய விஜய தீர்த்தரின் பெயராலேயே சத்ய விஜய நகரம் என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.
சத்ய விஜய நகர அரண்மனை 8ஆம் தலைமுறை ஜாகிர்தார் காலத்தில் பொயு 1825 களில் கட்டப்பட்டது. தரை மற்றும் இரண்டு தளங்களைக்கொண்டது. இது பெண்கள், குழந்தைகள், விருந்தினர்களுக்காகக் கட்டப்பட்டது. இது தவிர ராணி அரண்மனையும் தர்பார் மண்டபமும் தனித்தனியே கட்டப்பட்டன. செங்கற்களால் கட்டப்பட்டு மீண்டும் சுண்ணாம்பு கலவையால் பூசப்பட்டு முட்டை, மாக்கல் இவற்றைக்கொண்டு மெருகேற்றப்பட்டது.
பூசும் போதே தூண்களில் உள்ள சிற்பங்களும் பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. ஆடு, சிங்கம், மான், போன்ற விலங்கு உருவங்களும் பறவைகளும் அந்த வேலைப்பாடுகளுள் அடங்கும். ஜமீன்தார்/ ஜாகீர்தார் முறை ஒழிப்புக்குப் பின்பு ஜாகிர்தாரின் வாரிசுகள் சென்னை, பெங்களூரு, பம்பாய் என புலம் பெயர்ந்து விட்டனர். ஒருகாலத்தில் ஜாகிர்தார் மாளிகையாக இருந்தது இன்று சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மனிதர்களின் கழிவறையாகவும் ஆனது பெரிய சோகமே.
பூசிமலைக்குப்பம் அரண்மனை… ஜாகிர்தார்களின் சுகபோக வாழ்க்கைக்கும் பஞ்சம் இல்லை. பொயு 1850-1860, 6 – 7 ஆம் தலைமுறை ஜாகிர்தார்கள் காலத்தில் பொழுதுபோக்கு, வனவிலங்குகளை வேட்டையாடுதல், விருந்து போன்ற நிகழ்ச்சிகளுக்காகவும் மலைகளுக்கு நடுவே பூசிமலைக்குப்பத்தில் ஐரோப்பிய கட்டிடக்கலையில் ஒரு மாளிகையைக் கட்டி உள்ளனர். அதற்காக மரம் வளர்த்து காடுகளாக மாற்றினர். இதுவே கண்ணாடி மாளிகை எனவும், சூட்டிங்பாக்ஸ் (Shooting box) எனவும் அழைக்கப்பட்டது. இந்தமாளிகை ஜாகிர்தார் ஐரோப்பிய காதலிக்காக கட்டினார் என்ற கருத்தும் உள்ளது. (இந்த அரண்மனை பற்றி திரு சரவணன் கடந்த இதழிலும் எழுதி இருந்தார் )
சீனிவாச ராவ் சாகிப்.
நம் கதாநாயகன் 12வதும் கடைசி ஆரணி ஜாகிர்தாருமான ஸ்ரீநிவாச ராவ் சாகிப் அவர்களின் வரலாறு கொஞ்சம் சுவாரசியமானது. தன் தந்தையின் அடியை ஒட்டியே இவருடைய பழக்க வழக்கங்களும் அமைந்தது. இளமையிலேயே ஒரு கார் பிரியராக இருந்தவர் 19வது வயதில் ஒரு காருக்கு உரிமையாளர் ஆனார்.
அவருடைய திருமணத்தின் போது வரதட்சனையாக 21 கார்கள் வாங்கப்பட்டன. அதுவே அவரை ஒரு கார் பைத்தியமாகவும், ஆக்கியது. இது அவர் வாழ்நாளில் 182 கார்களுக்குச் சொந்தக்காரராகவும் ஆக்கியது. அவர் மாளிகையை விட்டு வெளியே வரும் போது 5 முதல் 7 கார்கள் வரை மாளிகையின் முன்பு நிற்குமாம். அவரிடம் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயார் செய்த அனைத்து மாடல் கார்களும் இருந்தது. உலகப் போரின் போது அந்த நிறுவனங்கள் கார்கள் உற்பத்தி செய்யவில்லை. அவ்வாறு செய்து இருந்தால் இன்னும் ஆதிகமாக வாங்கி இருந்திருப்பார் என அவர் மகன் ராமசந்திர ராவ் கூறுகின்றார்.
கார்களை பம்பாய் சென்று வாங்கி பின்பு அங்கிருந்து அவரே ஓட்டி வருவாராம். ஓட்டுநரையோ,பராமரிப்பாளரையோ வைத்துக்கொண்டது இல்லையாம். அனைத்தையும் அவரே செய்து கொள்வாராம்.
அந்தக்காலத்திலேயே பெங்களூரில் இருந்து சென்னைக்கு 5.5 மணி நேரத்தி ஓட்டி வந்து விடுவாராம். தன்னுடைய மகனுக்கு கொடுத்த திருமண பரிசு அவருடைய காரில் நாற்பத்தைந்து நிமிடங்கள் அவர்களை பெங்களூரைச் சுற்றிக்காட்டியதுதான்.
ஜாகிர்தார் முறை ஒழிப்புக்குப் பிறகு ஜாகிர்தாரும் அவருடைய வாரிசுகளும் சாதாரண வாழ்க்கைக்கு தள்ளப்பட்டனர். படித்தவர்கள் வேலை தேடி வெளியூர் சென்று விட்டனர். ஆனால் ஸ்ரீநிவாச ராவ் எஞ்சிய வாழ்க்கையை ஓட்ட ஆசை ஆசையாக வாங்கிய கார்கள் ஒவ்வொன்றாக விற்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.
வருடத்திற்கு 6 முதல் 7 கார்களை வாங்கிய ஜாகிர்தார், பொயு 1949 முதல் 1989 வருடம் இறக்கும் வரை 40 வருடங்கள் ஒரே ஒரு கார் மட்டுமே வைத்து இருந்தார் என்பது வருந்தத்தக்கதே.