Team Heritager November 7, 2020 3

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள்

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள்

தென்னக வணிக குழுக்களில் மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், பதினெண் விஷயத்தார், நகரத்தார் போன்றோரில் கர்நாடகா ஆரம்பித்து தென்னிலங்கை வரை வணிகம் செய்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழு முக்கியமானதாகும். இவர்கள் வீர வளஞ்சியர் தர்மம் எனும் வணிக தருமத்தைக் காத்தவர்கள் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவர்களை வளஞ்சியர், கவறை வளஞ்சியர் என்றும், தென்னிலங்கை வளஞ்சியர் என்றும் பல சோழ, பாண்டிய,, சாளுக்கிய கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.1

கர்நாடக மாநிலம் ஆயஹோலேயில் உள்ள ஒரு கல்வெட்டு இவர்களைப்பற்றி குறிப்பிடுகின்றது. எனவே இவர்கள் கருநாடகத்தை தலைமையிடமாகக் கொண்டு வணிகம் செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல இடங்களிலும் வணிகக் குழு கல்வெட்டுகளில் பழைய பெயர் காணப்படுகின்றது. கர்நாடக பகுதியில் சில இடங்களில் கவரேஸ்வரர் கோவில்களுக்கு இந்த ஐநூற்றுவர் குழுவை சேர்ந்த வணிகர்கள் கொடை அளித்ததைக் கூறுகின்றது. அந்த கோவில் இறைவனின் பெயரை ஏற்று யானை குதிரை வண்டிகள் மற்றும் எருதுகள் ஆகியவற்றை கொண்டு பயணம் செய்து தென்னகம் முழுவதும் வணிகம் செய்ததைப்பற்றி ஆவணங்கள் கிடைக்கின்றன.

சோழப் பேரரசில் முக்கிய வணிக குழுவாக இருந்த ஐந்நூற்றுவ குழு பராந்தகன் காலத்திலும், இராஜேந்திரன் காலத்திலும் பின்வந்த சாளுக்கியச் சோழனான குலோத்துங்கன் காலத்திலும் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியது. இவர்கள் சோழர்களோடும், சாளுக்கியர்களோடும் நெருங்கிய வணிகக் குழுவினராக இருந்துள்ளனர். கிழக்காசிய நாடுகளில் சோழர் தாக்கத்தில் இவர்களின் பங்கும் நிறைய உள்ளது. இவருடைய கல்வெட்டு கிழக்காசிய நாடுகளில் சிலவற்றில் கிடைத்துள்ளன.இவர்கள் இருக்கும் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவின் கல்வெட்டுக்கள் சீனாவில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

தானியப் பொருட்களே இவர்களின் முக்கிய வணிகப்பொருட்கள். சிற்றூர் மற்றும் பேரூர்களில் இவர்கள் வணிகம் செய்துள்ளனர். இவர்களில் சிலர் புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள் எனக் கூறப்பட்டலும், தமிழகத்தில் பலர் சைவத்தையும், வைணவத்தையும் ஆதரித்தனர். இதற்கு சான்றாக அருப்புக்கோட்டை சுந்தரேஸ்வரர் கோயிலில் வளஞ்சியன் “சேகன் சேவகத்தேவன்” என்பவன் திருப்பணி செய்ததைக் கொள்ளலாம். திருப்புரம்பியம் என்ற ஊரில் இவர்கள் அளித்த தானம் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேள்விக்குடி கோவிலில் திருப்பணியை வளஞ்சியர்களே செய்தனர்.” திருக்கண்ணபுரத்து கோயில் கல்வெட்டு மூலம் இங்குள்ள கருநாகர வீரமடத்தில் வைணவர்களுக்கு உணவளிக்க வளஞ்சியர்கள் தானம் வழங்கியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் சைவத்துக்கும் வைணவத்துக்கும் பல சேவைகளைப் செய்துள்ளனர். இவர்கள் திருவனந்தபுரம், திருநெல்வேலி, காஞ்சீபுரம், கவேரிபுரம்(கோவை) போன்ற பகுதிகளில் சிறப்புடன் வணிக மையங்கள் கொண்டு செயல்பட்டனர்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் இதன் செயல்பாடுகள் வளர்ந்தன. இவர்களின் வணிகம் தென்னிந்தியா முழுமைக்கும் பரவிக் காணப்பட்டது. மேலை சாளுக்கிய நாட்டில் உள்ள “ஐஹோலே (Aihole) என்ற இடமே இவர்களின் தலைமையிடமாகத் திகழ்ந்தது. எனவேதான் இவர்கள் “அய்ய பொழில்” என்று அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் இவர்கள் “அய்ய புழன்” என்று பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அழன், புழன், என்னும் பெயர்கள் கலம் என்னும் அளவுப் பெயர் என தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நாச்சினாருக்கு இனியர் குறிப்பிடுகிறார்.

“அய்யவோலிபுர பரமேஸ்வரி மக்கள்” என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்ட இவர்கள் நெல், கடுகு, மிளகு, வெற்றிலை, பாக்கு, இஞ்சி, மஞ்சள், பெருங்காயம், குதிரை போன்றவை வணிகம் செய்தனர். பாண்டிய நாட்டில் இவர்கள் வணிகம் செழித்துக் காணப்பட்டது’. வணிகத்தின் மூலம் இவர்கள் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்ந்தனர்.

வணிக பயணங்களுக்கு பாதுகாப்பாக இருக்க தனியாக படை வைத்திருக்கும் வணிகக்குழு என்பதால் சோழர்களுக்கு, இவர்கள் படை உதவி செய்ததாக கூறப்படுகின்றது. கப்பற்படையும் படை இவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. “மும்முரி தண்டம்” என்ற படைப்பிரிவினை இவர்கள் கொண்டிருந்தனர்.

குலோத்துங்கன் காலத்தில் கருணாகர தென்னிலங்கை வளஞ்சியர் படை என்ற படையை இலங்கைக்கு அனுப்பி சீனர்களின் ஆதிக்கத்தை குறைத்தாகக் கூறப்படுகின்றது. இவர்களுடைய படைகள் பின்வருமாறு:

முனை வீரக்கொடியார்
பதினெண் பூமி வீரர்கள்
வீரக்கொடி தந்திரம்
மும்மொழி தண்டம்
சேனா முகம்

சோழர்களைப் போன்றே இவர்களும் காளி, துர்க்கை, அய்யப்பொழில் நங்கை போன்ற தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு பல கொடைகளை அளித்துள்ளனர். பாண்டியர் காலத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்த இந்த குழுவினர் நிலையாக வணிகம் செய்ததைப் பற்றி ஆவணங்கள் கிடைக்கின்றன. இதன்மூலம் இவர்கள் சாளுக்கிய நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே தொடர்ந்து வணிக நடவடிக்கைகளில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டு வந்ததை நாம் வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது.

நினைவுத் தோட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் மேல் நங்கவரம் கிராமத்தில் உள்ள கன்னிமார் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகக் குழுவின் கல்வெட்டு தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களில் உள்ளது.

தூண்களில் அமைந்துள்ள இக்கல்வெட்டில் ஒருபுறம் நான்கு கைகளைக் கூடிய துர்க்கையின் உருவமும், பின்புறம் திருமகளின் தொன்மை உருவம் என கருதப்படும் ஸ்ரீஸ்வத்தமும் காணப்படுகின்றது. திருமகளின் இருபுறமும் குத்துவிளக்குகள் , சுருள் பட்டா அறிவாளி சிற்றுளி ஆகிய பலன்களும் நீண்ட வாலும் கேடயமும் புடைப்புச் சிற்பமாக இந்த கல்வெட்டில் காணப்படுகின்றது.

தமிழக அரசின் தொல்லியல் கையேட்டில் பின்வரும் கல்வெட்டு பற்றி விரிவாகக் கூறப்படுகின்றது.

ஸ்வஸ்திஸ்ரீ பவத்ரோணச் மன்
தோட்டம் வள
ஞ்சியர் ஐந்நூ
ற்றுவர்
பேர் ஐந்நூ
ற்றுவன் இவர்
கள் மக்கள்
வாள்காளரும்
ம் பன்மை
யாரு ரட்ஷை

கிபி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டு வளஞ்சியர் ஐந்நூற்றுவர் குழுவை சேர்ந்த பவத்ரோணச் மன் என்பவன் நினைவாக ஐநூற்றுவன் எனும் பெயரில் ஒரு தோட்டம் அமைத்தைப்பற்றி கூறுகின்றது. மேலும் இந்தத் தோட்டத்தை வாள் கொண்ட படையினரும், பன்மையர் என்ற காவலர்களும் காக்க வேண்டுமென செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மறைந்த நபர்களுக்கு அவர்களின் நினைவாக கோவில் கட்டுதல், நடுகல் எழுப்புதல், பல தானங்களை செய்தல் மட்டுமல்லாமல் இறந்தவர் பெயரில் தோட்டங்களை அமைத்தல் குறித்த செய்திகள் நமக்கு கல்வெட்டு வாயிலாக கிடைக்கின்றன.

துணை நூல்கள்:
தமிழக தொல்லியல் கையேடு – கி. ஸ்ரீதரன்
தமிழக ஐரோப்பியர் வணிகக் குழுக்கள் மு.கனல்விழி அ

Category: 

3 People reacted on this

  1. வணக்கம் ஐயா,

    கவறை மற்றும் வளஞ்சியர் வெவ்வேறு குழுவினர்.

    எக் கல்வெட்டில் அய்யா கவறை மற்றும் வளஞ்சியர் ஒரே வணிக குழு என்கிறார்கள்? கவறைகள் பண்டக சாலை பாதுகாலவர் களாக இருந்திருக்கிறார்கள் என்று கல்வெட்டு சான்றுகள் உண்டு. கவறை குடி வரலாற்றை நன்கு ஆராய்ந்து தங்களது கருத்துக்களை பதிவிடவும் …

  2. தற்கால பெயர் திரிபுற்ற
    கவரா ஆக்கப்பட்ட கவறை என்ற எம் சமூகத்திற்கும்

    நீங்கள் சொல்லும் வளஞ்சியர் எனும் பலிஜாக்கும்

    கவறை மற்றும் வளஞ்சியர் மரபு வழி ஒரே குடி என உறுதியான சான்றுகள் எதுவுமில்லை.

    எதனின் அடிப்படையில்
    கவறை வளஞ்சியர்
    என்கிறீர்கள் ?

    கவறை குடி சோழ நாட்டு பூர்விக மக்கள் உள்நாட்டு
    வணிக பாதுகாப்பு படையில், நாட்டுசெட்டி, மயிலாட்டி (பெருவணிகன்) பட்டத்தோடு இருந்துள்ளனர் உண்மையே மறுக்கவில்லை….

    ஆனால் நீங்க சொல்லும் வளஞ்சியர் எனும் பலிஜாவுக்கும் எம் கவறைக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை !

Leave a Comment