ஐகொளெ

ஐகொளெ அல்லது அய்கொளெ (Aihole) கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இவ்வூர் ஒரு  வரலாற்றுச் சிறப்புபெற்ற சிற்றூர்.

சென்னையிலிருந்து அனந்தபூர், பல்லாரி வழியாகச் சென்றபோது கிட்டதட்ட 825 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அய்கொளெ.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை கட்டப்பட்ட கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட கற்கோயில்களைக் கொண்டு சாளுக்கிய கட்டிடபாணிக்குச் சான்றாக விளங்குகிறது.

சாளுக்கியர்களின் முதல் தலைநகர் என்னும் பெருமையைப் பெற்றது இந்த நகரம்.இதற்கு ஆரியபுரம் என்ற மற்றொரு பெயரும் இருந்திருக்கிறது.

இங்கே பல சோதனை கற்கோயில்களை உருவாக்கிச் சாளுக்கியர்கள் அவர்களின் சிற்ப கலையின் ஆற்றலை மேம்படுத்தி இருக்கிறார்கள்.

திரும்பிய திசையெங்கிலும் பாறைக் கோயில்களும் குடவரைக் கோயிலுமாக ஊர் முழுவதும் காணப்படுகின்றது. ஆதலால் தான் இந்த ஊர் இந்தியப் பாறை கட்டிடக்கலையின் தொட்டில் என அழைக்கின்றனர்.

ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை கிட்டத்தட்ட ஏழு நூற்றாண்டுகளாகக் கட்டிட கலையின் கோயில்களைக் காண முடிகிறது.

இங்குப் பல கோயில்கள் இருப்பினும் நாங்கள் சென்றது பின்வரும் கோயில்களுக்கே.

1) துர்க்கை கோயில்

2 ) லட்கான் கோயில்

3) இராவணபாடி கோயில்

4) ஜோதிர்லிங்க கோயில்

5) மெகுட்டிகோயில்

கட்டிடக்கலையில் சாளுக்கியர்கள் உச்சம் அடைந்ததற்கான அனைத்து அமைப்பையும் நீங்கள் காணலாம்.

சாளுக்கிய பாணி கட்டிட கலையில் வட இந்தியபாணி (Nagara architecture) வளைவுக் கோபுரங்கள், தாங்குபலகைகளுடன் அமைந்த தென்னிந்தியபாணி பூசப்பட்ட சுவர்கள் (Dravida architecture), தக்காணப் பீடபூமியின் மேல்மாட அமருமிடங்கள், சரிவு இறவானங்கள், சாய்வு கூரைகள் மற்றும் வேலைப்பாடமைந்த தூண்களும் கூரைகளும் சாளுக்கிய பாணி கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டன.

காரையில்லாத இணைப்புகள், அகலத்தையும் உயரத்தையும் விட நீளத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தட்டையான கூரைகள், சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடைய உட்கூரைகள், கூட்டமாக இன்றி தனித்தனியாக வடிக்கப்பட்ட, தனிப்பட்ட முக்கியத்துவமளிக்கப்பட்ட சில குறிப்பிட வடிவங்கள் ஆகியவை அய்ககொளே, பாதாமி மற்றும் பட்டடக்கல் சாளுக்கியக் கட்டிடங்களின் தனித்துவ அமைப்புகளாக உள்ளன.

சாளுக்கியகாலச் சிற்பங்களில் காணப்படும் தரமும், அழகுணர்ச்சியும் பிற்கால இந்தியக் கலைப்பாணியில் காணப்படவில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்குச் சிற்பிகளின் பங்களிப்பு இருந்திருக்கிறது.

1) துர்க்கை கோயில் :

துர்க்கை கோயில் அல்லது கோட்டை கோயில் என்றறியப்படும் இக்கோயில், அய்கொளெயில் உள்ள கோயில்களில் நன்கறியப்பட்ட கோயிலாகும். புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன.

இக்கோயிலின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம், அய்கொளெ சிற்ப அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனின் பெயர் இடம்பெற்றுள்ளதால் இதன் காலம் 733-746 க்கு இடைப்பட்டதாக இருக்கக் கூடும் என வரையறுக்கின்றனர் ஆய்வாளர்கள்.

2) லட்கான் கோயில் :

இந்தக் கோயில் அய்கொளெயில் உள்ள கோயில்கள் அனைத்திலும் காலத்தால் முந்தையது.இது துர்க்கை கோயிலின் அருகிலே உள்ளது. இதற்கு முன் இந்தக் கோயில் விஷ்ணு கோயிலாக இருந்திருக்கக் கூடும் எனவும் ஆனால் தற்போது சிவன் கோயிலாகக் காட்சியளிக்கிறது எனவும் சொல்கின்றனர். ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். லாட் கான் கோயில் ஒரு கருவறையையும் அதன் முன்பமைந்த இரு மண்டபங்களையும் கொண்டுள்ளது. கருவறைக்குள் லிங்க திருவுருவம் காணப்படுகிறது. கருவறையின் முன்புள்ள முகப்பு மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடமைந்த 12 தூண்கள் உள்ளன. முகப்பு மண்டபத்துக்கு முன்புள்ள அவை மண்டபத்தின் தூண்கள், ஒரே மையம் கொண்ட இரு செவ்வகச் சுற்றமைப்பில் அமைந்துள்ளன. கூரைகளில் பூவடிவ வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஊராட்சிக் கூட வடிவமைப்பால், துவக்ககால கட்டுமானச் சோதனை முயற்சியாக இக்கோயில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

சாளரங்கள் சட்டப்பின்னல் வடிவில் வட இந்தியபாணியில் உள்ளன. இக்கோயில் சாளுக்கிய அரசர்களால் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் வசித்த லடா கான் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. துர்க்கா கோயிலுக்குத் தென்புறம் அமைந்துள்ளது. கருவறையும் அதன் முன்னமைந்துள்ள முகமண்டபம் மற்றும் அவை மண்டபம் இரண்டும் இக்கோயிலின் பின்புறச் சுவற்றில் அமைந்துள்ளன.

மேற்கு, தெற்கு, கிழக்குச் சுவர்களில் அழகான வேலைப்பாடைமைந்த கற்சட்டப் பின்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவலிங்கம் அமைந்துள்ள கருவறையின் விட்டக்கல்லில் கருடனின் உருவமும், தட்டையான மேற்புறமுடைய நடுச் சதுரக்கூடத்தில் நந்தியும் அமைந்துள்ளன. நந்திக்கு நேர் மேலாகப் பிற்கால சேர்க்கையாகக் கருதப்படும் (கிபி 450) ஒரு நாகர வகை கோபுர வடிவமைப்பு சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்தக் கோயில் கட்டமைப்பு முதலில் கோபுரமின்றி பார்ப்பதற்கு குடவரைக் கோயில் போன்று கட்டப்பட்டுள்ளது. பஞ்சயாத்னா வடிவில் உள்ளதால் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. சாளுக்கியர்களின் அரச முத்திரை கோயிலின் முகப்பில் உள்ள தூண்களில் காண முடிகிறது

3) இராவணபாடி கோயில் :

இந்தக் குடைவரை கோயிலின் அருகில் தான் முதல் முறையாகப் பரிசோதனை செய்த குடவரை கோயிலும் உள்ளது.

இராவண பாடி குகை, அய்கொளெயில் அமைந்துள்ள மிகப்பழமையான குடைவரைக் கோயிலாகும். கிபி 550க்கு முன் கட்டப்பட்டதாக அறியமுடிகிறது. இக்கோயில் ஹூச்சமல்லி கோயிலுக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் ஒரு செவ்வக வடிவக் கருவறையும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் இலிங்கம் காணப்படுகிறது. இது பாதாமி குடைவரைக் கோயில்களைவிடப் பெரிய கருவறை கொண்ட சைவக் குடைவரைக் கோயில். மூன்று வாயில்களும் சிற்ப வேலைப்பாடுடைய தூண்களும் கொண்ட நடைப்பகுதி ஒன்று கருவறையின் முன் உள்ளது.

குடவரையின் இடது புறத்தில் அர்த்தநாரியும் மறுபுறம் மகிஷாசுராவும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காண முடிகிறது.

கோயில் சுவர்களில் நடனமாடும் சிவன் உள்ளிட்ட பல பெரியளவு உருவங்கள் காணப்படுகின்றன.மண்டபத்தினுள் நடராஜர் ரூபத்தில் சிவனும், அவரின் அருகில் விநாயகர், பார்வதி மற்றும் சப்தமாதர்களை காண முடிகிறது.

அய்கொளெயில் உள்ள மூன்று குடைவரைக் கோயில்களில் சிவனுக்குரிய இக்கோயிலே மிகவும் அறியப்பட்டதாக உள்ளது.

4) ஜோதிர்லிங்க கோயில் :

இராவணபாடி கோயிலுக்குத் தென்மேற்கில் சிறிது தொலைவில் ஜோதிர்லிங்க கோயில்கள் அமைந்துள்ளன. இங்குத் தட்டையான மேற்கூரையுடன் முன்புறம் நந்தி மண்டபங்களுடன் இரு கோயில்கள் உள்ளன.

மற்ற கோயில்களில் கருவறையும் முன்மண்டபங்களும் அமைந்துள்ளன. இரு கோயில்கள் கதம்பநாகர வகைக் கோபுரங்களைக் கொண்டுள்ளன. கல்யாணிச் சாளுக்கியர் காலக் கல்வெட்டுகள் இரு கோயில்களில் காணப்படுகின்றன. ஏனைய கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன.

5) மெகுட்டி ஜைனக் கோயில் :

மேகுட்டி ஜைனக் கோயில் (Meguti Jain temple) ஒரு சிறு குன்றின்மீது அமைந்துள்ளது. இக்கோயில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரருக்கான கோயிலாகும்.

கோயில் உயர மேடையொன்றின்மீது அமைந்துள்ளது. முகமண்டபத்துக்குச் செல்லப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைந்துள்ள முகமண்டபம் பெரியதாக உள்ளது. முதன்மைக் கருவறைக்கு மேல் கூரைமீதமைந்துள்ள மற்றொரு கருவறைக்குச் செல்வதற்கும் படிக்கட்டுகள் உள்ளன. இரண்டாம் புலிகேசியின் அவையிலிருந்த புலவர் இரவிகீர்த்தியால் இக்கோயில் கட்டப்பட்டது எனக் கோயில் வெளிச்சுவற்றில் காணப்படும் கிபி 634-635 ஆம் ஆண்டு கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.

காளிதாசர் மற்றும் பாரவி குறித்த குறிப்பும் இக்கல்வெட்டில் உள்ளது.இந்தக் கல்வெட்டில் ஹர்சவர்த்தனனை இரண்டாம் புலிகேசி வென்றதும் பல்லவர்களுடனான மோதலையும் காண முடிகிறது.இக்கோயிலுக்குத் தென்கிழக்கில் சிறிய ஜைனக் குகைக் கோயில் ஒன்றுள்ளது. அங்கு ஐந்தடி உயர பாகுபலி உருவம் கருவறையிலும், பிற தீர்த்தங்கரர்களின் உருவங்கள் சுவற்றிலும் காணப்படுகின்றன.

6) ஜைனக் குகைக் கோயில் :

ஜைனக் குகைக் கோயில் (Jain cave temple) பட்டடக்கல் அல்லது பாதாமியிலிருந்து அய்கொளேக்குள் நுழையும் பகுதியில் மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்குகைக்கு அருகில் உள்ள பாறையில் பழைய கன்னட எழுத்துருக்களில் அமைந்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

இரண்டடுக்கு புத்தக் குகைக் கோயில் புத்தக் குகை:

மேகுட்டிக் கோயில் அமைந்துள்ள குன்றின் மீது அக்கோயிலுக்குச் செல்லும் வழியில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டடுக்கு புத்தக் குகைக் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் ஒரு பகுதிக் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கிறது.

– சரவணமணியன்

Leave a Reply