ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர் மலையில் அமைந்துள்ள விளாப்பாக்கம் குடைவரைக் கோயிலைப் பற்றிக் காண்போம்.
ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு சிறிய கிராமம் விளாப்பாக்கம், இந்த மலைப்பகுதி 8 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு செழுமையான சமண மையமாக இருந்துள்ளது. இது பாறைக் குடைவரை கோயில், சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுடன் கூடிய இயற்கை குகைகளும் மலைமேல் அமைந்துள்ளன.
பல்லவ பாணியில் குடையப்பட்ட மிகப்பெரிய குகைக்கோயில். இந்தக் கிழக்கு முகம் குகை ஒரு பெரிய மலை அடிவாரத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இந்தக் குகைக் கோபுரங்கள் வரிசையாகப் பன்னிரண்டு தூண்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூண்கள் மேல்மட்டத்தில் ஒரே சதுரமாக இருக்கும். தூண்கள் மற்றும் விமானங்கள் மேலே வளைந்த கோள்களும் உள்ளன. பக்கச் சுவர்கள் சதுர வடிவ செதுக்கப்பட்ட தொகுதிகள் கொண்டவை.
இங்கே உள்ள கல்வெட்டுப்படி, இந்த மலைத் “திருப்பன்மலை” எனக் குறிப்பிடப்படுகிறது. யக்ஷி, நாகநதி மற்றும் ஜைன தீர்த்தங்கர் ஆதிநாதர் பற்றிய குறிப்புகள் உள்ளன. யக்ஷியின் உருவம் ஒரு பெரிய பாறையில் நீர் உள்ளடக்கிய குளம் அருகில் உள்ளது. குகையில் சமண படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன, யக்ஷி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருப்பார், யக்ஷியைச் சுற்றி நான்கு பேர் உள்ளனர்.
யோகநிலையில் அமர்ந்திருக்கும் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை பாறைமேல் காணப்படுகிறார். ஒரே பாறையில் தெற்கு முகத்தில் இரண்டு செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள், சமணர் உருவம் மற்றும் ஒரு விலங்கைப் பார்க்கின்றோம். இந்த மலைமீது 17ம் நூற்றாண்டில் தங்கிய முஸ்லீம் துறவியின் குடும்ப கல்லறைகளும் அமைந்துள்ளன.
இந்தப் பெரியப் பாறையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன, பல்லவ மன்னன் நந்திவர்மன் மற்றும் சோழ அரசர் இராஜராஜர் இங்கே வசித்த சமண துறவிகளுக்கு அளித்த தானங்கள் பற்றிய அரிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மலையின் உச்சியில் உள்ள சமண படுக்கையுள்ள, குகை வெளியே இரு கல்வெட்டுகள் காணக்கிடைக்கும் ஒன்று 3 வரிகளில் உள்ள நந்திவர்மன் கல்வெட்டு, இரண்டாவது, 10 வரிசையில் உள்ள இராஜ ராஐருடைய கல்வெட்டு. இதன் காலம் இரண்டாம் நந்திவர்மபல்லவரின் ஐம்பதாவது ஆட்சி ஆண்டு.
“நந்திப்பொத்தரசர்க்கு அய்ம்பதாவது நாகணந்தி குரவர் இருக்க பொன்னிஇயக்கி படிமம் கொட்டுவித்தான்
புகழலைமங்கலத்து மருத்துவர் மகன் நாரணன்.”
கல்வெட்டின் பொருள்:
புகழலைமங்கலத்தை சேர்ந்த மருத்துவர்* மகனான நாரணன் என்பவர் இங்கே சிலையாக அமர்ந்த கோலத்தில் இருக்கும் இயக்கியையும் நின்ற கோலத்தில் இருக்கும் நாகநந்தி* சிலையையும் வடித்துள்ளார்.
*மருத்துவர் என்பதைத் தனிநபரின் பெயராகக் கொள்ள வேண்டும். *நாகநந்தி என்பார் இங்கே வாழ்ந்த சமண ஆசானாக இருக்கக்கூடும்.
நாகநந்தி குரவர், என்று கல்வெட்டில் இருக்கிறது.
இரண்டாம் கல்வெட்டு
காலம்: ராஜராஜரின் எட்டாவது ஆட்சி ஆண்டு-993.
1. கொவிராஜகெஸரிவர்மர்க்கு யாண்டு 8 ஆவது படுவூர்கொட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான்மலைப் பொ
2. கமாகிய கூறகன்பாடி இறையிலி பள்ளிச்சந்தத்தை கீழ்பாகலான்ட இலாடராஜர்கள் கற்பூரவிலை கொண்டு இத்தர்மம் கெ
3. ட்டுப் பொகின்றதென்று உடையார் இலாடராஜர் புகழ்விப்பவர் கண்டர் மகனார் வீரசொழர் திருப்பான்மலை தெவரைத் திருவ
4. டித்தொழுதெழுந்தருளி இருக்க இவர் தெவியார் இலாடமஹாதெவியார் கற்பூரவிலையும் மன்னியவாவதண்டவிறையுமொ
5. ழிந்தருளி வெண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய உடையார் வீரசொழர் கற்பூரவிலையும் மன்னியவாவதண்ட விறை
6. யுமொழிஞ்சொமென்று செய்ய அரியூர் கிழவன் ஆகிய வீரசொழ இலாடபெரரையனுடையார் கன்மியேய
7. (ந்த?)தியாகவிந்த கற்பூரவிலையும் மன்னியவாவதண்டவிறையு மொழிஞ்ச சாஸசனம் செய்தபடி இதுவ
8. ல்லது கற்பூரவிலையும் மன்னியவாவதண்ட விறையும் இப்பள்ளிச்சந்தத்தை கொள்வான் கங்கையி
9. டை குமரியிடை செய்தார் செய்த பாவங்கொள்வான் இது வல்லடிப் பள்ளிச்சந்தத்தை கெடுப்பார் வல்லவரை
10. ……. ந்ருவ இத்தர்மத்தை ரக்ஷிப்பான் என்றலை மெலன அறமறவர்கறமல்ல துணையில்லை.

படுவூர்கோட்டத்தில் பெருந்திமிரி நாட்டில் உள்ளது திருப்பான்மலை. திருபான்மலைக்கு போகமாக உள்ள கூறகன்பாடி* என்ற ஊர் வரி நீக்கிய பள்ளிச்சந்தமாக இருந்துள்ளது. முன்னர் ஆட்சி செய்த இலாடராஜாக்கள் வரி நீக்கிய விலையில் இருந்து கற்பூரவிலையை* மட்டும் எடுத்துவிட்டனர். உடையார் புகழ்விப்பவர் கண்டனின் மகன் வீரசோழர்* என்பவர்.
வீரசோழர் திருப்பான்மலை தேவர் திருவடியைத் தொழுத வேளையில் முன்னர் இக்கற்பூரவிலையை கொண்டதால் இப்பள்ளிச்சந்தத்துக்குரிய தர்மம் கெட்டுப் போகின்றதென்று சுட்டிக்காட்டிக் கூறியவர் வீரசோழரின் மனைவியான இலாடமஹாதேவியார் என்பவர்,
முன்னர் கொண்ட கற்பூரவிலையையும் அதனுடன் அன்னியவாவதண்ட இறையையும் மீண்டும் இத்தர்மத்துக்கே தொடர வேண்டுமென இந்த அரசியார் வீரசோழரிடம் வேண்டிக்கொள்கிறார்.
வீரசோழரும் இதற்கு உடன்பட்டு இதை அரியூர் என்ற ஊருக்குத் தலைவனாக உள்ள கிழவன் வீரசோழ இலாடபேரையன்* என்பாருக்கு ஆணையாகக் கூற அவர் திருப்பான்மலை கன்மியுடன்* இணைந்து இத்தர்மத்திற்கு முன்னர் கொண்ட கற்பூரவிலையும் அதனுடன் அன்னியவாவதண்ட இறையும் தொடரும் எனச் சாசனமாக கல்லிலே வெட்டுகிறான்.
இந்தத் தர்மத்துக்கு தீங்கிழைத்தால், அது கங்கைக்கும் குமரிக்கும் இடையே யாரேனும் பாவம் செய்தால் அந்தப் பாவங்களை கொள்பவராக போகக்கடவார்கள். இந்தத் தர்மத்தை காப்பவர்கள் யாரோ அவரின் பாதங்களில் உள்ள தூசியை என் தலைமேல் தாங்குபவனாக ஆவேன்.
இந்தத் தர்மத்தை யாரும் மறக்க வேண்டாம். இந்தத் தர்மத்தை தவிர வேறொரு துணை இதற்கு இல்லை.
விளாப்பாக்கம் பஞ்சபாண்டவர் மலையில் அழகையும், அமைதியும், இயற்கையும், பழமையான சரித்திர தடங்களையும் கூட்ட நெரிசல் இல்லாமல் குடும்பத்தோடு கண்டு மகிழலாம்.
தெளிவற்ற கல்வெட்டுகளை, பெரும் சிரத்தை எடுத்து அனைவரும் அறிய, படித்துப் பொருள் உரைத்த நண்பர் தஞ்சை திரு.ராகவேந்திரா அவர்களுக்கு நன்றி!
– இரா.சு.சரவணன் ராஜா, வேலூர்.