
பல்லவரையும் சம்புவராயரையும் தோற்கடித்த தெலுங்குச் சோழர்
சம்புவராயர்கள் தங்களை என்றும் சோழர் வழிவந்தர்வர்கள் எனக் கூறிக் கொண்டதில்லை என்கிறார், திரு. A. கிருஷ்ணஸ்வாமி (Proceedings of the Indian History Congress, 1957)
மேலை சாளுக்கியர்கள் (957–1184) இருந்தவரை தெலுங்கு சோழர்களும் தமிழ் சோழர்களும் முட்டி மோதிக்கொண்டனர். பிற்கால சோழர்கள் காலத்தில் தெலுங்குச் சோழர்களும் தமிழ்ச் சோழர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டனர்.
மூன்றாம் இராசராச சோழன் (1216 – 1256) ஆட்சிக் காலத்தில், அழகியசோழ சாம்புவராயன், எதிரிசோழ சாம்புவராயன், வீரப்பெருமாள் குலோத்துங்கசோழ சாம்புவராயன் போன்ற பல சாம்புவராய மன்னர்களைப் பற்றி நாம் அறிகிறோம். இந்த சாம்புவராய தலைவர்கள் சிலர் காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் திருக்கோவிலூரைச் சேர்ந்த இராசராச செதிராயன் ஆகியோருடன் இணைந்து மூன்றாம் இராசராசனுக்கு எதிராக ஒரு அரசியல் ஒப்பந்தம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.
மூன்றாம் இராசராசனுக்குப் பிறகு அவரது மகன் மூன்றாம் இராசேந்திர சோழன் ஆட்சிக்கு வந்தார். இவரே கடைசிச் சோழ மன்னர். இவர் வடக்கு இலங்கையை அல்லது மாவிளங்கையை வென்றதாகக் கூறப்படுகிறது. இந்த மாவிளங்கையானது தொண்டைமண்டலத்தில் உள்ள சாம்புவராயர்களின் பழமையான தாயகமான ஓய்மானாடுடன் அடையாளம் காணப்படலாம். இது மாவிளங்கை என்றும் அழைக்கப்பட்டது.
சாம்புவராயர்களுக்கு எதிரான இந்த போர், மூன்றாம் இராசேந்திர சோழன் அவர்களை மீண்டும் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வர மேற்கொண்ட ஒரு முயற்சியாகும். தெலுங்குச் சோழ மன்னன் கண்ட கோபாலனின் உதவியுடன், மூன்றாம் இராசேந்திர சோழன் கி.பி. 1252-ஆம் ஆண்டு வாக்கில் சாம்புவராயனையும் கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, தனது மேலாதிக்கத்தை ஏற்கும்படி செய்தார்.