பழங்குடிகளைத் தேடி

எருமை எமனோட வாகனமாம்.. அதோட தலைய வெட்டி இங்க வச்சுருக்காங்க. அது அந்தப் பக்கமா பார்க்குற மாதிரி இருக்கு சரி நம்ம இந்தப் பக்கமா பார்வைய செலுத்துவோம் னு எடுத்த புகைப்படம் தான் இவை. சரி ஏன் எருமை தலைய வெட்டி இப்படி வைக்கிறாங்கனு தேடும்போது சுவாரஸ்யமான சில விடயங்களைப் பார்க்க நேர்ந்தது. அதனுடைய பிம்பம் தான் இந்தப் பதிவு.

மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓர் பகுதியான நீலகிரி மாவட்டத்தின் சோலை வனங்கள் மற்றும் புல்தரைகள் அடர்ந்து வளர்ந்துள்ள பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் 6 பண்டைய பழங்குடிகளில் ஒரு வகையினராகக் கருதப்படுகிறாங்க. இந்தத் தோடர்கள் எனும் இன மக்கள். இயற்கையோடு ஒன்றி வாழும் இவர்களின் வாழ்க்கையில், எருமைகள் ஓர் அங்கமாகக் கருதப்படுகிறது. தோடர்கள் அல்லது தொதுவர்னு இவங்கள சொல்றாங்க.

இங்க சுமார் 1600 பேர் மட்டுமே உள்ளனர்.இவர்கள் பேசக்கூடிய மொழி ‘தொதவம்’. இந்தத் தொதவம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும்போது மக்கள் என்பது புலனாகிறது. தோடா இன மக்கள் வனங்களினூடே தங்களின் வாழ்வியலை அமைத்துக் கொண்டதன் விளைவாகவும் விவசாய தொழிலில் ஆர்வமற்று இருந்ததாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல உயிர்ச் சூழலையே நம்பி இருந்துள்ளார்கள்.

அவர்களின் வாழ்வாதாரமாக இருந்தவை இந்த எருமைகளே என்பதால் இவங்க வளர்க்குற எருமைகளுக்கும் இவங்க இனப்பெயரே சேர்ந்து வருது. இங்க இருக்க எருமைகள் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதும், தோடர்களுக்காகக் கடவுளால் படைக்கப்பட்டவை என்பதும் இவர்களின் ஐதீகம்(நோட் தி பாய்ண்ட் – இவர்களின் நம்பிக்கை). தோடா எருமைகள் பாரம்பரியமிக்கவை.

இவை பிற எருமை இனங்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிந்து தனி இனமாக உருவானதாக மரபுக்கூறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தோடர் இன மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து சடங்குகளிலும் இந்த வகை எருமைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. தோடர் ரக எருமைகளின் கொம்புகள் 1.5 மீட்டர்வரை வளருமாம். இவற்றின் உடலமைப்பு மிகவும் முரட்டுத்தன்மை போன்ற தோற்றம் உடையது.

எனவே, இவற்றுக்காக வட்டமான கற்கள் அடுக்கி எருமைப்பட்டி (தொளா) செய்து அதில் அடைத்து வைப்பார்கள். ஓர் எருமை 5 லிட்டருக்கும் குறைவாகவே பால் தரும். ஆனால், பால் மிகவும் அடர்த்தியாகவும், திடமாகவும் இருக்கும். தோடரின மக்கள் சுத்த சைவர்கள். இவர்களின் பாரம்பரிய உணவான பால்சாதம், நெய் சாதம், ஓட்வியதோர் எனப்படும் உருண்டை சாதம் பாலை சார்ந்தே உள்ளது. ஒவ்வொரு தோடரின மக்களின் வீட்டிலும் எருமை குடும்ப உறுப்பினர்போலப் பாவிக்கப்படுகிறது.

எருமையை, எமனின் வாகனமாகக் கருதப்படும் நிலையில், தோடர்கள் அவற்றை இறைவனுக்கு சமமாகக் கருதுகின்றனர். அனைத்து கோயில்களிலும் எருமையின் கொம்பு அல்லது எருமையின் தலை வடிவம் பொறிக்கப்பட்டிருக்குமாம். சரி நம்ம போய்ப் பார்க்கலாம்னு பார்த்தா அவங்க மொழி நமக்குத் தெரியாது மற்றும் அவங்க வெளியாட்கள அனுமதிக்க மாட்டாங்கனு சொல்கறாங்க. கோயில் திறந்திருக்கும் நேரங்களில் பூசாரி மட்டுமே, கோயில் எருமைகளிலிருந்து பாலைக் கறந்து, பூஜை செய்வார்.

கோயில் திறக்கப்படாத நேரங்களில் இந்த எருமைகளிடமிருந்து பால் கறக்கப்பட மாட்டாது. இந்தியாவில் உள்ள 12 எருமை இனங்களில் தோடர் எருமை தனித்தன்மை வாய்ந்ததா சொல்றாங்க. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே இந்த இனம் உள்ளதாம். 17-வது நூற்றாண்டுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கில் இருந்த எருமைகள் கடைசியா 1994-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 3531 எருமைகள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து தற்போது 1500-க்கும் குறைவான எருமைகளே உள்ளன. வேட்டையாடுதலுக்கு இரையாகும் எருமைகள் – மனித வேட்டையா அல்லது விலங்குகளின் வேட்டையானு தெரியல. உலகளவிலும் இந்தியாவின் அநேக மாநிலங்களிலும் ஒரு சமூகம் முன்னின்று ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தானில் பஸ்தூன் இன மக்கள், கென்யாவில் சம்புறு இன மக்கள், ராஜஸ்தானில் ரைக்கா இன மக்கள், தமிழகத்தில் ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் லிங்காயத்து மக்கள் ஆகியோர் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.

இந்த மக்கள் தமது வாழ்விடத்தையும் தமது கலாச்சார முறைகளையும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்கை சார்ந்த கலாச்சார முறையினை தங்களுக்குள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம் கால்நடை வளர்ப்பில் தங்கள் பாரம்பரிய அறிவை எடுத்துரைத்தும், இதுகாறும் தாங்கள் வளர்த்து வந்த கால்நடை இனங்களில் தங்களின் உரிமையை நிலைநாட்டவும், தங்கள் கலாச்சாரம் மற்றும் இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வழிதேடுகின்றனர்.

என்னடா இது, ஓர் எருமை தலைக்குப் பின்னால் ஒரு வரலாறே ஒளிஞ்சிருக்கேனு ஆச்சரியப்பட்டுத் தான் உங்களுக்கும் இத சொல்றேன். முடிஞ்ச வாய்ப்பு கிடைச்சா பார்த்துவிட்டு வாங்க மக்களே!!

சரவணமணியன்

Leave a Reply