நம் பாடப் புத்தங்களில் அநேகமாக எல்லோரும் இச்சொற்றொடரை கேட்டதுண்டு, “குடவோலை முறை”.
உத்திரமேரூரில் உள்ள முதல் பராந்தகன் சோழன் காலத்து பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளே நம் இந்தியத் தேர்தல் முறைக்கு முன்னோடியாக விளங்கும் குடவோலை முறைப் பற்றி எடுத்துரைகின்றன.
இக்கல்வெட்டுகள் படி ஊர்சபை அமைக்க, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குச் சொந்தவீடு இருக்க வேண்டும், சொந்த நிலம் இருக்க வேண்டும், சரியாக வரி கட்டியிருக்க வேண்டும், அதிகப்பட்சம் எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்கலாம் போன்ற விதி முறைகள் உள்ளன.
சோழர் காலத்தில் உத்திரமேரூர் கல்வெட்டும், திருநின்றவூர், சேய்ஞ்ஞலூர் கல்வெட்டுகளும் அக்காலத்தில் நடந்த தேர்தல் குறித்த தகவல்களைத் தருகின்றன
ஆனால் இப்பெருமைக்கு உரியவர்கள் சோழர்கள் மட்டுமல்ல, சங்ககாலப் பாண்டியர்களும் அரசர்களும் ஆவார்கள். ஊரவைக்கு நடத்தப்படும் இத்தேர்தல் முறைக்குக் குழிசியோலை என்று பெயர்.
சங்க இலக்கியமானாக அகநானூற்றிலும் பாண்டியக் காலத் தேர்தல் முறைபற்றிக் குறிப்புகள் வருகின்றனர்.
“கயிறு பிணிக் குழிசியோலை கொண்டமர்
பொறிகண்டழிக்கு மாவணமாக்களின்” அகம் – 77)
சோழர் கல்வெட்டைவிட நூறாண்டுகளுக்கு முன்பாகக் கிடைக்கும் அதாவது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி மனூரில் கிடைக்கும் பாண்டிய மன்னன் மாறஞ்சடையனின் இக்கல்வெட்டு பாண்டியர் காலம் தொட்டே தமிழகத்தில் தேர்தல் முறை இருத்ததைப்பற்றி விளக்குகிறது.
திருடியவர், கையூட்டு பெற்றவர், தவறுகள் செய்து தண்டனை பெற்று பின் நல்லவரானோர், மேற்கண்டவர்களின் ஆண், பெண் வழி உறவினர்கள் குழிசியோலை முறையில் போட்டியிட தகுதியவற்றவர்கள் எனப் பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது
ஐந்தாண்டுகள் பணி செய்தோருக்கு மீண்டும் தேர்தலில் பங்குபெற வாய்ப்பு வழங்குவதில்லை. ஒரு ஆண்டுப் பணி செய்தால், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்தான் மீண்டும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. வேட்பாளர் மட்டுமின்றி அவர் உடன் பிறந்தவர்கள், தந்தை, மக்கள் யாவரும் இரண்டாண்டு பணி செய்யக் கூடாது என விதிகள் வைத்திருந்தனர். இதில் கிடைக்கும் முக்கியத் தகவல் 70 வயதுக்கு மேல் தேர்தலில் யாரும் போட்டியிடக் கூடாது என்பதாகும். இது பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ஊர்களில் மட்டும் நடந்த ஊர் சபை தேர்தல் முறை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ராஜசேகர் பாண்டுரங்கன்