மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி
கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய வணிகப் பாதைகள் சந்திக்குமிடமாகவும் வளமான வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நகரமாகவும் காணப்பட்டது.
மிலிட்டஸோடு தொடர்புடைய நிலப்பகுதிகள் கீழைத்தேய பெரிய சமயங்களையும் அழகிய புராணவியல்களையும் (மித்ஸ்) பெற்றிருந்தன. ஏனைய கிரேக்கப் பழங்குடிகளைவிட நாகரிகத்திலும் பண்பாட்டிலும் விரைவான எழுச்சியைப் பெற இத்தொடர்பு உதவியிருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றின் அடிப்படை மெய்மைகளையும் விளக்குவதற்கு மைலீசியர் முற்பட்டபோது கீழைத்தேயத்தின் சமய, புராணவியல் மற்றும் கற்பனைக் கருத்துகளிலிருந்து விடுபட்ட பகுத்தறிவுவாதம், பகுப்பாய்வு, கருத்துருவான கோட்பாடு ஆகியவற்றினூடாகத் தமது விளக்கங்களை அவர்கள் முன்வைத்தனர்.
அயோனியச் சிந்தனையாளர்கள் எனப்படும் முதன்மை மெய்யிய லாளர்கள் ‘இயற்கையைப் பற்றி’ எழுதியவர்களாகவே அறியப் பட்டார்கள். (A.S. Bogomolov, 1935:35) அரிஸ்டாட்டிலின்படி முதன்மை மெய்யியலாளர்களில் பலர் பொருட்கள் அனைத்திற்குமான அடிப் படை, ‘சடப்பொருள்’ (பருப்பொருள்/பதார்த்தம்) என்பதை வலியுறுத்தினர். உருவாவதும் பின்னர் ஒன்று கலப்பதும் என்ற இயற்கைச் செயற்பாட்டின் (மாற்றத்தின்) மூலமாக இருப்பவற்றை அவர்கள் மூலக்கூறுகள் என்று அழைத்தனர்.
தொன்மை கிரேக்க மெய்யியலாளர்கள் தம் முழு ஆவலை யும் ‘இயற்கையில்’ (ஃபிஸிஸ்) வெளிப்படுத்தினார்கள். ஃபியோ என்பதிலிருந்து வரும் இதன் பொருள் உற்பத்தி செய்தல், வளர்தல் என்பதாகும். மெய்யியல் ரீதியில் நோக்கினால் இரு அணுகுமுறைகளை இது வெளிப்படுத்துகிறது எனலாம்:
அ. பொருட்களின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வு, அவற்றின் மூலப் பதார்த்தங்கள் (பருப்பொருள்/சடப்பொருள்) பற்றிய ஆய்வு.
ஆ. புலன்களினால் அறியப்படும் தோற்றப்பாடுகள் பற்றிய ஆய்வு.
முதல் மெய்யியலாளர்கள் பௌதிகவியல்/இயற்பியல் என்பதை ‘பொருட்களின் இயல்பு’ என்பதாக எடுத்துக்கொண்டனர். புலனாகக் கூடிய உலகைப் பற்றிய, மனிதனின் பகுத்தறிவால் விளக்கம் தரக்கூடிய விடயங்களை தொடக்ககால மெய்யியலாளர்கள் வெளியிட்டனர். முன்னர் இருந்த சமய, புராணவியல் வகையான தீர்வுகள் அகற்றப் பட்டன. பகுத்தறிவுக்கும் அளவையியலுக்கும் முன்னுரிமை வழங்கப் படும் சிந்தனையின் தொடக்கம் இவ்வாறுதான் உதயமாகியது.
ஆதி கிரேக்க காலம் முதல் பல்வேறு மெய்யியல் வரலாற்றுக் கால கட்டங்களில் மெய்யில் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் வரலாற்றுப் பின்னணி என்பன இந்நூலின் வெளிப்படையான வடிவம். எனினும் இது மெய்யியல் வரலாற்று நூல் அல்ல. மட்டுப்படுத்தப்பட்ட வரலாற்று விவரணத்துடன் மெய்யியலின் இயல்பு பிரச்சினை அணுகுமுறைகள் அதன் தனித்துவம் பற்றிய பரிசீலனையாகவும் மெய்யியல் வரலாற்று ஓட்டத்தினூடாக மெய்யியல் என்ன என்று அறிந்து கொள்ள உதவும் முயற்சியாகவும் இந்நூல் அமைகிறது.
மெய்யியல்: கிரேக்கம் முதல் தற்காலம் வரை | எம்.எஸ்.எம். அனஸ்
₹210
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.