தமிழகத்தில் சமணம் – 2 சமணத் தடங்கள் மற்றும் தமிழ் கல்வெட்டுகள் – M. ஆயிஷா பேகம்

கி.மு 3-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைந்த சமண மதத்திற்கு புகலிடமாக மதுரை திகழ்ந்தது.இயற்கை அரண்களாக விளங்கும் மலைகளையும்,பாறைக்குன்றுகளையும் மதுரை பெற்றுள்ளதால் சமணர்கள் தாங்கள் வாழும் பகுதியாக இதனை தேர்ந்தெடுத்து இருக்கலாம். தமிழகத்தில் காணப்படும் தமிழ்-பிராமி கல்வெட்டுகளுள் 70மூமதுரையில் உள்ளது .

தமிழ்நாட்டில் சமணத் தடங்கள் இருக்கும் இடங்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1) தொண்டை மண்டலம்
2) பாண்டிய மண்டலம்
3) கொங்கு மண்டலம்
4) நடுநாடு

மாங்குளம்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள மாங்குளம் என்னும் சிற்றூரில், கழுகுமலையில் 6 தமிழ்-பிராமி கல்வெட்டுகள் சமணப்படுக்கைகளுடன் உள்ளன.
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி கல்வெட்டுகளில் மிகப் பழைமையான கல்வெட்டு மாங்குளம் கல்வெட்டாகும்.இக்கல்வெட்டினை 1882-ல் இராபர்ட் சீவெல் என்னும் ஆங்கிலேயர் கண்டுப்பிடித்தார்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பணியாள் கடலன் வழுதி என்பவனால் கணிய நந்தி என்னும் சமண ஆசிரியருக்கு செய்து கொடுத்த கற்படுக்கைகளை பற்றிக் கூறுகிறது.

அரிட்டாப்பட்டி

மதுரை மாவட்டம் அழகர் கோவில் செல்லும் வழியில் , மேலூரிலிருந்து 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.அரிட்டாப்பட்டி பிராமி கல்வெட்டுகள் சங்க காலத்தை சார்ந்த கல்வெட்டுகளாகும்(கி.மு 3 அல்லது கி.மு 2).
பாண்டிய தளபதி ஆதனன் என்பவன் சமண முனிவர்களுக்கு கொடுத்த தானத்தைக் குறிக்கிறது.

கீழ்வளவு

கீழ்வளவு என்னும் ஊர் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள குகைத்தளங்களில் சமணப்படுக்கைகளும், பாறையின் மேல்முகப்பில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.கீழ்வளவு கல்வெட்டு 1903-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.இதற்கு அருகில் சமணப் புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இருக்கின்றன.இவற்றின் காலம் கி.பி 7(அ) கி.பி 8-ம் நூற்றாண்டாகும்.
இக்கல்வெட்டினை

‘”உபாச அபோத நெடுல வோசோ கொடுபாரி”
என்று அறிஞர் மகாலிங்கம் வாசித்துள்ளார்.
நெடுலன் என்பவனின் மகன் ஆபுத்திரன் சமண முனிவர்களுக்கு கற்படுக்கைகளை தானமாக செய்து கொடுத்ததைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

கொங்கர்புளியங்குளம்

கொங்கர்புளியங்குளம் மதுரையிலிருந்து தென்மேற்காக 9 கி.மீ தொலைவில் திருமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இங்குள்ள குகைத்தளங்களில் 3 பிராமி கல்வெட்டுகளும் மற்றும் ஆறு சமணப்படுக்கைகளும் காணப்படுகின்றன.
குகையின் மேற்புறத்தில் சமணப் புடைப்புச் சிற்பங்கள் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன.கொங்கர்புளியங்குளக் கல்வெட்டினை கி.மு 3 அல்லது 2-ம் நூற்றாண்டை சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

விக்கிரமங்கலம்

இவ்வூர், மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.இங்குள்ள நாக மலை என்னும் மலைத்தொடரில் சமணர் குகைகள் இருக்கின்றன.இக்குகைகளை “உண்டான் கல்” என்று அவ்வூர் மக்கள் அழைக்கிறார்கள்.இந்த குகைத்தளங்களில் சமணப்படுக்கைகளுடன் கூடிய பிராமி கல்வெட்டுகள் உள்ளன.இதன் காலம் கி.மு 3 அல்லது கி.மு 2-ம் நூற்றாண்டாகும்.

அழகர்மலை

அழகர் மலை, மதுரையிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் கிடாரிபட்டி என்ற ஊரினலிருந்து 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அழகர் மலையில் மொத்தம் 8 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
அச்சநந்தி என்ற சமணர் உருவாக்கிய கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரரின் சிற்பம் உள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மதுரைக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடமாகும்.இங்கு மொத்தம் 6 சமணப்படுக்கைகள் பிராமி கல்வெட்டுகளுடன் அமைந்துள்ளது. இதன் காலம் கி.மு 1-ம் நூற்றாண்டாகும்.
பொது மக்களின் கல்வெட்டுகளுள் திருப்பரங்குன்றம் கல்வெட்டு பிரதான இடத்தை பெற்றுள்ளது.இலங்கையை சேர்ந்த போலாலயன் என்பவன் செய்து கொடுத்த சமணப்படுக்கையை பற்றிக் கூறுகிறது.
திரு நாராயணராவ் திருப்பரங்குன்ற கல்வெட்டினை பின்வருமாறு படிக்கிறார்

‘”எருக்காட்டூரா இ(ல்)ல குடும்பிகன போலாலயன
செய்த ஐய-கயன நேடு கையான”
இங்கு “குடும்பிகன” என்பது குடும்பத் தலைவன் என பொருள்படும்.

சித்தர் மலை

சித்தர் மலை என்னும் ஊர் மதுரை மாவட்டத்தில் மேட்டுப்பட்டி அருகே உள்ளது.வைகை நதிக்கரைக்கு அருகே அமைந்துள்ள இம்மலையில் 5 கற்படுக்கைகளும், தமிழ்-பிராமி கல்வெட்டுகளும் உள்ளன.

முத்துப்பட்டி

மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.இவ்வூரில் உள்ள “உண்ணா மலை” என்ற மலையில் 30-க்கும் மேற்பட்ட சமணப்படுக்கைகளும் 5 தமிழ்-பிராமி கல்வெட்டுகளும் இருக்கின்றன.குகையின் மேற்புறம் 2 சமணப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.பி 8 (அ) 9-ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

வரிச்சியூர்

வரிச்சியூர், மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அமைந்துள்ள மலை குன்றுக்கு உதயகிரி என்று பெயர்.இக்குன்றில் சமணத்துறவிக்களுக்கான பெரிய குகை ஒன்று உள்ளது. வரிச்சியூர் மலையில் அதிகமான கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு அருகில் சிதைந்த நிலையில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

ஆனைமலை

மதுரையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஆனை மலை என்னும் மலைத் தொடர். தொலைவில் இருந்து பார்த்தால் உறங்குகின்ற யானையை போல் தோற்றமளிப்பதால் இதற்கு “ஆனை மலை” என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

ஆனை மலையில் உள்ள எட்டு சிறு குன்றுகளில் சமணர் வசித்தற்கான அடையாளங்களாக 12 கற்படுக்கைகளும்,குகையின் முகப்பில் ஒரு தமிழி கல்வெட்டும் உள்ளன. இக்குகை 23 அடி 6 அங்குல நீளமும்,3அடி உயரத்தையும் கொண்டுள்ளது.

ஜம்பை

நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம் மாவட்டத்தில், திருக்கோவிலூர் தாலுக்காவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது.இவ்வூர் மலையில் உள்ள குகைத்தளத்தில் தமிழ்- பிராமி கல்வெட்டு ஒன்று இருக்கிறது. கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு, அதியமான் என்ற குறுநில அரச மரபை சார்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனுடையதாகும்.
அசோகருடைய கல்வெட்டுக்களில் வரும் “சதியபுதோ” என்னும் வார்த்தை இந்த கல்வெட்டில் வருகிறது. இதனை சத்திய புத்திரர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.சமணத் துறவிகளுக்கு செய்து கொடுக்கப்பட்ட சமணப்பள்ளியை பற்றி ஜம்பை கல்வெட்டு கூறுகிறது.

புகார்

புகார் சேரர்களின் தலைநகரான கரூர்க்கு அருகில் உள்ளது.புகாரில் “ஆறு நாட்டார் மலை” என்ற பகுதியில் புகார் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இம்மலையடிவாரத்தில் உள்ள ஊரை “வேலாயுதம் பாளையம்” என்றுக் குறிப்பர். அங்கு உள்ள குகைத்தளங்களில் சேரர் காலத்திய தமிழிக் கல்வெட்டுகள் உள்ளன.
சங்க கால சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைப்பற்றி கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.இக்கல்வெட்டுக்களை மிகத் தெளிவாக படித்த பெருமை திரு.ஐராவதம் மகாதேவனையே சாரும். புகார் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சேர மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

அரச்சலூர்

அரச்சலூர் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.இங்குள்ள நாக மலை என்னும் மலைத் தொடரில் உள்ள குகைத் தளங்களில் பிற்கால தமிழ்- பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அரச்சலூர் கல்வெட்டுகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது இசைக் கல்வெட்டாகும்.ஏனெனில் பழங்கால இசையைப் பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது. மேலும் இக்கல்வெட்டுகள் முற்கால தமிழ்-பிராமி எழுத்துக்களை விடவும் மேம்பட்ட வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.
அரச்சலூர் பிராமி கல்வெட்டுகள் தான் நாளடைவில் வட்டெழுத்துக்களாக உருப்பெற்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்;.

சித்தன்ன வாசல்

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்ன வாசலில் காணப்படும் குடைவரையும் அங்கு தீட்டப்பட்டுள்ள ஓவியமும் பல வகைகளில் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவை இராமச்சந்திரன், திரு.நாகசாமி ஆகியோரின் கருத்துப்படி இவ்வரலாற்றுச் சின்னம் சமண சமயத்திற்குரியது என்பதாகும்.சித்தன்ன வாசலை “சிறு பொசில்” என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.
இம்மலையின் மேல் பகுதியில் உள்ள ஏழடிப்பட்டம் என்னும் குகைப்பள்ளியில் வெட்டப்பட்டுள்ள பழந்தமிழ் கல்வெட்டு சமணம் சார்ந்தது என்று ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார். சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரான பார்சுவ நாதரின் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது.

பாதிரி புலியூர்

பல்லவர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் சிறந்த சமண மடம் பாதிரி புலியூரில் இருந்தது என “லோக விபாகம்” என்னும் சமண நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் முதலாம் மகேந்திர வர்மன் சைவனாக மாறியதும் அம்மடத்தை அழித்து அதன் கற்களை கொண்டு “குணபத ஈஸ்வரம்” என்ற கோயிலை கட்டினான் என்று லோக விபாகம் என்ற நூல் கூறுகிறது.

திருப்பருத்திக்குன்றம்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள இந்த இடம் “சமணக் காஞ்சி” எனப்படும்.வேகவதி ஆற்றங்கரையில் அமைந்த இந்த ஊர் காஞ்சியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது. மொத்தம் இங்கு இரண்டு கலைப்பாணியிலான கோயில்கள் அமைந்துள்ளது.

1) திராவிடம்
2) வேசரம் (தூங்கானை மாடக் கோயில்)

இக்கோயிலைப் பற்றி அறிஞர் இராமசந்திரன் என்பவர் ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார். திகம்பர சமணர் கலைப்பீடங்களுள் நான்கனுள் ஒன்றாக சமணக் காஞ்சியும் விளங்கியது. தமிழ் நாட்டில் திகம்பர சமணம் கி.பி 3-ம் நூற்றாண்டில் தான் தோன்றியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இக்கோயில் பிற்கால சோழர் காலத்தில் பெருஞ்சிறப்பு பெற்றிந்தது.

இந்த கோயிலில் முன் உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் அழகான சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.இவை விஜய நகரர்களின் காலத்தை சேர்ந்தவை.சோழர் மற்றும் விஜய நகரர் அரசக்களின் கல்வெட்டுகள் உள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் சமணத் தீர்;த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன.

திருப்பருத்திக்குன்றம் சமணக்கோயில் தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் உள்ளது.

கி.மு 3-ம் நூற்றாண்டில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்தில் நுழைந்த சமண மதம் கி.பி 7-ம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 1000 ஆண்டுகள் தழைத்தோங்கி வளர்ந்தது. கி.பி 7-ம் நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கம் காரணமாக சமணம் அதன் பெருமையை இழக்க தொடங்கியது.
இத்தகைய பக்தி இயக்கம் உருவாக காரணமாக இருந்தவர்கள் தேவார மூவரான அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர்.மேலும் சமண சமயத்தின் கடுமையான விதிமுறைகளையும்,பழக்க வழக்கங்களையும் சாதாரண மக்களால் பின்பற்ற முடியாததும் சமணத்தின் சிறுமைக்கு ஒரு காரணம் எனலாம்.

Leave a Reply