அப்துல்லாபுரம் அரண்மனை – சரவணன் ராஜா

பல்வேறு அரசபரம்பரைகள் வேலூரில் ஆட்சி புரிந்திருந்தாலும், அவர்கள் வாழ்ந்த அரண்மனை என்று ஏதும் காணப்படவில்லை, அந்த வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் செல்லும் நிகழ்வில் சில விபரங்கள் வியப்பூட்டும். வேலூர் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து ஆம்பூர் செல்லும் வழியாக 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்துல்லாபுரம் கிராமம். நெடுஞ்சாலை ஓரத்தில் அழகிய வேலைப்பாடுள்ள இடிந்த கட்டடம். இது ஓர் அரண்மனை என்பதை அறியும் போது ஆச்சரியப்பட வேண்டியுள்ளது, அருகில் சென்றால் மேலும் அதிர்ச்சி, மன்னர் வாழ்ந்த இடம் இன்று மாட்டுத் தொழுவமாகவும், சுவர்கள் வறட்டி தட்டும் இடமாக மாற்றபட்டுள்ளன.

  

வரலாற்றைப் புரட்டினால் பொ.பி.1566-முதல் பொ.பி.1656-வரை விசயநகரப் பேரரசின் கீழ் வேலூரும், கோட்டையும் இருந்தன, கோட்டையை பீஜப்பூர் சுல்தான் அடில்சாகி பொ.பி. 1656-இல் கைப்பற்றி ஆண்டார், இவர் வழி வந்தவரே அப்துல்லா கான். கி.பி.1678-இல் மராட்டிய மன்னர் சிவாஜி செஞ்சியை வென்று தன் சகோதரர் துக்கோஜியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

இதே ஆண்டில் துக்கோஜி வேலூரை ஆண்ட சுல்தான் அப்துல்லா கானைத் தோற்கடித்து வேலூரையும், கோட்டையையும் கைப்பற்றினார். தோல்வியுற்ற அப்துல்லாகான் வேலூரைவிட்டு 5 கி.மீ. தள்ளி ஓர் சிறிய அரண்மனை உருவாக்கித் தன் ராஜ்ஜியத்தைச் சுருக்கி வாழ்ந்து மறைந்தார். இந்த அரண்மனை எதிரே அவர் கல்லறையும் அமைக்கப்பட்டது (தற்போது அதுவும் காணவில்லை!)

இரண்டு அடுக்குகள், 12 அறைகள் என்று செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட கலையழகு மிக்க அரண்மனை, முன்சுவர் முழுதும் விளக்குகள் ஏற்ற அழகிய மாடங்கள், முகலாய பாணியில் அனைத்து அறைகளின் நுழைவாயில்கள், மேலே விதானத்தில் சுதையினால் அழகிய வேலைப்பாடுகள் என வடிவமைப்பு காணப்படுகின்றது. அந்த சுல்தானின் பெயரில் இன்றும் அந்தச் சுற்றுப் பகுதி ’அப்துல்லாபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது.

2001-இல் நான்கு-வழி நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் இந்த அரண்மனையும் பாதி அரியபட்டுப் பலியாக்கபட்டது. தப்பிய மீதி கலை நயமிக்க அரண்மனை எல்லாம் சாணி தட்டிய சுவர்களாகக் காணப்படுகின்றன. குதிரைகளின் குளம்பொலி ஓசைகள் கேட்ட இடத்தில் இன்று சாணி குழைத்தடிக்கும் ஓசைதான் கேட்கின்றது. அரண்மனை பின்புறமெல்லாம் பட்டா போட்டு விற்கப்பட்டுள்ளன. மேலும் சாலை விரிவாக்கத்தில் மீதமுள்ள இடமும் காணாமல் போகுமுன் சென்று காண்போம். மீதி அரண்மனையாவது அதன் வரலாற்றைத் தாங்கி வாழவைக்கப்படுமா என்று பார்ப்போம்!

எழுத்து, புகைபடம் : சரவணன் இராஜா. சத்துவாச்சாரி,

Leave a Reply