பழந்தமிழர் துறைமுகம் முசிறி பட்டினம் பேராசிரியர். வேல்முருகன்

அமணன்’ என்கிற ஒற்றை தமிழ் சொல்லுக்குள் தமிழனின் பேரடையாளம் ஒளிந்து இருப்பதை முசிறி அகழாய்வு நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. பண்டைய தமிழனின் நாகரீக எச்சங்கள் இன்றைய தமிழ் மண்ணில் மட்டுமின்றி உலகம் முழுக்க வியாபித்து கிடப்பதை இத்தகைய அகழாய்வுகள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உலக சாலைகள் எல்லாம் ரோம் நகரை நோக்கியே எனப்படும் சொலவடை போல் உலக கடல்பெருவழிகள் எல்லாம் பண்டைய தமிழ் துறைமுகங்களை நோக்கியே என்பதற்கான தரவுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அக்காலத்தில், கிழக்கு கடற்கரையில் பெரும் வணிகத்தலமாக காவிரிப்பூம்பட்டினம் புகழ் பெற்றிருந்ததைப்போல் மேற்கு கடற்கரையில் முசிறி துறைமுகம் பெரும்புகழோடும், செல்வாக்கோடும் திழைத்திருந்தது.

        

கேரளாவின் தற்போதைய கொச்சி துறைமுகத்திலிருந்து சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் வடதிசையில் பெரியாறு ஆற்றிலிருந்து பிரிந்து ஓடும் சிறு கால்வாயான பெரியாற்தோட்டின் கரையில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமம் தான் ‘பட்டணம்’. இந்த பட்டணம் ‘பரவூர்’ என்கிற சிறு நகரத்திற்கு வடமேற்கிலும், கொடுங்கலூருக்கு தெற்கு திசையிலும் அமைந்துள்ளது. கொச்சி, பரவூர் என்கிற இரண்டு நகர்ப்புறங்களுக்கும் நடுவே பெரியார் ஆறு ஓடி அரபிக்கடலுடன் சங்கமிக்கிறது. நீருக்காக இறைஞ்சிய உயிர்கள் ஆற்றுவழிகளில் தங்களை ஆற்றுப்படுத்தி நிலை கொண்டன என்பது வரலாற்று உண்மை. ஆற்றுப்படுகைகளில் உணவும், அதை ஒட்டிய இடங்களில் பயிரிடுதலும் உயிர் வாழ்வியலை எளிதாக்கியது. உணவில் தன்னிறைவு பெற்ற உயிர் சமூகம் நிலைத்தன்மை கருதியும், வாழ்வியல் உத்தரவாதத்தாலும், நிலைத்தனம் கொண்டு பின்னாட்களில் தன்னை நாகரீகப்படுத்திக்கொண்டது. அந்த நாகரீகத்தின் எச்சங்களே இன்று நமக்கு தொல்பொருட்களாக நம் வரலாற்றை பதிவு செய்கிறது.

பெரியார் ஆறு என்று அழைக்கப்படும் ‘மலைநீர் ஒழுகுவழி’ சங்ககாலத்தில் ‘பேரியாறு’ பேர்யாறு’ என்று அழைக்கப்படிருக்கிறது. இந்த ஆற்றின் கரையிலிருந்து கறிமிளகு, ஏலம், இலவங்கம் உட்பட்ட உணவுக்கு சுவையூட்டும் பதார்த்தங்கள், அகில், சந்தனம் போன்ற வாசனைத்திரவியங்கள் மற்றும் தந்தம், தேங்காய், தேக்கு போன்ற பொருட்களும் அந்நிய தேசங்களுக்கு கடல்வழி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மிளகிற்கு சமத்துவமான பொருளாக தங்கத்தை அளித்து பண்டமாற்று முறையில் வாணிபம் நடந்தற்கான தரவுகள் நமது சங்க இலக்கியங்களில் வியாபித்திருக்கிறது. அகநானூறில் (அகம் : 149, 8 – 11) தாயங்கண்ணனார்,

“சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க
யவனார் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி”

என பதிவு செய்துள்ளார். இந்த கவியில், பேர்யாற்று என உரைக்கப்படுவது பெரியாறாகும். நன்கலம் என்பது நல்ல மரக்கலம் என்பதாகும். கறியொடு என்பது கறிமிளகாக கணக்கில் கொள்ளப்படும். யவனர்களுக்கு கிடைக்கப்பெறாத பெரும்பொருள் என்பது நமது மேற்குத்தொடர்ச்சி மலையின் வால் பகுதியில் விளையும் மிளகு. இந்த காரணத்திற்காகவே மிளகிற்கு ‘யவனப்பிரியா’ என்கிற பெயர் விளங்கலாயிற்று.

யவனர்கள் என்பவர்கள் யாரென அறிதல் அதனினும் சிறப்பாகிடும். சங்க இலக்கியங்களில் யவனர்கள் குறித்த பல குறிப்புக்கள் உள்ளன. சிலப்பதிகாரத்திலும் யவனர்கள் என்கிற பெயர் பயன்பாட்டில் உள்ளது. யவனர்கள் யார் என்பதும் அவர்கள் நம் மண்ணில் வர்த்தக தொடர்பிற்குள் வந்ததற்கும் என்ன ஆதாரம் ? இதற்கான பதில்கள் முசிறி அகழாய்வில் காணக்கிடைக்கின்றது. யவனர்கள் என்கிற இனத்தார் பண்டைய கிரேக்கம், ரோம், பாரசீகம், அரேபியா என வகைப்படுத்தப்படுகின்ற நிலப்பரப்பில் வாழ்ந்த, தமிழக கடல் தொடர்பு எல்லைக்குள் வாணிபம் செய்த நாகரீக நிலப்பரப்பு மக்கள். தமிழ் மண்ணுடன் வாணிபத்தொடர்பு கொண்ட இந்த யவனர்கள் குறித்த தரவுகள் சங்க இலக்கியங்களின் நடைவெளி தோறும் வியாபித்துக்கிடைப்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் மட்டுமின்றி, சிலப்பதிகாரத்திலும் யவனர்கள் குறித்த பல தகவல்கள் உள்ளன.

சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்து, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், யவனர்களைப் பிடித்து, பின்புறமாக கைகளைக் கட்டி தலையில் நெய்யை ஊற்றினான் என்கிற தகவலை பதிவு செய்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன் யவனர்களை வென்று அவர் நாட்டை ஆண்டதாகவும் சங்க இலக்கியப்பாடல்கள் பேசிச்செல்கிறது. யவனர்களை வன்சொல் யவனர் என்று இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்கள், யவனர்களை மிலேச்சர்கள் என்றும், துருக்கியர்கள் என்றும் சொல்கிறார். மட்டுமன்றி, தமிழ் இலக்கியத்தில் அகநாநூறு (149/9), நெடுநெல்வாடை (101), புறநானுறு (56 / 18), முல்லைப்பாட்டு (61), மற்றும் பதிற்றுப் பத்து பதிகம் என பலப்பல தமிழ் இலக்கியங்களில் யவனர்கள் என்கிற பெயர் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த யவனர்கள் முசிறி துறைமுகத்தை ‘முசிறிஸ்’ என்று அழைத்துள்ளனர். நாகரீக எச்சங்களின் மீதங்கள் இன்னமும் பின்தொடர்தல்களின்தான் உள்ளன என்பதற்கு தற்கால உதாரணமாக, யவனர்களின் வெனிஸ் நகரத்திற்கு அடுத்ததாக நம் நாட்டில் நடக்கும் மாபெரும் கலைத்திருவிழாவான ‘கொச்சி-முசிறிஸ் பினாலே’ யே சாட்சி.

முசிறிப் பட்டணத்தில் இருந்து, மிளகும், வாசனைத்திரவியங்களும் மட்டும் ஏற்றுமதியாகவில்லை. பிறபல நாகரீக பொருட்களும் ஏற்றுமதியாகின. முசிறி கடலில் விளைந்த முத்துக்கள் அந்த கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதியான பந்தரில் சந்தைப்படுத்தப்பட்டு, அந்நிய தேசங்களுக்கு வர்த்தகமான செய்தியை பதிற்றுப்பற்று (6/5) பாடிச்செல்கிறது. பெரியாற்றை ஒட்டிய முசிறி பகுதியான ‘கொடுமணத்தில்’ தயாரிக்கப்பட்ட பொன்னாபரணங்கள் வியாபாரமான தகவலை பதிற்றுப்பற்று (8:4/5-6) அடித்துரைக்கிறது.

“இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தாக்
கமளுந தாழைக் கானலம் பெருந்துறை’
‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்’”

இதில் ‘பந்தர்’, ‘கொடுமணம்’ என்பவை ஊர் பெயர்களாக இருக்கலாம். பந்தர் என்பதற்கு அங்காடி என்பது பொருள். அங்காடி என்பது பொருட்களை விற்பனை செய்யும் சந்தையிடத்தைக் குறிக்கும். இந்த அரும்பொருட்களுக்கு இணையாக எதைக்கொடுத்தார்கள் என்பதற்கு விடை முன் சொன்னதுபோல் பொன் மட்டுமல்ல … யவனக்கப்பல்கள் ஒயின் போன்ற மதுவகைகள், இரும்பு, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களையும் கண்ணாடியையும் கொண்டு வந்து பண்டமாற்றியும், இணையாக அவர்களது காசுகளையும் மடைமாற்றியுள்ளது.

பட்டிணபூமிக்குள் அகழ்வாராய்ச்சி செய்தபோது இரும்பு காலத்திலிருந்து தொடக்ககால வரலாற்றுக்காலம் வரையிலான தொல் பொருட்களுடன், பல்லாயிரக்கணக்கான வாணிப, வாழ்வியல் பொருட்கள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்றுள்ளன. சேரமன்னர்களின் அரச சின்னமான வில்-அம்பு ஒருபுறத்திலும், மறுபுறம் யானையின் உருவமும் பொறிக்கப்பட்ட நாணயங்களும், ரோம் நாட்டவரின் ரெளலடெட், அரிட்டைன் என்ற உயர்வகைப் பானை ஓடுகள், ரோமானியர் மற்றும் கிரேக்கர்கள் மதுபானங்களை பாதுகாத்து வைத்திட பயன்படுத்திய ‘அம்போரா’ என்னும் கூர்முனை மதுக்குடங்களும் அதிக அளவில் இங்கு கிடைத்துள்ளன. ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்களும் கிடைத்துள்ளன. அளவுக்கு அதிகமான அளவில் கலைநயத்துடன் கூடிய மணிகளும், செம்பு, யானைத்தந்தத்தால் செய்யப்பட கலைப்பொருட்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. கல்லினால் ஆன பலவிதமான அச்சுக்கள், முத்திரைகளுக்கான அச்சு உருவாக்கும் சீல்கள், கல்லினாலான எடை கற்கள், கண்ணாடிப்பொருட்கள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி செய்து மீதமான கழிவுகள், சுடுமண்ணினால் செய்யப்பட (டெரக்கோட்டா) அலங்காரப்பொருட்கள் மற்றும் விளக்குகளும் அதிக அளவில் கிடைத்துள்ளன. இரும்பு காலத்தைய இரும்பிலானான கலைப்பொருட்கள், கி.மு 44 முதல் 14 வரை ரோமை ஆண்ட அகஸ்டஸ் கால நாணயங்கள், கி.பி. 14 முதல் 37 வரை ரோமை ஆண்ட டைபீரியஸ், கி.பி. 54 முதல் 68 வரையில் ரோமை ஆண்ட நீரோ போன்ற ரோம் நாட்டு அரசர்களின் பெயரும் உருவமும் பொறித்த நாணயங்களும் கிடைத்துள்ளன. மரத்தினால் செய்யப்பட மரப்பொருட்கள், நெசவுக்கு பயன்படுத்தும் கட்டுத்தறிகள், பட்டுத்துணிகளின் எச்சங்கள் என பல நாகரீகப்பொருட்களும் கிடக்கப்பெற்றுள்ளது. இந்த அகழ்வில் கிடைத்த மிகமுக்கியமாக கருதப்படும் ஒரு பொருள் ஒருமரத்தின் அடிக்கட்டையை செதுக்கி செய்யப்பட சிறு படகு என்கிற கட்டுமரம். இந்த அரிய பொருளை அதன் பாதுகாப்பு கருதி அது கிடைத்த நிலையிலே மூடிவைத்து பாதுகாக்கப்படுகிறது. அதைப்போல், வாசனைப்பொருளான குங்கிலியம் சாம்பிராணியும் அதிக அளவில் இங்கு கிடைத்துள்ளது. இந்த குங்கிலியம் சவுதி அரேபியாவிலிருந்து கொண்டுவரப்பெற்று சந்தைப்படுத்தப்பட்டிருக்கலாம். கோர்-ரோகி மற்றும் கனா போன்ற பழம்பெரும் துறைமுகங்கள் குங்கிலியம் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு, உலக அளவில் பெற்று விளங்கிய துறைமுகங்களாகும். முசிறியில் கிடைக்கப்பெற்ற அகழ் பொருட்களில் அதிகமானவைகள் கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலானதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் பிரமிடுகள் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற அகழ்வு பொருட்களும் முசிறி துறைமுகம் கிரேக்கத்துடன் கொண்டிருந்த வாணிபத்தொடர்பை உறுதி செய்கின்றது. நமது நாட்டுப் பொருட்களான தேக்கு, தேங்காய் சிரட்டை, பருத்தி பொருட்கள் போன்றவைகள் பிரமிடுகளுக்கு அருகில் கிடைத்துள்ளன. இதைவிட பிரமிக்கத்தக்கவிதத்தில் சுமார் ஏழு டன் மிளகும் மண் ஜாடிக்குள்ளிருந்து புதைபொருளாக எடுக்கப்பட்டுள்ளது. மிளகினை ரோமானியர்கள் ‘மரிசி’ என உச்சரித்துள்ளனர்.

மரிசி ஏற்றுமதியான இடத்தின் பெயர் மருவி முசிறியாகி இருக்கலாம். இந்த புகழ்பெற்ற துறைமுகப்பட்டினம் கி.பி. 1341 – ல் பெரியாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அழிந்து உருக்குலைந்து போயிற்று.

அப்பெரும் வெள்ளப்பெருக்கின்போது பெரியாறு தனது நடைவழிதிசையை வலது புறமாக மாற்றி முசிறியை மண்கொண்டு மூடியதனால் அன்றைய முசிறி பட்டிணம் முசிறியை இழந்து இன்றைய பட்டிணமாக புதையுண்டு கிடக்கிறது.

Leave a Reply