கடந்த வருடத்தின் கடைசி நாளின் மாலைப் பொழுது சமண படுக்கையில் வருடக் கடைசியிலாவது சயனிக்க எண்ணம். அதனால் நானும் தம்பி சோமேஷும் மாலை சரியாக 5 மணிக்குச் சித்த மருத்துவக் கல்லூரியை விட்டுக் கிளம்பினோம்.
நேரே முதல் தீர்மானம் நெல்லைச் சீமையின் சீவலபேரியை நோக்கியதாகப் பயணம். வேகப் பயணத்தை இளந்தென்றல் மட்டும் எங்களை வேவு பார்த்து பின்தொடர்ந்தது. பின் சீவலபேரியை நெருங்க நெருங்க வயல்கள் வரிசைகட்டி இருபுறமும் நிற்க…. தம்பி வியந்து நின்றுவிட்டான்…
எங்க ஊரில் (அரியலூர்) இப்படியெல்லாம் பார்க்கவே முடியாது என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தவனை இதெல்லாம் இங்கே சகஜம் தான்.
இது நெல்லை. தாமிரபரணியின் தலைப்பிள்ளை. அதுவோ அரியலூர், சூரியனின் வெஞ்சினம் முழுதும் வரிந்து ஓடும் ஊர் என்றதும்… ஆற்றாமையை அடக்கிக்கொண்டு சீவலபேரியை நோக்கி வண்டியை முடுக்கினான்.
சீவலபேரி இந்தப் பெயரே ஒரு திரிபுதான். ஸ்ரீ வல்லபபாண்டியன் ஆண்ட ஊரில், அவன் கட்டிய ஏரியின் நினைவாய், அந்த ஊரிற்கு அவன் பெயர் வந்தது. இது ஆயிரம் ஆண்டுகள் முன்னர் நடந்த சங்கதி. வழியில் சாலை எங்கும் மூக்குத்திப்பூக்கள் முகம் காட்ட.. “தம்பி இது தான் யா, கூத்தங்குதம்பைனு நம்ம மருத்துவம் சொல்றது” என்று அவனிடம் சொல்லி விட்டு சீவலபேரி கடந்தோம்… அங்கு நின்றிருந்த சிறு கோயில் ஒன்றின் மரத்தேர் அழகாக செதுக்கப்பட்டதை கண்டபோது பெருமிதமாய் இருந்தது.
பின் நகர்ந்து நேரே தாமிரபரணி கரையோரம் நடந்து, நேரே மறுகால்தலை நோக்கி விரைந்தோம். ரோட்டு பாதையில் இருந்து விலகி பின் ஒற்றையடிப் பாதையில் நகர்ந்து. பின் சில நிமிடத்தில் அந்த மலையின் முகப்பு கண்ணில் பட்டது.
சில நிமிட நடையில் அந்தக் கோயில் முன் வந்திருந்தோம். கீழே சிறுதெய்வங்களாய் வீற்றிருந்த கொம்பு மாடனையும், கொம்பு மாடாத்தியையும் வழிபட மனம் நிற்கவில்லை…. அந்த பாகுபலியை பார்க்க அவா.. நேரே படிக்கட்டுகளில் மலையேறத் தொடங்கிவிட்டோம்.
அந்தச் சமணத்து பாகுபலிக்கு இன்றைய பெயர் “பூலுடைய சாஸ்தா” ஒரு சிறுதெய்வமாய் சுருங்கி நின்று அருள்பாலிக்கும் சமணர்களின் கடவுள்…
அதே நிர்வாண கோலத்தில் நிற்கிறார்.
அருகே இந்துமதம் அரவணைத்ததால் உருவான விநாயகர் சன்னதி, ஸ்ரீமலையழகியம்மன், ஸ்ரீ்ரீமலைபேச்சியம்மன், சங்கதிபூதத்தார் எனச் சிறு தெய்வங்கள் வரிசையாக நின்றார்கள். பின் பூலுடையார் மலையில் உச்சியில் சில நிமிடங்கள் செலவிட்டோம்.
அங்கிருந்து பார்த்தபொழுது பச்சைபசேல் வெளிகளும், ஒற்றையடிப் பாதைகளும் பார்க்கவே ஏழிலாக இருந்தது. பின் கால் மணி நேரத்தில் கீழே இறங்கபோதுதான் கவனித்தோம் அந்த மலையைச் சூழ்ந்திருந்த வெண்முள்ளி மலர்களும்… பின் தோகை விரித்தாடிய இரட்டை மயில்களும் அந்த இடத்திற்கு புதுவித அழகை தர தவறவில்லை. நேரே இறங்கி கீழே இறங்கி சமண படுக்கைகள் குறித்து அங்கிருந்த பெரியவரிடம் கேட்க அவர் அந்த மலைக்கு பின்னாடி போங்க என்று வழிகூறினார்.
அந்த இருமலைகளைப் பிளந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து பின்னே வந்ததும் தான் பார்த்தேன்.
அந்த பெருந்துண்டுப் பாறையும் அதன் பிரமாண்டமும்.. அதற்குக் கீழே செவ்வையாக வடிக்கப்பட்ட சமணப்படுகைகளும் இருந்தன.
சீராக வடிவமைப்பட்ட 6 கற்படுகைகளும் காலத்தால் 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்டது . அதை அருகில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட பிற்காலத்தைய சில கற்படுக்கைகளும் பார்க்க முடிகிறது. ஆனால் இதன் வடிவ சீரமைப்பு அதில் இல்லை. ஆங்காங்கே சிறு சிறு குழிகளும் அந்தப் பாறையில் காணப்படுகிறது.
அவர்களின் உணவு தயாரிப்பு, மருந்து தயாரிப்பு போன்ற பிறவற்றிற்கு பயன்படுத்தி இருக்கலாம் மட்டுமின்றி இந்த கற்படுகையினை சமணர்களுக்கு வழங்கியதைக் கூறும் தமிழி கல்வெட்டு பாறையில் காணப்படுகிறது.
அந்த கல்வெட்டு கூறும் செய்தி “வெண்காசிபன் கொடுத்த கல்கஞ்சணம்” என்று தமிழி எழுத்துகளைத் தாங்கி 1200 ஆண்டுகளாகச் சமணர்களின் இருப்பிற்கு மெளனச் சாட்சியமாய் அங்கே நிற்கிறது.
அதன்படி பாண்டிய தளபதி வெண்காசிபன் என்பவனால் சமணர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட கற்படுகைகள் என்று மொழிகிறது.
குகையின் கிழக்கே “சுவாமி அழகிய அம” என்னும் தமிழி கல்வெட்டும் அவ்விடம் உள்ளது. அது முடியுறாத நிலையில் உள்ளது. அந்தக் குகையின் மாடத்தில் மழை நீர் உட்புகா வண்ணம் விளிம்புகள் செறிவாய் காடி அமைக்கப்பட்டுள்ளது
இன்றைய நாளில் தொல்லியல் துறையின் கையில் இருக்கும் அந்த இடம்… சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவது தான் மனம் ஒப்பவில்லை. தமிழின் ஆதிதடங்கள் அழிவின் விளிம்பில் தொக்கி நிற்பது “மெல்லச் சாகும் தமிழ் இனி” என்றே பாரதியின் கூற்று தான் சுற்றியது.
இனியேனும் வளர்வது தமிழாகட்டும் என மனதில் நினைத்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்தோம்.