எங்கள் வீட்டில் எருமைகள் இருந்தவரை சாணத்திற்குப் பஞ்சமில்லை, என் தம்பி பிறந்து சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டோம். எனவே மாட்டுச் சாணத்திற்காக எனது சிற்றப்பா இரவிச்சந்திரன் அவர்கள் வீட்டிற்குத் தான் செல்வோம். நிறைய மாடுகளை அவர்கள் வைத்திருந்தனர்.
சிறுவயதிலிருந்தே எனது தந்தைவழி பாட்டி அசலாம்பாளம்மா வீட்டில் வளர்ந்ததால் மரபுவழி செய்திகள் பலவற்றை அவர்கள் மூலம் அறிந்துகொண்டேன். உணவு சமைப்பதில் அவர்களுக்கு உதவி செய்வதிலிருந்து, உண்டு உட்கார்ந்து பேச பெரும்பாலும் நாங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த சமையல்கட்டைத் தான் பயன்படுத்துவோம். குடிசை வீடு, சிமெண்ட் போட்ட ஓட்டு வீடாக மாறிய பிறகும் சமையல் கட்டில் மட்டும் பழைய முறைப்படி விறகு அடுப்பையே பயன்படுத்தி வந்தோம். அந்த சமையல் கட்டின் நடக்கும் ஒரு முக்கியமான சடங்கு மாதத்திற்கு ஒரு முறையாவது தரைக்கும், அடுப்பிற்கும் சாணம் முழுகப்படும். குறிப்பாகச் சமையல் மேடைக்குச் சிறிது அதிகமாகவே சாணம் பூசப்படும்.
எப்போதுமே சமையல் மேடையில் உள்ள திட்டில் தான் அமர்ந்து பேசுவது வழக்கம். அது மிகவும் உறுதியாக இருக்கும். வீட்டின் வாசலுக்கும் அடிக்கடி சாணம் தெளிக்கப்படும். இந்தக் கதையை நான் எனது வெளிநாட்டு நண்பர்களுக்கு கூறினால், அவர்களுக்குச் சிரிப்பு தான் வரும். “என்னது மாட்டுக் கழிவுகளை வீடு முழுக்க பூசுகிறீர்களா.?” என்னக் கூறிவிட்டுக் கண்டிப்பாக ஒருமாதிரியாகப் பார்க்கத்தான் செய்வார்கள்.
நம்மவர்களைக் கேட்டால், மாட்டுச் சாணத்தில் நோய்க்கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினி உள்ளது என்று கூறுவர். ஆனால் அவ்வாறு ஏதும் இருப்பதாக ஆய்வு முடிவுகள் இல்லை. நல்ல பாக்டீரியா இருபதால் நோய்தரும் பூஞ்சைகள் வளராது.
சரி, ஏன் மாட்டுச் சாணியை நாம் நம் வாழும் வீட்டின் படுக்கையறை முதல் சமையலறை வரை பூசினோம்?. ஒரு உயிரினத்தின் கழிவு எப்படி நமது வீடு கட்டுமானத்திற்குள் வந்தது. அந்த அளவு நமது முன்னோர்கள் கழிவுகளைப் போய் பயன்படுத்தும் முட்டாள்களாக இருந்தனரா?
கண்டிப்பாக இல்லை. முதலில் மாட்டுச் சாணத்தை நமது வீடுகளில் பயன்படுத்துவதன் நோக்கம் விவசாய குடிகள் இடையே ஏற்படும் விலங்கிற்கும் மனிதனுக்கும் இடையேயான நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும், “நோய் எதிர்ப்புத் திறனை” வளர்க்கும். ஆனால் வேறு விதமான புதிய நோய்களுக்கு ஏதும், இது கிருமி நாசினியாகச் செயல்பட வாய்ப்பில்லை.
பாஸ்டுரைசேஷன் எனப்படும் பாலினை நன்கு காய்ச்சி கிருமி நீக்கம் செய்யும் முறை கண்டுபிடிக்கும் வரை பலருக்குக் காசநோய் இருந்தது. மாடுகளிலிருந்து பெறப்படும் பால் ஒருவகை காசநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது. ஆம் இந்த காசநோய் நமக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கால்நடைகள் ஆகும். ஆனால் வெகு நாட்களாக நாம் மாடுகளுடனேயே வாழ்வதால் இந்தியர்களுக்கு ஓரளவு இந்த நோய்க்கு எதிர்ப்புத்திறன் உள்ளது.
சரி வீடுகளுக்கு ஏன் சாணத்தைப் பயன்படுத்தினோம்? அதனால் என்ன பயன்.
மனிதன் முதன் முதலில் ஆடுகளைத்தான் வீட்டு விலங்காக மாற்றினான் எனவும் பின்னாளில் தான் மாட்டினை பழக்கப்படுத்தியிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த பழக்கப்படுதல் அனட்டோலியா மற்றும் சிந்துப் பகுதிகளில் இருவேறு காலங்களில் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆதிகாலத்தில் விவசாயத்திற்கும் மாடு வளர்ப்பிற்கும் எவ்வித தொடர்பும் இன்றி காணப்பட்டது. கடந்த பதிவுகளில் கூறியது போல அன்றைய விவசாயம் முழுக்க முழுக்க ஒரே இடத்தில் நடக்காமல் இடம்விட்டு மாறிக் கொண்டே இருந்தது. அதாவது நாடோடி விவசாய முறை எனக் கூறலாம். அதேபோல ஆயர்கள் கால்நடைகளையும் ஒரே இடத்தில் அடைத்து வளர்க்கவில்லை, மழை சென்ற பாதையை நோக்கியே தம் கால்நடைகளை வழி நடத்தினர். இரண்டும் வெவ்வேறு இனக்குழுக்களாகச் செயல்பட்டுவந்தனர். எனவே ஆதிகால விவசாய முறைக்கு, மாட்டுச்சாணமும், மாட்டிலிருந்து, கிடைக்கும் எவ்வித பொருளும் விவசாயத்திற்கு நேரடியாகப் பயன்படவில்லை.
இதற்கு நமது நாட்டில் கிடைக்கும் சாம்பல் மேடுகளை முக்கிய சாட்சியாக விளங்குகின்றன. போனக் கட்டுரையில் கூறியது போலக் கால்நடை வளர்ப்பதால், கழிவை நோக்கி வரும் ஈக்களால் பல கொள்ளை நோய்கள் அந்தக்காலத்தில் ஏற்பட்டது. அதனைத் தடுக்கவே இவர்கள் இந்த மாட்டுச் சாணத்தை ஒரே இடத்தில் குவித்து அவற்றை எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதுவே சாம்பல் மேடுகளாகக் காட்சியளிக்கின்றன.
பின்னாளில் கிடைப் போடும் பழக்கம் ஏற்பட்டு விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் இடையேயான தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இன்றும் ஆடு மேய்த்து வரும் குழுக்கள் ஒரு ஊருக்குச் சென்று ஒரு நிலத்தில் கிடைபோடுவார். அவ்வாறு அந்த நிலத்தில் கிடை போடுவதற்கு அந்த நில உரிமையாளர் அவர்களுக்குக் காசு அளிப்பார். இவ்வாறு செய்வதால் அந்த கால்நடைகளிலிருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கை உரமாக மாறுகிறது. இது நிலத்தைச் சுழற்சிமுறையில் மீண்டும் வளப்படுத்தி விவசாயம் ஒரு நிலையான பகுதியில் உருவாகக் காரணமாக அமைந்தது.
இவ்வாறு கிடை போடுவதால் நிலம் வளமடையும், அதே நேரத்தில், நிலமானது இறுக்கமடையும். இதற்கு முக்கியமான காரணம், கால்நடைகள் உண்ணும் உணவில் உள்ள அதிகப்படியான Plant fibres எனப்படும் தாவர நார்களாகும். கால்நடைகள் உண்ணும் உணவிலிருந்து அதிகப்படியான நார்ச்சத்துக்கள் (Micro-Fibers) சானத்தின் வழியாக வெளியேறுகின்றது. மண்ணை இறுக்கமடையச் செய்கின்றது.
இந்த நார்ச்சத்துள்ள சாணத்தைத் தான் நாம் களி மண்ணோடு இணைத்துச் சுடப்படாத செங்கற்களை உருவாக்கினோம். சாணம் கலப்பதால் ஈரப்பதத்தை எளிதில் வெளியேறுவது குறைந்து, மீள் தன்மை ஏற்பட்டு, சுடப்படாத செங்கற்களில் வெடிப்புகள் ஏற்படாமல் உறுதியுடன் இருந்தன. இன்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் சாணம் மற்றும் வைக்கோல் செங்கற்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.
ஏன் சாணம் முழுகப்படுகிறது?
நமது வீடுகளில் செங்கல் சுவர் எழுப்பியபிறகு வண்ணம் பூசுவதற்கு முன்பாக சிமெண்டினால் பூசப்பட்டு, அதன்பிறகு சுண்ணாம்பும் கொண்டு பட்டிப் பார்க்கப்படும். இதற்கு முக்கிய காரணம் செங்கற்கள் வெளியே தெரியும் (Exposed Brick) கட்டிடங்களில் ஆயுட்காலம் மிகக்குறைவு. மழை மற்றும் சுற்றுப்புற வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்பட்டு சுவர்கள் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது.
இதனால் பிளாஸ்டரிங் (மேற்பூச்சு) செய்வதால் சுவர்களின் மீது இருக்கமான போர்வை படலம் உருவாகி சுவர்கள் மேலும் பலமடைகின்றன. அதுமட்டுமல்லாமல் செங்கற்களும், சிமென்ட் (அ) களிமண்ணும் மழையால் கரைந்துவிடாமலும் வெப்பத்தைத் தடுப்பதிலும் இவை ஒரு தடுப்பு அரண் போலச் செயல்படுகின்றது. இதற்காகவே, நாம் சுவர்களுக்கு பிளாஸ்டரிங் செய்கின்றோம்.
இந்த இரண்டு வேலைகளையும், மாட்டுச்சாணம் செய்கிறது. ஆம் மாட்டுச்சாணத்தில் உள்ள அதிகப்படியான குறு-நார்கள் சுவர்களைப் பலப்படுத்தி சுவர்களில் பூசப்படும் களிமண் எளிதில் உதிரா வண்ணம் வலை போலத் தடுக்கிறது. மேலும் சுவர்களுக்கு ஒரு வழுவழுப்பான தன்மையைக் கொடுத்து அதன் மீது வண்ணங்களைப் பூசி அழகுபடுத்தவும் உதவியது. இதே போலத் தான் வாசல் தெளிக்கவும், தரைகளை முழுகவும் சாணத்தைப் பயன்படுத்தினால் சாணத்திலுள்ள குறு இழைகள் வீட்டின் உள்ளும், வாசலிலும் மண்ணுடன் கலந்து உறுதியானதாகத் தரையாக மாறும். மேலும் இதனைக் கொண்டு தரை மற்றும் சுவரை உருவாக்குதல் சிறந்த வெப்பம் தடுப்பானாகச் செயல்பட்டு குளிரையும், வெப்பத்தையும் வீட்டினுள் பராமரிக்கின்றது.
இன்று நம் உறுதியான பொருட்கள் என நம்பப்படும் கார்பன் ஃபைபர் மற்றும் கிளாஸ் பைபர் போன்றவை இதே மாதிரியான தொழில்நுட்பத்தில் தான் உருவாகியுள்ளன.
இது எப்போது தோன்றியிருக்கும்?
கால்நடை மேய்ச்சல் இனக் குழுக்கள், நாடோடி வாழ்க்கை வாழ்ந்ததால் சுவர்களை எழுப்பி வீடு கட்ட தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை. எனவே தான் அவர்கள் கழிவுகளை எரித்துவிட்டனர். இதுவே நமக்குச் சாம்பல் மேடுகளாக தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கின்றன. ஓரிடத்தில் நிலையான விவசாயம் ஏற்பட்ட பிறகு அந்த விளைபொருட்களைச் சேமித்து வைக்க உறுதியான கட்டிடங்கள் தேவைப்பட்டது. இதுவே விவசாயக் குடிகள் இடையேக் கட்டிட அமைப்புகள் உருவாகக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
வீடு கட்டுவதற்கு ஏன் மாட்டுச்சாணம் மட்டும் பயன்பட்டது? ஏன் மற்ற விலங்குகளில் சாணத்தைப் பயன்படுத்தவில்லை.
முதல் காரணம் மாட்டுச் சாணத்தில் அதிக அளவு குறு நார்ச்சத்து (Micro-Fiber) இருந்தது என்பதைப் பார்த்தோம். சாணத்தில் உள்ள நார்கள் மற்ற கட்டுமானப் பொருட்களை இணைக்கும், இணைப்பு பொருளாக செயல்படுகிறது. இரண்டாவது காரணம் மாட்டுச்சாணம், அதிக அளவில் கிடைத்தது. மூன்றாவது மிக முக்கிய காரணம் மனிதன் கால்நடைகளோடு மிக நீண்ட காலம் பழகியதால் அவற்றின் மூலம் மனிதனுக்குக் கிருமிகள் பரவினாலும் அதனால் ஏற்படும் நோயிலிருந்து விடுபட அவனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. ஆனால், அவனோடு பழகாத மற்ற விலங்குகளின் சாணத்தைப் பயன்படுத்தினால் கண்டிப்பாக, கோரோனா போல புதிய நோய் ஏற்பட்டு அவன் இறக்க நேரிடும்.
நம் முன்னோர்கள் அந்த கால வாழ்க்கை முறையை அதன் தன்மையை உணர்ந்து சிறப்பாக வாழ்ந்ததன் சாட்சியாகத் தான் நாம் இன்று இருக்கின்றோம். கொள்கைகளையோ, கட்சிக் கொடிகளையோ கையில் ஏந்திக் கொண்டு, முன்னோர்களைப் போற்றவும் தேவையில்லை, தூற்றவும் தேவையில்லை. நன்மையோ, தீமையோ அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையைப் பற்றி அறிவதன் மூலம் மனித வாழ்வின் அடிப்படை மற்றும் மனிதனின் பரிணாமத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்வது பலவகையில் நமக்கு உதவும்.
“முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை.”
இன்று முகநூலில் அதிகம் பேசப்பட்டு வரும் தலைப்பு, இதுவாகத்தான் இருக்கும். ஒரே புவி நிலப்பரப்பில் வாழும் மக்களின் கலாச்சாரம், ஓரளவு தொடர்புடையதாக இருக்கும். அவர்களின் வாழ்வியல் நெறி முறையும் ஒன்று போல இருப்பதில் வியப்பேதுமில்லை.
சூழலில் ஏற்படும் மாற்றங்கள் தனி மனிதனின் அன்றாட தேவைகள் மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவனது வாழ்வு நெறிமுறைகளைச் சற்று மாற்றி, குடும்ப அளவில் அந்த மாற்றங்கள் துவங்கி சமூகம், சமயம் மற்றும் நாடு எனத் தொடர்கின்றன.
மனிதனின் உணவு பழக்கவழக்கமும், இருப்பிட அமைப்பும் அவன் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றம் பெற்று வந்தன. மேலும் இந்த மாற்றங்களும் மரபுவழி பண்பாடுகளும் அந்தந்த காலத்திற்கு அந்த சூழ்நிலைக்கு மட்டுமே உரியவை. சில தற்காலத்தில் பயனற்று போகலாம்.
இன்று பல சமயங்களில் சடங்குகளாகச் செய்யப்படும் சில விஷயங்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளன. அவற்றை இந்த காலத்தில் வாழும் மனிதன் பின்பற்ற முடியாததாலும், தொடர்புகளை விட்டு விட்டதாலும் இன்று அவை வெறும் சடங்கு என்றளவில் மட்டுமே வலம் வருகின்றன.
#வந்தேறி_மனிதன்
http://www.veterinaryworld.org/Vol.3/September/A%20study%20on%20the%20prevalence%20of%20Bovine%20Tuberculosis%20in%20farmed%20dairy%20cattle%20in%20Himachal%20Pradesh.pdf
https://english.mathrubhumi.com/news/columns/faunaforum/coronavirus-fear-shields-threat-of-bovine-tuberculosis-1.4666486
https://bmcpublichealth.biomedcentral.com/articles/10.1186/s12889-019-6634-3
http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/ridges.htm
https://scialert.net/fulltext/?doi=tasr.2014.406.424
https://hal.archives-ouvertes.fr/hal-01876848/document
https://www.semanticscholar.org/paper/Effect-of-Cow’s-Dung-on-Thermophysical-of-Building-Mahamat-Hamid/e7ec6d3596f9a99cebf6be8c60dd88e9096a7b8a