முத்தரையர் என்ற பழம்பெரும் சமூகத்தின் தொடக்கக் காலம் முதல் இன்று வரை, பல்வேறு ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ளது, முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு எனும் இந்நுால்.
முத்தரையர் என்பதற்கு சேர, சோழ, பாண்டியரை அடக்கி, ஓர் கொடையின் கீழ் ஆண்ட அரசர் முத்தரையர் என்றும், மூன்று + தரையர் = முத்தரையர் என்றும் விளக்கம் கூறுவர்.
நுாலின் முகப்பிலேயே, இந்த நுால் எந்த சமுதாயத்திற்கும் எதிராக எழுந்த நுாலல்ல என, ஆசிரியர் முன்மொழிந்துள்ளமை, அவரது நுால் எழுதும் முயற்சியின் பயனை தெளிவாக எடுத்துரைக்கிறது.
முத்தரையர் என்பவர், வன்னியகுல சத்திரியர்களாவர். இதை, பழநி செப்பேடும், கோவை செப்பேடும் வலியுறுத்திக் கூறுகின்றன என்பதை நிறுவியிருக்கிறார் ஆசிரியர்.
மேலும் இந்நுாலில், பல்லவர் பெயரிலான முத்தரையர், முத்தரையரின் தமிழ்ப் பற்று, முத்தரையர் பற்றிய பிற நுால்கள், பட்டங்கள், விருதுகள் உள்ளிட்ட செய்திகள், வாசகனுக்கு வியப்பூட்டும் வகையில் அளிக்கப்பட்டு உள்ளன.
சிகரத்தின் உச்சம் தொட்ட முத்தரைய அரசர்கள் எனும் தலைப்பில், கரிகால் சோழப் பேரரசன், கரிகால் பெருவளத்தான், கிள்ளி வளவன், கோச்செங்கண்ணன், சாத்தன் முத்தரையன், காடக முத்தரையன் என, முத்தரையர் இன அரசர்களைப் பற்றியும், அவரவர்களது அரசாட்சி, புகழ் உள்ளிட்டவற்றையும் அதற்கான சான்றாதாரங்களை தந்து விளக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
முத்தரையர் பற்றிய வரலாற்று செய்திகளை கால வரிசையில், நிரல்படுத்தி கூற எழுந்துள்ள இந்நுால், அதன் நோக்கத்தில் முழு வெற்றி பெற்றுள்ளது எனக்கூறின் மிகையல்ல.
– மாணிக்கம் ஆதி